மதுரை : மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் தமிழ் அறிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
தீரன் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் இடத்தில் பயணிகளிடம் சோதனையிடும்போது ஹிந்தியில் பேசுகின்றனர். இது பயணிகளுக்கு புரிவதில்லை.
மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் பயணிகள் எளிதில் புரிந்து கொள்ள அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் அறிந்த பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலர், சிவில் விமான போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுருகன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: பாதிக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியும். மனுதாரர் தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளதா, இம்மனு நிலைக்கத்தக்கதா என கேள்வி எழுகிறது.
மனுதாரர் தரப்பு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் 2 வாரம் ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (7)
விமானம் மூலமாக பயணம் செய்யும் போது மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் பயணம் செய்ய மாட்டார்கள். ஏறுவது வேண்டுமானால் தமிழ்நாடு என இருக்கலாம், இறங்குவது வேறு மாநிலம் அல்ல நாடாக கூட இருக்கலாம் அந்த நிலையில் மக்கள் பல மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
பிரிவினை வாதத்தின் அடிப்படை இது போன்ற மனுக்கள். அபராதம் செலவு முதலியவற்றுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தேவைப்படும் போது கிடைக்குமாறு ஒவ்வொரு ஷிப்ட்டிலும் குறைந்தபட்சம் லோக்கல் மொழி தெரிந்த ஒருவராவது இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக விமான நிலையங்களில் தமிழக போலீசை நிறுத்திவிடலாம். (கடத்தலுக்கு எளிது?). CISF சோதனையில் மொழி பிரச்சனை எதற்கு? வேறு மாநிலம், நாட்டில் இருந்து வரும்போது விமான பணி பெண்களிடம் என்ன மொழியில் பேசினார்? CISF, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில்? நீதிபதியிடம் முறையிடுவரா? வெளி மாநில பஸ்கள் வரும். அவர்கள் மாநில மொழியில் பேசுவர். தமிழ் பேசு என்றால், கேரளா சென்றால் மலையாளம் பேச வேண்டும். முடியுமா? பொழுது கழிக்கும் பொதுநல வழக்கு.
பாதுகாப்பு வீரர்கள் குழுவில் ஒருவராவது நிசசயம் தமிழும் தெரிந்தவராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. நியாயமான கோரிக்கை