ADVERTISEMENT
சென்னை : தமிழகம் முழுதும், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இன்று (ஜன.,5) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த நவ., 9ல் துவங்கி, டிச.,9ல் நிறைவடைந்தது. ஒரு மாதம் காலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
டிச.,9 வரை, பெயர் சேர்க்க, 10.34 லட்சம்; பெயர் நீக்க, 7.90 லட்சம், திருத்தம் செய்ய, 4.79 லட்சம் என மொத்தம், 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி, இன்று காலை, 10:00 மணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள், சென்னையில் மாநகராட்சி கமிஷனர், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
தமிழகம் முழுவதிற்குமான வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.15 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,027 பேரும் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் 3,310 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 60 சதவீத வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!