அலங்காநல்லுாரில் அதிரவைத்த ஜல்லிக்கட்டு… மிரளவைத்த காளைகள்
முழு விபரம்:
மதுரை அலங்காநல்லுாரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ், தியாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், நடிகர் சூரி கலந்து கொண்டனர். கலெக்டர் அனீஷ்சேகர் உறுதிமொழி வாசித்தார். காலை 7:24 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் மாடு, வலசை கருப்புசாமி மாடு, அரியசாமி கோயில் மாடுகள் மரியாதைக்காக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 வீரர்கள் களமிறங்கினர். முதல் சுற்றில் காளையர்களை விட காளைகளே பிடிபடாமல் உரிமையாளர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக பெற்றுத் தந்தன.

சிவகங்கை பூவந்தியைச் சேர்ந்த வீரர் அபிசித்தர் தொடர்ந்து காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்ததால் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினார். 3வது சுற்றில் காளையை அடக்கிய போது வலது தொடையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் களத்தில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து நின்றார். 8 வது சுற்றில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகள் மீண்டும் வாடிவாசல் பகுதிக்கு வந்தபோது, வாகனத்தில் ரவுண்ட் அடித்த போலீசார், காளைகளை வெளியேற்றி கொண்டிருந்தனர். அப்போது அபிசித்தர் ஒரு காளையை அடக்கி திரும்பிய போது வாகனத்தில் லேசாக மோதினார். டாக்டர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் அடுத்த சுற்றில் பங்கேற்றார்.
825 காளைகள்,400 வீரர்கள்
பத்து சுற்றுகளில் 825 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். போட்டியை பார்க்க வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, சுந்தர்மோகன் , அரசு வழக்கறிஞர் வீரகதிரவன் ஆகியோர் நின்று பந்தாடிய காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கமோதிரம், ரொக்கம் பரிசாக வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும், மாடுபிடிவீரர்களுக்கும், வாடிவாசலில் அவிழ்க்காத காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி தங்கக்காசு வழங்கினார். போட்டியில் சிறப்பாக களமிறங்கிய வீரர்களுக்கு சைக்கிள், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் பரிசாக வழங்கப்பட்டன. போட்டி முழுவதும் சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக மருத்துவப்பரிசோதனை செய்யப்
பட்டது. ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், முந்தைய சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பனியன் எண்கள் வாசிக்கப்பட்டு தக்கவைக்கப்பட்டனர். வெளியேறாத வீரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நாட்டு மாடு பரிசாக வழங்கப்பட்டது. ஏனாதியைச் சேர்ந்த அஜய் 20 காளைகளை அடக்கி 2ம் இடம், அலங்காநல்லுாரைச் சேர்ந்த ரஞ்சித் 12 காளைகளை அடக்கி 3ம் இடம் பெற்றனர். இருவருக்கும் டூவீலர் பரிசாக வழங்கப்பட்டது.களத்தில் வீரர்களை கண்டு அஞ்சாமல் சுழன்று ஆட்டம் காட்டிய புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளை சிறந்த காளையாக தேர்வானது. அமைச்சர் உதயநிதி சார்பில் அதன் உரிமையாளருக்கு காரும், தி.மு.க., மேற்கு ஒன்றிய குழுத்தலைவர் வீரராகவன் சார்பில் நாட்டுமாடு பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை சுரேஷ் என்பவரின் காளைக்கு 2ம் பரிசாக டூவீலர், உசிலம்பட்டி பாட்டாளி ராஜாவின் காளைக்கு 3ம் பரிசாக டூவீலர் வழங்கப்பட்டது.
கைதட்டி ரசித்த உதயநிதி
அமைச்சர் உதயநிதி, கேலரியில் 2 மணி நேரம் அமர்ந்து கைதட்டி ரசித்தார். சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் என்ற முறையில் துவங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, 'அது குறித்து முதல்வர் அறிவிப்பார்'' என்றார்.
32 போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கியுள்ளேன். அலங்காநல்லுாரில் முதல்முறையாக பங்கேற்றதோடு முதல்பரிசாக கார் வாங்கியது சந்தோஷம். கார், பைக் பரிசைவிட அரசு வேலை கிடைத்தால் பெருமையாக ஏற்றுக் கொள்வோம். அனைத்து வீரர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். வீரர்களுக்கு இன்சூரன்ஸ் அவசியம் வேண்டும்.
அபிசித்தர், பூவந்தி
உசிலம்பட்டி கல்லுாரியில் உடற்கல்வி படிக்கிறேன். முதல் பரிசு தான் இலக்காக இருந்தது. இரண்டாம் பரிசு கிடைத்தது. கையில் அடிபட்டதால் கூடுதலாக மாடுகளை பிடிக்க முடியவில்லை. இதுவரை 15 போட்டியில் பங்கேற்று 8 முறை முதல் பரிசு வாங்கியுள்ளேன். அலங்காநல்லுாரில் இது முதல்முறை.
அஜய், ஏனாதி
*வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரியில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகரித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
*போட்டியில் காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நடராஜகுமார் தலைமையில் 60 கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் இடம் பெற்றனர்.
*தென்மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவசர சிகிச்சைக்காக 160 டாக்டர், நர்ஸ்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் பணியில் இருந்தனர்.
*ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சாமிநாதன், செயல்அலுவலர் ஜூலான் பானு ஏற்பாடுகளை செய்தனர்.
*15 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தன.
*வெற்றி பெற்ற காளைகளுக்கு பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
*பரிசோதனைக்கு வந்த 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
*23 மாடுகளின் உரிமையாளர்கள் மாடு குத்தியதால் காயமடைந்தனர்.
*மாடுபிடி வீரர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
*வெளிநாட்டினர் ரசிக்கும் வகையில் தனியாக பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
*பெண்கள் அழைத்து வந்த காளைகளுக்கு அமைச்சர் மூர்த்தி தங்கக்காசு, மோதிரம் வழங்கினார்.
*பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் வீட்டுக்கு சென்ற அமைச்சர் மூர்த்தி, அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் நிவாரணத் தொகையாக ரூ.3லட்சம் வழங்கினார்.
வாசகர் கருத்து (9)
ஜல்லிக்கட்டில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைய தொடங்கி விட்டது, தமிழர் விளையாட்டிலும் இந்த தெலுங்கு கும்பல் விளம்பரம் தேடும்... என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடையே வந்திருக்கலாம், ஜல்லிக்கட்டு அழிவதற்கு பீட்டா அமைப்பு தேவையில்லை ,இந்த தில்லுமுல்லு கழகம் .போதும்... மாடு பிடி வீரர்கள் அனைத்து காட்சியிலும் இருப்பார்கள் அப்படிருக்கும் போது முதல்வர் படம் போட்ட, கத்துக்குட்டி உதயநிதி படம் போட்ட ஜெர்ஸியை அணிந்து களத்தில் இறங்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்.
தானே மாடுபிடி வீரராக களத்திலிறங்கி முதல் மாட்டைப் பிடித்து நிஜ தளபதியாக திகழலாமே.😇 நாட்டுக்கு நல்லது நடக்கலாம்.
அமைச்சர்களுக்கு வேறு வேலையே ஒன்றுமே இல்லையா?
இதில் சிலர் உயிர் இழப்பை தவிர என்னத்த பெரிதாக கண்டோம்? இறந்து போன குடும்பங்கள் வறுமையில் தவிக்க விட்டதை தவிர இதில் சாதனை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. ஒருவேளை அமைச்சர்கள் மாடுபிடிக்க இறங்குவார்கள் என்றால் அரசுக்கு நிச்சயம் இதில் உடன்பாடு இருக்கும் என்று நம்பலாம். மற்றபடி இது சிலருக்குத்தான் விளையாட்டு மற்றவர்களுக்கு யார் காயம் படுவார்கள் என்று ஆர்வத்தோடு கண்டுகளிப்பதை தவிர ஒரு பயனும் இல்லாத விளையாட்டு.
கிறித்தவர்களுக்கு பொங்கல் கிடையாதே !!!