கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. ஆனாலும், அ.தி.மு.க., மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.
கிண்டல்
அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளதால், அக்கட்சியுடனான கூட்டணி, 2024 லோக்சபா தேர்தலில் வெற்றியை தராது என நினைக்கும் பா.ம.க., தலைமை, தி.மு.க., பக்கம் சேர முயற்சித்து வருகிறது. ஆனால், அங்கிருந்து எந்த செய்தியும் வராததால், அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளையும் விமர்சிக்காமல், பக்குவமாக பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் அறிக்கை விட்டு வருகின்றனர்.
கடும் சொற்கள்
இதனால் கொதித்துப் போன பழனிசாமி தரப்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாயிலாக, அன்புமணிக்கு பதிலடி தர வைத்தது. '1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் பா.ம.க., வென்றது. அதனால் தான் அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைத்தது.'இப்போதும் அ.தி.மு.க., தயவில் தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, நன்றி மறந்து விட்டு பேசுவது நல்லதல்ல' என, கடும் சொற்களால் விமர்சித்தார்.
இதனால் கோபம் அடைந்த பா.ம.க., தலைமை, அ.தி.மு.க.,வுக்கு பதிலடி தருவதற்காகவே, சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது.
அதில், பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு அளித்த பேட்டி: அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, சிறு குழந்தைக்குகூட தெரியும். அந்த உண்மையை தான், புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணி பேசினார். தி.மு.க., அரசு மீது விமர்சனங்கள் வருகிறது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். இதற்காக பா.ம.க.,வை தேவையில்லாமல் விமர்சித்திருக்கிறார் ஜெயகுமார். 2019 லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது செய்த உடன்படிக்கைபடி தான், பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டது. அதற்கு அன்புமணியை தேர்வு செய்தது, பா.ம.க., தலைமை தானே தவிர, அ.தி.மு.க., அல்ல.
கடந்த 1996 சட்டசபை தேர்தலுக்கு பின் பலவீனமடைந்திருந்த அ.தி.மு.க., 1998 லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைத்தது. அப்போதும், 2001 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க.,வே உயிர் கொடுத்தது. ஜெயலலிதாவே பா.ம.க., அலுவலகம் தேடி வந்தார். 2019 லோக்சபா தேர்தலோடு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களில் வென்று, அ.தி.மு.க., ஆட்சியை தொடர, பா.ம.க.,வே காரணமாக இருந்தது.நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டக் கூடாது. ஜெயகுமாரின் கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கிறோம். ஆனாலும், இதுகுறித்து அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். கூட்டணி குறித்து தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் பா.ம.க., முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
இரு கட்சிகள் இடையே வெடித்துள்ள இந்த திடீர் மோதல், எங்கே போய் முடியும் என தெரியவில்லை. கூட்டணியில் இருந்து பிரியும் வகையில், பா.ம.க., திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம் என்றே, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொதுக்குழுவில் அ.தி.மு.க., குறித்து திட்டமிட்டே அன்புமணி பேசியதாக கருதியே, அதற்கு பதில் என்ற பெயரில் அ.தி.மு.க.,வின் ஜெயகுமார், பா.ம.க.,வை சூடாக விமர்சித்திருக்கிறார். இதன் காரணமாக, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (20)
இப்போது மறுபடியும் அதே இரண்டு வெட்கமில்லாத, சொரணையில்லாத கூட்டம் ஒன்றை ஒன்று வசைபாட தொடங்கியுள்ளது...
அதிமுகவிற்கு தன்மானம் உள்ளதால் அன்புமணி பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் உள்ளதால் கூட்டணியை விரிவு படுத்துகிறார்கள் .திமுகவிற்கு எதிராக அதிமுக நடத்தும் போராட்டங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. நீங்கள் சொல்வது ஒன்று மட்டும் உண்மை. தமிழக ஊடகங்கள் திமுக சார்பு உடையவை. திமுகவை என்றும் அதிமுக தான் வெற்றி கொள்ள முடியும். உதிரி காட்சிகள் அல்ல .மத்திய அரசு நினைத்தால் திமுக மெகா ஊழல்களை வெளி கொண்டு வர முடியும் .அதை செய்ய சொல்லுங்கள் .சேகர் நீங்கள் நல்ல கருது எழுதுபவர்கள் .அதிமுக அழிவதால் இன்னொரு கட்சியை வளர்க்க முடியாது. அதை ஒரு கட்சி இன் தகவல் தொழில் நுட்ப பிரிவு புரிந்து கொள்ள வேண்டும் .
அதிமுக பாமக கூட்டணி உடைந்தால் அந்த இரண்டு கட்சியினரை விட பாஜகவுக்கு தான் நஷ்டம் அதிகம். அதனால் பாஜகவினர் தான் அதிகம் கவலைப் படுகிறார்கள்!
இரண்டு சூட்கேசை மாற்றி விட்டால் போதும் என்ன கட்ட பஞ்சாயத் தலைவருக்கு திண்டாட்டம்.
வடக்கே உள்ள முதலாளி சொன்னால் அப்படியே கேட்டுக்கொண்டு அடங்கிப்போகும் அடிமைக்கூட்டம்.