Advertisement

எனக்குள் கடவுள் வாழ்கிறார்! - வேணுகோபால் நாயுடு - நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர்

உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? - இது 6 வயது ஷ்ரேயா. எனக்கு நாநா தாத்தா தான் பிடிக்கும்! - இது 3 வயது அனன்யா. எனக்கும்தான்! ம்ம்ம்... உனக்கு ஏன் தாத்தாவை பிடிக்கும்? தாத்தாவுக்கு கோபமே வராது! சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க! எனக்கு நிறைய முத்தம் கொடுப்பாங்க! இல்ல நாநா தாத்தா? பேத்திகளின் உரையாடலை அதுவரை கைகட்டி ரசித்துக் கொண்டிருந்த நாநா தாத்தா உணர்ச்சி பெருக... அனன்யாவை அணைத்துக் கொள்கிறார். அவரது அணைப்பில் இருந்து மென்மையக விடுபட்ட அனன்யா. தன் பாசத்தை வெளிப்படுத்தும் அழகிய காட்சி இது.
உறவால் கிடைக்கும் பாசத்தை விட, பாசத்தினால் கிடைக்கும் உறவு உயிர் போன்றது! என்பார்கள். நாநா தாத்தாவான வேணுகோபால் நாயுடுவுக்கு பாசத்தால் கிடைத்த உறவுகள்தான் இந்த பேத்திகள். பாசத்தின் பெயர்? நந்திதா பாலாஜி. அன்பு மகள்.
என்னை சுற்றி இருக்கறவங்களோட சந்தோஷத்துக்கும், சிரிப்புக்கும் இப்போ இருக்கற மாதிரியே எப்பவும் நான் காரணமா இருக்கணும்னு ஆசைப்படறேன்! தி.நகர் வீட்டில் பாசமிகு உறவகள் சூழ, தன் மறுபக்கம் சொல்லத் தொடங்கினார் நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் நாயுடு.

உடுத்தியிருக்கும் உடைகளில் நிறம் மனிதர்களின் குணம் சொல்லும்! சரிதானே?
தூய்மையோட அடையாளம் வெண்மை. வெள்ளை நிற உடைகள்ல சுத்துற அத்தனை பேரும் நல்லவங்க! சுயநல் பார்க்காதவங்க! ஊரார் பணத்தை தன் பணம்னு நினைக்காம, தன் பணத்தை ஊரார் பணம்னு நினைக்கிற தங்க மனசுக்காரங்க! இப்படி உங்களால் உறுதியா சொல்ல முடியும்னா, உங்க கேள்வி சரிதான்! அதே நேரத்துல அத்தனை பேரையும் நல்லவங்க!ன்னு சொல்ல முடியாது. ஆனா வெள்ளை உடையில நல்லவங்களும் இருக்குறாங்க! இப்படி உங்க வார்த்தைகள் இருந்தா, உங்க கேள்வி தப்பு. குணத்தை சொல்றது உடை இல்லைங்க... மனசு! கருப்பு உடையிலே இருக்கற வெள்ளை உள்ளங்களையும் அடிக்கடி நான் சந்தித்திருக்கேன்.

பெண்களோட மனசை புரிஞ்சுக்கிறது சிரமமான காரியமா?
அன்புங்கற அழகான உணர்வை சரியான முறையில பகிர்ந்துக்க கத்துக்கிட்டா, பெண் மனசு என்ன! யார் மனசு வேணுமின்னாலும் புரிஞ்சுக்கலாம். இந்த உலகத்தை புரிஞ்சுக்கிறது எப்படி?ன்னு கத்துக்கொடுத்த ஒரு தாயோட மனசு புரிஞ்சுக்க முடியலை!ன்னு சொல்றது மிகப்பெரிய அபத்தம். என்ன பார்க்கறீங்க! நம்மளை சுத்தி இருக்கற அத்தனை பெண்களுமே தாய்தான். இன்னைக்கு காதலியா, மனைவியா இருக்கற பெண்கள், நாளைக்கு நம்மை குழந்தையா கவனிச்சுக்கப் போற தாய்மார்கள். என்னோட அம்மா ஜெயலட்சுமி, மனைவியா வந்த இன்னொரு தாய் மங்கேஷ்வரி, தாயா இருந்து öன்ø பார்த்துக்குற மகள் நந்திதா... இந்த பெண்களோட மனசு நான் எந்தவித சிரமமுமில்லாம புரிஞ்சுகிட்டேன். இதனாலதான் குடும்பமும், தொழிலும் நல்லா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கறேன்.

காலியாக உள்ள பணியிடத்திற்கு திறமையானவனும், ஏழ்மையானவனும் விண்ணப்பித்தால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்?
நிச்சயமா ஏழ்மையானவனுக்குத்தான். நான் தவிர்த்துட்டாலும், திறமையானவன் எப்படியாவது பிழைச்சுக்குவான். ஆனா இவனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்ஷ சொல்ல முடியாது தவிர, ஏழ்மையானவனை திரமையானவனா மாத்த என்னால முடியும். நான் செய்ற இந்த உதவியினால, அவன் மட்டும் சந்தோஷப்பட போறதில்லை. அவனை சார்ந்திருக்கிற ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷப்படும். இது எல்லாத்தையும் விட... சிரமப்படுகிறவனுக்கு வேலை கொடுத்தா, அந்த வேலையை சிரத்தையோட பார்ப்பான். பார்க்குற வேலைக்கு உண்மையா இருப்பான். ஒருவேளை, எதிர்காலத்துல அவன் என்னை விட்டு வெளியேறினாகூட, அவனுக்கு வேலை கத்துக்கொடுத்தோம்!ங்கற திருப்தி எனக்கு இருக்கும். இந்த மாதிரியான சந்தோஷத்துக்கு ரொம்ப ஆசைப்படற ஆளுங்க நான்!

முதுமை எப்படி இருந்தா அது சந்தோஷம்? உங்க முதுமை எப்படி இருக்கணும்னு ஆசைப்படறீங்க?
மகன் இருக்கறப்போ, கடைசி காலத்துல தன்னை தூக்குறதுக்கு ஆள் இருக்குது!ங்கற நிம்மதி ஒவ்வொரு தகப்பனுக்கும் இருக்கும். எனக்கும் இருந்துச்சு 2004 வரைக்கும்! என் மகன் நவீனோட எதிர்பாராத மரணத்துக்கு அப்புறம் அந்த நிம்மதி போயிடுச்சு. யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத என் வாழ்க்கையில ஏன் இது நடக்கணும்? தவிச்சேன். விதி சிரிச்சுது. நான் மீண்டு வர்றதுக்கு ஒரு வருஷம் ஆச்சு. இன்னைக்கு என் மகனா இருக்கற மருமகனோட, மகளோட, பேத்திகளோட, நாலு பேருக்கு முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கறேன். இழந்த நிம்மதி மறுபடியும் கிடைச்சுட்டதா, மனசுக்குள்ள ஒரு திருப்தி. எனக்கு கிடைச்ச மாதிரி, இழப்புகளை நதங்கிக்கிற பக்குவம் முதுமையில கிடைச்சதுன்னா அது வரம்.

வரலாறு
1939ம் வருடம் எம்.ஜி.நாயுடுவால் துவங்கப்பட்டது நாயுடு ஹால். பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனையில் பிரபலமான இந்நிறுவனம், தற்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான ஆடை ரகங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் 12 கிளைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், லட்சோபலட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனம் தமிழகமெங்கும் கிளைகள் திறப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறத.

மின்னல் கேள்விகள்.... மின்னும் பதில்கள்....

வியாபாரத்தில் உண்மையாக இருப்பது சாத்தியமா?
உருவம் இல்லாத, நேரில் வராத கடவுளிடம் உண்மையாக இருப்பது சாத்தியம் என்றால்... நேரில் வரும், வாழ்வு தரும் வாடிக்கையாளர்களிடம் உண்மையாக இருப்பதும் சாத்தியமே!

நீங்கள் ஜெயித்ததற்கு காரணம்... உழைப்பா? அதிர்ஷ்டமா? உங்களின் ஊழியர்களா?
முதல் காரணம் ஊழியர்கள், இரண்டாவது, அவர்களின் உழைப்பு. மூன்றாவது, அவர்களை என்னிடத்தில் அழைத்து வந்த என் அதிர்ஷ்டம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என சந்தேகப்பட்டதுண்டா?
நல்ல எண்ணங்களும், அந்த எண்ணங்களை உள்ளடக்கிய மனதும்தான் கடவுள். இந்த அடிப்படையில், எனக்குள் இருக்கும் கடவுளை நித்தமும் உணர்வதால், இதுவரை சந்தேகம் வந்ததில்லை.

தொழிலை மாற்றலாம்! எனும் எண்ணம் வந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில்?
மனசு நிறைந்து சொல்லும் வாழ்த்தை விட, வயிறும் நிறைந்து வெளிப்படும் வாழ்த்துக்கு வீரியம் அதிகம்! என நினைக்கிறேன். அதனால் என் விருப்பம் ஹோட்டல் தொழில்.

ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பீர்கள்? காரணம்?
சீதாலட்சுமி. 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என்னுடன் படித்த மாணவி. தன் புத்திசாலித்தனத்தால் வகுப்பையே தன் பக்கம் திருப்பிய அப்பெண்ணின் பெயர்தான் குழந்தைக்கு.

வாழ்வின் உண்மையான சந்தோஷம்?
தாயிடம் பார்த்த பாசமா! மகளிடம் உணர்ந்த அன்பா! இது எந்த ரகம்! என்று புரிந்து கொள்ள முடியாத வகையில், என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் என் பேத்திகளின் உறவு.


- துரைகோபால்

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement