Advertisement

என் உயிரின் மொழி: சாந்தகுமார் - பேசும் பொம்மை கலைஞர்

ஒரு சிறுவனின் பிறந்தநாள் விழாவில்
சாந்தகுமார்: ஏய் ஜானி! எப்படி இருக்கே? ஏதோ பரிசு வாங்யிருக்கிறதா கேள்விப்பட்டனே!
ஜானி: ஆமா! பாட்டு போட்டியில் இரண்டாவது பரிசு
சாந்தகுமார்: அடடே! சந்தோஷமா இருக்குப்பா ஆமா. போட்டியில் எத்தனைபேர் கலந்துகிட்டாங்க.
ஜானி: என்னையும் சேர்த்து இரண்டே பேர்தான்! நான் முதல்ல பாடுனேன். அதை கேட்டுட்டு அவனை பாட சொல்லாமலே அவனுக்கு முதல் பரிசு கொடுத்தட்டாங்க. ஒண்ணும் புரியலை
சாந்தகுமார்: வருத்தப்படாதே ஜானி! முதல் பரிசு கொடுத்து உன் குரலை அசிங்கபடுத்திட கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க சரி வா.. பையன் கேக் வெட்டுறான். ஹேப்பி பர்த்டே பாடிட்டு வரலாம்.
சாந்தகுமார்: பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி அப்புறம்... 99 வயசுல ஒரு பாட்டிம்மா தன்னோட மொபைலுக்கு லைப்டைம் கார்டு வாங்கி போட்டாங்களாம். அந்த மாதிரி வாழ்க்கை மேல எப்பும் நம்பிக்கை வைக்கணும், என்ன ஜானி! நான் சொல்றது சரிதானே?
ஜானி: எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இன்றைக்குதாம்ப்பா உருப்படியா ஒரு விஷயம் சொல்லியிருக்கே!

சாந்தகுமாருக்கு வயது 62, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அன்பான மனைவி, பாசமிக்க பிள்ளைகள், அழகும் அறிவும் நிறைந்த நான்கு பேரக்குழந்தைகள் என இவரை சுற்றியிருக்கும் சந்தோஷங்கள் அதிகள், ஆனாலும் இவர்களை விட இவர் அதிகம் நேசிப்பது ஒரு விஷயத்தை..
அது என்ன?

ஒரு திருமண வீட்டில்...
சாந்தகுமார்: ஏன் கண்னை மூடிகிட்டே ராணி? கண்ணை திற...
ராணி: அய்யோ.. எனக்கு அந்த மாப்பிள்ளையை பார்க்க வெட்க.. வெட்கமா இருக்கு!
ஜேக்: எனக்கு மாப்பிள்ளையைபார்த்த பரிதாபமாக இருக்கு நேத்து மாப்பிள்ளை அழைப்புல குதிரையில் ஏத்தி, அவரை கூட்டியிட்டு வந்தாங்க. அப்படியே குதிரையை தட்டிவிட்டு பறந்திருக்கிகலாம். கடைசி வாய்ப்பும் போச்சு! இப்போ.. சாந்தகுமார் மாதிரியே மாட்டிகிட்டாரு.
ராணி: வாயை மூடு ஜேக்! லவ் மேரேஜ்ன்ன தற்கொலை, அரேன்ஜ்டு மேரேஜ்னா அது கொலைன்னு சொல்ற உனக்கு இந்த கல்யாண பந்தத்தை பத்தி என்ன தெரியும்?
சாந்தகுமார்: சரியா சொன்னே ராணி! லவ் இஸ் எவ வேர்டு! மேரேஜ் இஸ் எ சென்டன்ஸ் தெரியுமா ஜேக்?
ஜேக்: நானும் அதைத்தான் சொல்றேன் மேரேஜ் இஸ் எ லைப் சென்டன்ஸ்...!
சாந்தகுமார்: நீ திருந்த மாட்டே! அங்க பாரு பொண்ணு வீட்டுக்காரங்க எல்லோரும் உன்னை அடிக்க கிளம்பி வர்றாங்க..
ஜேக்: எல்லாரும் ஒரு நிமிஷம் நில்லுங்க! உங்க பொண்ணோட மனசுல ஆயுள் முழுக்க சிறைபட்டு கிடக்கறது சுகமான ஆயுள்தண்டனை தானே! இதை சொன்னதுக்கா என்னை அடிக்க வர்றீங்க!
ராணி: எஸ்கேப் ஆயிட்டான்டா! நான் செய்றது, நாலு பேரை சந்தோஷப்படுத்துற சமூக சேவை. சில இடங்கள்ல நான் செய்ற விஷயத்தை முழுமையாக புரிஞ்சுக்காம என்னை உதாசீனப்படுத்தியிருக்காங்க. ஆனா. அந்த அவமானங்களை எல்லாம் தாங்க பழகிட்டுதான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். வருமானம் ரொம்ப குறைவுதான், ஆனா, இது எனக்கு உயிர், உயிர் இல்லாம வாழ முடியுமா? சொல்லுங்க! சாந்தகுமாரின் உயிர் எது?

ஒரு பள்ளி விழாவில்..

சாந்தகுமார்: டாக்டர் வந்தாரு! ஊசி போட்டாரு! காசு வாங்காம பறந்து போயிட்டாரு! அவர் பேர் என்ன?
ஜானி: கொசு!
சாந்தகுமார்: அப்படியே? சரி 6+5+5= 550. எப்படி?
ஜானி: தெரியலையே...!
சாந்தகுமார்: ம்ம்ம்... இப்ப பாரு! முதலாவது + ஐ 4 இப்படி மாத்திட்டா 545 ஆயிடும். 545+5=550 எப்படி!
ஜானி: சூப்பர்ப்பா! எனக்கொரு சந்தேகம். இந்த முயல, ஆமை கதையில யார் செஞ்சது தப்பு?
சாந்தகுமார்: முயற்சி செஞ்சாதான் வெற்றி!ங்கறதை புரிஞ்சுக்கிட்ட ஆமை செஞ்சது சரி, முயலாமை தோல்வியைதான் தரும்!'னு புரிஞ்சுக்காத முயல் செஞ்சது தப்பு.
ஜானி: நீ நிஜமாவே பெரிய ஆளுப்பா...!
உண்மைதான். பொம்மைகளான கிச்சாவையும், ஜேக்கையும், ராணியையும், ஜானியையும், சுலபமா பேச வைக்கிறார். சாந்தகுமார், இந்த பொம்மைகளுக்கு குரல் கொடுக்கற நேரத்துல, இவர் உதடுகள்ல எந்தவித அசைவும் இருக்காது இந்த கலைக்கு பேர் பேசும் பொம்மை கலை, கடந்த 14 வருடங்களில் 5000 மேடைகளை சந்தித்திருக்கும் இந்த கலைஞனின் மனதிற்குள் சமீபகாலமாக ஒரு ஏக்கம்!

சாந்தகுமார்: எனக்கப்புறம் உங்களையெல்லாம் யாரு பார்த்துக்குவா?ன்னு நினைக்குறப்போ மனசு பாரமா இருக்குப்பா!
ஜானி: ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க அங்கிள்! மத்தவங்களை சிரிக்க வைச்சு ரசிக்கிற உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நாம ஏற வேண்டிய மேடைகளும், சாதிக்க வேண்டியதும் நிறைய இருக்கு. வருத்தப்படாதீங்க! கடவுள்கிட்ட நான் நல்லா பிரார்த்தனை பண்ணிக்கிறேன்.
ஜானியின் பிரார்த்தனை வீண் போகாது, காரணம், கடவுளின் பார்வையில் மனிதனும், பொம்மையும் ஒன்றுதான்!

- துரை கோபால்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement