குன்னூர்: குன்னூர் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
அடித்து சென்ற வாகனங்கள்
வெலிங்டன் கிடங்கு அருகே ஆரோக்கியபுரம் பகுதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மரம் செடி மண் அடித்து வரப்பட்டதால் சாலை மூடப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ஆட்டோக்கள், ஆம்னி கார் அடித்து செல்லப்பட்டது.
இதில் ஆம்னி கார் பாதிப்பின்றி மக்களே மீட்டனர். இதே போல, டி.டி.கே. சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் அடித்து செல்லப்பட்டது. அம்பிகாபுரத்தில் மண்சரிவில் சிக்கிய 3 கார்களில் இரு கார்கள் இரவில் மீட்கப்பட்டது. உழவர் சந்தை அருகே ஏற்பட்ட மண்சரிவால் மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம், பால்கார லைன், இந்திராநகர் பகுதி என 4 இடங்களில் பாறைகளுடன் மண் சரிவு ஏற்பட்டது. தகவலின் பெயரில் வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் பொக்லின் மூலம் உடனடியாக அகற்றினர்.
இரவில் 10:00 மணி முதல் காலை 6:00 மணிவரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மொத்தம், 12 இடங்களில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டது. மவுண்ட் ரோடு விநாயகர் கோவில் அருகே பள்ளம் ஏற்பட்டது.
விழுந்த மரங்கள்
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சாலை, பந்துமை, அருவங்காடு எம்ஜி காலனி , பிருந்தாவன், வண்டிச்சோலை உள்ளிட்ட 21 இடங்களில் மரங்கள் விழுந்தன. தீயணைப்பு துறையினர் இரவோடு இரவாக, மரங்களை வெட்டி அகற்றினர். சிம்ஸ்பூங்கா, பால்கார லைனில் மின்கம்பங்கள் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டு நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.
இடிந்த 24 வீடுகள்
குன்னூர் வட்டாரத்தில் பகுதியளவில் வீடுகள் இடிந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த வருவாய் துறையினர் கணக்கெடுத்து தலா ரூ.4100 நிவாரண தொகையை வழங்கினர். ஜெகதளா கிடங்கு அருகே வீடுகளுக்குள மழைநீருடன் கழிவு நீரும் புகுந்ததால் மக்கள் சிரமத்துடன் தண்ணீரை வெளியேற்ற சிரமப்பட்டனர் குன்னூர் ஆர்.டி.ஓ., பூஷன் குமார் தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மூழ்கிய விவசாய நிலங்கள்
வெலிங்டன் லூர்து புரம், கேத்தி பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து தோட்டக்கலை துறை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மீண்டும் மழை கொட்டி தீர்க்கும் என்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தாசில்தார் சிவக்குமார் கூறுகையில், " மாவட்ட நிர்வாகத்தின் தொடர் அறிவுரையுடன் அனைத்து துறையினரும் பேரிடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேசிய, மாநில, நெடுஞ்சாலை துறைகள், நகராட்சியின 5 பொக்லின மூலம் மீட்பு நடவடிக்கையில் பயன்படுத்துகிறது. குன்னூர் நகராட்சியில் 9 பேரிடர் மையங்கள் உட்பட பள்ளிகள், சமுதாய கூடங்கள் 103 மையங்களில் மக்கள் தங்க வைக்க தயார்படுத்தப்பட்டுள்ளது, " என்றார்.
ஊட்டி மலை ரயில் ரத்து
குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழையால் மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் முதல் வெலிங்டன் வரையில் 11 இடங்களில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் பாறை கற்களும் சரிந்து விழுந்தன.
இதனால் ஊட்டி குன்னூர் இடையே இயக்கப்படும் நான்கு ரயில்கள் மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் இடையேய்க்கப்படும் மலை ரயில் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து இந்த பகுதிகளில் ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள், குப்பட்டா உதவியுடன் பணியாற்றி வருகின்றனர். எனினும், மாலை வரை மண் சரிவு அகற்றும் பணி தொடர்ந்தது. எனினும் பணிகள் முடிவு பெறவில்லை. இதனால் இன்றும் மலை ரயில் ரத்து செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிப்பில் குன்னூர்
கடந்த 1979 நவ., 12, முதல் 20 வரை பெய்த தொடர் மழையில், அதிக நிலச்சரிவுகள், வெள்ள பாதிப்பு ஏற்பட்டதுடன், 16ல், குன்னூரில் ஒரு குழந்தை உட்பட இரு பெண்கள் அடித்து செல்லப்படனர்.
2006 நவ., 14ல் நிலச்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்து, 3 பேர் காயமடைந்தனர்; மலைபாதை போக்குவரத்து பாதித்தது.
கடந்த, 2009 நவ. 11, 12 ம் தேதிகளில் பெய்த கன மழையால், ஊட்டி13ம் தேதி அதிகாலை, பெய்த மழையில், 1100 இடங்களில் மண்சரிவு, நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 43 பேர் வரை உயிரிழந்தனர்.
2015 மார்ச் 7ல், பெய்த கன மழையில், கிருஷ்ணாபுரத்தில் 30 வாகனங்கள் அடிக்கு செல்லப்பட்டது. 55 வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.
2019 நவ., 17ல் கிருஷ்ணாபுரத்தில் 19 வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!