ADVERTISEMENT
புதுச்சேரி: இன்ஜின் ஆயில் இல்லாமல் பி.ஆர்.டி.சி., பஸ் நடுரோட்டில் நின்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6:40 மணிக்க பிஒய்01-பிவி.5188 பதிவெண் கொண்ட பி.ஆர்.டி.சி., பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
பஸ் காலை 7:15 மணிக்கு மொரட்டாண்டி டோல்கேட் தாண்டி சென்றபோது, இன்ஜினில் ஆயில் இல்லாமல் புளிச்சப்பள்ளம் கிராமத்தில் நடுரோட்டில் நின்றது. பஸ் மேற்கொண்டு நகர முடியாது என்பதால், மாற்று பஸ் வரவழைக்க பி.ஆர்.டி.சி. க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாற்று பஸ் ஏதும் இல்லாததால், பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான பணம் திருப்பி வழங்கப்பட்டது. நடுரோட்டில் நின்றிருந்த பயணிகள் பின்னால் வந்த தமிழக அரசு பஸ்களில் ஏறி சென்னை சென்றனர்.
இதேபோன்ற நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பிஒய்-01-பிவி.5187 பதிவெண் கொண்ட பி.ஆர்.டி.சி., பஸ், இந்திரா சிக்னல் அருகே, ஸ்டேரிங் உடன் இணைக்கப்பட்ட டயர் ராடு எண்டு துண்டாகி நின்றது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
நகரப் பகுதியில் பஸ் மெதுவாக சென்றபோது டயர் ராடு துண்டானதால் உடன் நிறுத்தப்பட்டது. அதுவே, பஸ் புறநகர் பகுதியில் வேகமாக செல்லும் போது டயர் ராடு துண்டாகி இருந்தால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.கடந்த சில தினங்களாக பி.ஆர்.டி.சி. பஸ்கள் வரிசையாக பழுதாகி நடுரோட்டில் நிற்பது தொடர் கதையாகிவிட்டது.
இரவு நேரத்தில் பி.ஆர்.டி.சி. ஒர்க் ஷாப்பில் பஸ்களை மெக்கானிக்குகள் சரிவர பராமரிப்பு செய்யாததும், அதனை அதிகாரிகளும் கண்டும் காணாமல் விடுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் பி.ஆர்.டி.சி. பஸ்சை நம்பி மக்கள் ஏற மாட்டார்கள். இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளாடும் பி.ஆர்.டி.சி. விரைவில் மூடுவிழா நடத்த நேரிடும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!