தி.மு.க.,விலும் ஒரு ஷிண்டே உதயமாவார்: மாஜி அமைச்சர் சண்முகம் கணிப்பு
திருக்கோவிலுார் : ''அ.தி.மு.க., அலுவலகத்தை பூட்டிய அதே தாசில்தாரை அழைத்து வந்து அறிவாலயத்தை மூடுவோம்'' என, முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரில் நடந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 106வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிடம் என்ற ஆட்சியை அமைக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., இன்று திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் திராவிடத்தை பற்றி பேசுகின்றனர்.அ.தி.மு.க., எப்போதெல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறதோ அப்போது அடுத்து வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது தான் வரலாறு. அ.தி.மு.க.,வை அழிக்க தி.மு.க., அல்ல வேறு யாராலும் முடியாது. பன்னீர்செல்வம், தி.மு.க.,வின் அடியாள். ஏற்கனவே சின்னத்தை முடக்கியவர். மீண்டும் சின்னத்தை முடக்க, பன்னீர்செல்வத்தை தி.மு.க., தன் கையாளாக பயன்படுத்துகிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கூடவே இருந்து கட்சியை உடைத்ததை போல் தி.மு.க., விலும் ஒரு ஷிண்டே உதயமாவார். அது கனிமொழியாகவும் இருக்கலாம், துரைமுருகனாகவும் இருக்கலாம்.
தமிழ்நாட்டில் பா.ஜ., வை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் டெல்லியில் பிச்சை எடுக்கிறார்கள். கனிமொழிக்கு இரண்டு முக்கிய பதவிகள், சிவாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு என்ற முக்கிய பதவி தரப்படுகிறது. அப்படி என்றால் தி.மு.க., வுக்குள்ளேயே இன்னொரு தி.மு.க., உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.
தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., - ஜெ.,வின் ஆட்சி பழனிசாமி தலைமையில் அமையும். அன்று ஜெ.,வை போல், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.உங்கள் கட்சியை உடைத்து, எங்கள் அலுவலகத்தை பூட்டிய அதே தாசில்தாரை கூட்டி வந்து, அதே ஏரியாவில் போஸ்டிங் போட்டு, ரிட்டையர்டு ஆகி இருந்தாலும், அழைத்து வந்து சிறப்பு அனுமதி கொடுத்து, அவரது கையாலேயே அறிவாலயத்தை மூடவில்லை என்றால் பாருங்கள். அ.தி.மு.க.,வை அழித்து விடலாம் என நினைக்க வேண்டாம்.
இன்றைய தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்ந்து விட்டது. இதனை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!