ADVERTISEMENT
திருமங்கலம், ஜன.25-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போலீஸ் சீருடையில் வந்து மாணவனிடம் அலைபேசியை பறித்துச் சென்ற 'போலி' போலீசை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே கீழஉரப்பனுாரை சேர்ந்த பிரபுவின் மகன் திருமங்கலம் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு போட்டோ நகல் எடுக்க டூவீலரில் வந்தார். போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார்.
''சிறுவனான நீ எப்படி டூவீலர் ஓட்டலாம். உனது டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டுகளை எடு. உனது பெற்றோரிடம் பேச வேண்டும்'' எனக் கூறியவர், மாணவரிடம் இருந்த அலைபேசியை பறித்தார். ''டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக் கொள்'' எனக்கூறிச் சென்றார். அம்மாணவன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் டவுன் ஸ்டேஷனில் விசாரித்த போது, 'போலீசார் யாரும் அவ்வாறு அலைபேசி பறிப்பில் ஈடுபடவில்லை' என்றனர். தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.
நேற்று அதிகாலை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சீருடையில் வந்த திருப்பத்துார் மாவட்டம் ஏரிக்குடியை சேர்ந்த ஜெயசீலன் மகன் விக்னேஸ்வரனை 24, நிறுத்தினர். விசாரித்து சோதனையிட்டதில் அவர் 'போலி போலீஸ்' என்பதும், சீருடையில் வந்து மாணவனிடம் அலைபேசியை பறித்தவர் என்பதும், பல மாவட்டங்களில் இதுபோல குற்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அலைபேசி, டூவீலர், போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!