கவுன்டருக்கு திரும்பி விஷயத்தை சொல்லி டிக்கெட்களை நீட்டினார். வாங்கி பார்த்த அம்மணி அர்ச்சனை டிக்கெட்டுக்கு பதிலாக தரிசன டிக்கெட்டை சேர்த்து மூன்றையும் இளம் பெண்ணிடம் கொடுத்தார். அவரும் வாங்கி கொண்டு பெற்றோரை நோக்கி நடந்தார். நம்மில் யாருக்காவது இப்படி நடந்து இருந்தால், கதை இதோடு முடிந்து இருக்கும்.
பெண்ணின் தந்தை சாமானியர் இல்லை. பெரிய பதவி வகிப்பவர். தரிசனம் முடிந்ததும், கோயில் நிர்வாக அதிகாரியின் அறைக்கு சென்றார். 'அதிகாரி எங்கே' என, கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டு இருந்தவர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்கள் யார் என கேட்டிருக்கிறார்.
அடுத்த அறையில், 2 பேர் இருப்பதை பார்த்து அங்கே சென்றிருக்கிறார். நிர்வாக அதிகாரியின் போன் நம்பரை கேட்டதற்கு, 'என்ன விஷயம்' என ஒருவர் கேட்டிருக்கிறார். 'கவுன்டரில் முறைகேடு நடக்கிறது; அது பற்றி புகார் சொல்ல நிர்வாக அதிகாரி அல்லது ஆணையர் அல்லது அவரது பி.ஏ., நம்பர் வேண்டும்' என இவர் கேட்டிருக்கிறார்.
'முறைகேடு எதுவும் நடக்கவில்லை; நம்பர் கொடுக்க எங்களால் இயலாது' என்று இருவரும் மறுத்து விட்டார்களாம். இவர் உடனே தான் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிக்கு போன் போட்டு, போலீசை வரச்சொல்லி இருக்கிறார். அப்போது தான் அவர் யார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
2 ஊழியர்கள் சஸ்பெண்ட்:
ஆனால், போலீஸ் முன்னிலையில் கேட்டும் கோயில் ஊழியர்கள் மேலதிகாரிகளின் நம்பரை தரவில்லையாம். 'புகார் இருந்தால் கொடுத்து விட்டு போக சொல்லுங்கள்' என நிர்வாக அதிகாரி கூறியதாக ஒரு ஊழியர் இவரிடம் கூறியுள்ளார். கோயிலை விட்டு வெளியேறியவர் 5 ஊழியர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை எழுதி, சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதன் அடிப்படையில், 2 பேர் அறநிலைய துறையால் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் எந்த நிமிடமும் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
'ஊழியர்கள் மரியாதை இன்றி பேசினர். திமிராக நடந்து கொண்டனர். கோயிலில் நிதி முறைகேடு நடக்கிறது. அதுகுறித்து புகார் கொடுக்க விடாமல் என்னை தடுத்தனர். கெரோ செய்தனர். போலீஸ் வராமல் இருந்தால் எங்களை வெளியே தள்ளி இருப்பார்கள்...' இவை அவருடைய குற்றச்சாட்டுகளில் சில...
கோயில் ஊழியர்களிடம் ஊடகர்கள் விசாரித்தபோது, முக்கிய பிரமுகரின் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். ஆனால் எவரும் பேட்டி கொடுக்கவோ, பெயரை பகிரங்கப்படுத்தவோ தயாராக இல்லை. அரசாங்கத்துக்கே ஆணையிடும் அதிகாரத்தில் உள்ளவருக்கு எதிராக பாவப்பட்ட கோயில் ஊழியர்கள் எப்படி பேச முடியும்? என்று முகத்தை மறைக்கிறார்கள்.
'சிசிடிவி' பதிவும், கேள்விகளும்:
கோயிலின் 'சிசிடிவி' பதிவுகளை பார்க்கும்போது முக்கிய பிரமுகர் கொடுத்த புகார் மனு தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. 'நாங்கள்' பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினோம். தவறை கண்டுபிடித்து ஊழியரிடம் 'நாங்கள்' கேட்டோம். மேலும் மூன்று, நான்கு பேருக்கு 50 ரூபாய் டிக்கெட்டுக்கு பதிலாக 5 ரூபாய் டிக்கெட் கொடுப்பதை 'நாங்கள்' பார்த்தோம்...' என அவர் கூறுகிறார். ஆனால், வீடியோவில் அவர்களது மகள் மட்டுமே கவுன்டருக்கு வருவதும், போவதும் தெரிகிறது. பிரமுகரும் மனைவியும் 20 அடி தூரத்துக்கு அப் பால் நிற்கிறார்கள். கவுன்டர் பக்கம் வரவே இல்லை.
'புகார் கொடுப்பதற்காக ஒவ்வொரு அதிகாரியின் போன் நம்பராக கேட்டோம்; ஊழியர்கள் தர மறுத்து விட்டனர்' என்கிறார். ஆனால், கவுன்டரில் தரப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலும், 'Help Desk No.,' என்று குறிப்பிட்டு ஒரு டெலிபோன் நம்பர் அச்சிடப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வசதியாகத்தான் அந்த நம்பர் தரப்பட்டுள்ளது என்பது எதார்த்தம். எனவே யாரிடமும் நம்பர் கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை.
'வி.ஐ.பி.,' என்ற பந்தாவில் தரிசனம் செய்ய விரும்பவில்லை என்பதால், பதவியை சொல்லாமல் சாதாரண குடிமக்கள் போல டிக்கெட் வாங்கி சென்றதாக அவர் சொல்கிறார். ஆனால், தரிசனம் முடிந்த பிறகு புகார் சொல்வதற்காக நிர்வாக அதிகாரியின் அறைக்குள் நுழைந்த பிறகும், ஊழியர்கள் நீங்கள் யார்? என கேட்ட பிறகும், தான் யார் என்பதை சொல்லாமல் தவிர்க்க முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
பல பேர் வந்து செல்லும் பொது இடத்தில் அவரை பாதிக்கும் விதமாக ஒரு விபத்தோ அசம்பாவிதமோ நிகழ்ந்திருந்தால் எத்தனை பேர் கூண்டில் ஏற வேண்டியிருக்கும் என்பதை அறியாதவர் அல்ல அவர். கோயிலில் நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் ஊழியர்கள் அதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அவர் சொல்கிறார். ஆனால், கோயிலின் கணக்கு வழக்குகளை வாங்கி தரவுகளை பார்வையிட்டாரா என்ற தகவல் இல்லை.
ஒரே மாதிரியான வடிவமைப்பில் பெயரும் கட்டணமும் மட்டும் மாறுபட்ட இரண்டு வகை கையடக்கமான டிக்கெட்டுகளை கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுத்து மேஜையில் அருகருகே வைக்கும்போது, அவை சுருண்டு கொள்வ தும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவ தும் பல இடங்களில் வாடிக்கையாக நடப்பது என்ற போதிலும், அவ்வாறான ஒரே ஒரு டிக்கெட் மாறுதலின் அடிப்படையில் ஒட்டுமொத்தமான நிதி முறைகேடு நடப்பதாக உடனடி முடிவுக்கு வருவது எவ்வாறு சாத்தியம்?
இயற்கை நீதிக்கு முரணானது:
'தவறு நடந்தது... முறைகேடு புரிந்தனர்...' என வாதத்துக்காக வைத்துக் கொண்டால் கூட, முறையான விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்படும் நபர்களின் தரப்பு பதில் என்ன என்பதை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் முடிவு எடுத்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும். இது தான் இயற்கை நீதி மற்றும் முறையான நீதி வழங்கல் என்பது, சட்டம் படிக்காதவர்களுக்கும் தெரிந்திருக்கிற இன்றைய சூழலில் இது போன்ற மின்னல் வேக தண்டனை என்பது பொதுமக்களின் நம்பிக்கை என்கிற அஸ்திவாரத்தையே குலுக்கி விடாதா?
உயர்ந்த பதவியில் இருப்பவர்களை தெய்வத்துக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றும் மக்கள் வாழும் நாடு இது. ஆகவே தான், இங்கே உயர் பொறுப்பில் பணியாற்றிய பலரும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்... காட்டுகிறார்கள். பிறரை தண்டிக்கும் அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மனிதாபிமானத்தையும் சமூக மற்றும் இயற்கை நீதியையும் மறந்து சாட்டையை சுழற்றுவது தவறான முன்னுதாரணம் மட்டும் அல்ல, தவிர்க்க வேண்டிய ஜனநாயக கேடும் கூட.
பி.கு: முக்கிய பிரமுகர் வகிக்கும் பொறுப்பு, பணியாற்றும் அமைப்பு ஆகியவற்றின் மாண்பை காக்க வேண்டிய கடமை நமக்கும் இருப்பதால் பெயர், பதவி குறிப்பிடாமல் தவிர்த்துள்ளோம்.
வாசகர் கருத்து (72)
அறங்கெட்டதுறையின் கீழ், கொள்ளைகள், சிலை திருட்டு என பல வகையான முறைகேடுகள் அன்றாடம் நடந்துகொண்டுள்ளன.. அதுகுறித்து வழக்குகள் பல (நூற்றுக்கணக்கானவை) வெவ்வேறு நீதிமன்றங்களில் திருவரங்கம் திரு.ரங்கராஜன் நரசிம்மன் மற்றும் திரு.T.R.ரமேஷ் போன்றவர்களால் தொடரப்பட்டு, அறங்கெட்ட துறையை கையில் வைத்திருக்கும் தமிழக அரசு, அவற்றை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல்.. வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டு, மறுபுறம்.. டிசைன் டிசைனா.. படம் காட்டிக்கொண்டு.. சேகர்.. அடிச்சு உட்டுக்கொண்டிருப்பது.. ஊரறிந்த ரகசியமே..
நல்ல உதாரணம் ..இன்றைய இந்தியாவின்... ஜனநாயகத்தின்.. நிலைமை... அரசியல் வர்க்கமும் அதிகாரவர்க்கமும்... இந்தியாவை அடிமைப்படுத்தி.. உள்ளன..
தரிசன டிக்கெட்டை எதற்காக முன்கூட்டியே அடித்து வைக்க வேண்டும்? தில்லுமுல்லு நடந்திருக்க முகாந்திர முள்ளது. மின்சார ரயில் கவுண்டர்களில் நாம் Station பெயரை சொன்னபின் தான் Print எடுத்து தருகின்றனர்.
ஒரு ' டிக்கெட் வாங்காத திருடனின் கதை ' எப்போது.
உங்கள் பெயரை சேகர் குருசாமி பாபு அடிப்பொடி என்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். டிக்கெட் ஐ மாற்றி கொடுத்து, ஒரு டிக்கெட்டுக்கு நாற்பத்திஐந்து ருபாய் கொள்ளையடித்து வந்தது வெளிப்பட்டுவிட்டது. மனசாட்சியே இல்லாத அந்த ஊழியர்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டுமாம்? நீதிபதி அவர்கள் செய்தது மிகவும் சரி. நீதிபதிக்கே இந்த நிலை என்றால், அவரிடத்தில் சாதாரண குடிமகள் நான் இருந்து இதுபோல் கேட்டிருந்தால் என்னை வாய்க்குவந்தபடி கேவலமாக பேசி இருப்பர். குமரகுருபரர் வேறு துறைக்கு மாறிவிடுவது நல்லது.