மத்திய அரசு வழங்கும் நிதியை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர் சபாநாயகர் செல்வம் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக சபாநாயகர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அதிகாரிகளிடம் 90 சதவீதம் பேர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். சில அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர்கள் மீது வரும் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அனுமதியோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்சக்தி திட்டத்தில் மத்திய அரசு ரூ. 33 கோடி நிதியை புதுச்சேரிக்கு ஒதுக்கியது. இதில் ஒரு கோடியை மட்டும் செலவு செய்துவிட்டு, மீதி தொகையை திருப்பி அனுப்பியுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் ஊரக வளர்ச்சி முகமையில் பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரியில் இதற்கான பணிகள் நடக்காமல் இருந்தது. ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை மாற்றிய பின், தற்போது ரூ. 48 கோடியில் 126 கி.மீ., தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் 108 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால், 10 கிராம பஞ்சாயத்து இருப்பது போல மத்திய அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். இந்த கிராமங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையெல்லாம் திருத்தியமைத்து வருகிறோம். இதற்கு எல்லாம் தலைமை செயலர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
புதிய சட்டசபை கட்டடம் ரூ. 350 கோடியில் கட்டடப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு முழு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக திருத்திய மதிப்பீட்டில் ரூ. 10 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.அரசின் திட்ட பணிகளுக்கான செலவுகளுக்கு சான்றிதழ் வழங்காததால் புதிதாக நிதி பெற முடியாமல் இருந்தது. 2015-16 முதல் 526 கேள்விகளுக்கு தற்போது பதில் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தலைமை கணக்கு அதிகாரி தலைமையில் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 200 கேள்விகளுக்கு பதில் தர வேண்டியுள்ளது. இதை முடிக்கும் போது மத்திய அரசின் நிதி கூடுதலாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!