சென்னை: மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணிக்கு கரையை கடக்க துவங்கம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக, இன்று காலை 8:30 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ., தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 180 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை
அடுத்த 24 மணி நேரத்தில்,
தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, சென்னை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்று எச்சரிக்கை
வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று ம தியம் முதல் மாலை வரை பலத்த காற்று 50 - 60 கி.மீ., வேகத்திலும் , சமயங்களில் 70 கி.மீ., வேகத்திலும், மாலை முதல் நாளை அதிகாலை வரை 65- 75 கி.மீ., வேகத்திலும், சமயங்களில் 85 கி.மீ., வேகத்திலும்,
பின்னர், நாளை காலை நேரத்தில் அதிகாலை முதல் 55- 65 வேகத்திலும், நாளை மாலை 30 முதல் 40 கி.மீ., வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை பலத்த காற்று வீசலாம். மீனவர்கள் வரும் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும். அதனால், வட தமிழக உள் பகுதிகள், கர்நாடக பகுதிகளில் 10 ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாபஸ்
சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த 'ஆரஞ்ச் அலெர்ட்' - ஐ வானிலை மையம் திரும்ப பெற்று கொண்டது.
கரையை நெருங்கியது
மாண்டஸ் புயல் கரையை நெருங்கியதற்கான அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், இன்று இரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 2:30 மணி வரை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (2)
ஆரஞ்சு - மஞ்சள் - ரெட் அலர்ட்டை வானிலை மையம் விலக்கிக் கொண்டது. கறுப்பு - சிவப்புக்கு அலர்ட் நீங்கியது.
விடிந்ததும் விடியல் நிர்வாகம் வெளிப்படுமென்ற நிலையில் அலர்ட் வாபஸ். ஆண்டவனும் அவிங்க பக்கம்தான் போல.