Load Image
Advertisement

கடற்கரை மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு: புதுச்சேரியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 2:30 மணி வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடற்கரை மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புதுச்சேரியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் சேதமடைந்தன.

மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நள்ளிரவு முதல் காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கடலூர்



கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியி்ல் கடல் சீற்றத்துடன், கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாரும் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Tamil News
நகர பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வருகிறது. லேசான காற்று வீசி வருகிறது. பேரிடர் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக கடலூர் உள்ளதால், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற தமிழக போலீஸ் சிறப்பு குழுவினரும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். புயல் காரணமாக சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அகற்றும் பணி நடக்கிறது.

சேதம்



Latest Tamil News
கடல் சீற்றம் காரணமாக, சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.

பழவேற்காட்டில் இருந்து வட சென்னை செல்லும் சாலையில் கடல் நீர் புகுந்தது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலைக்கு கடல்நீர் வந்ததால் கருங்காலி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 5 அடி வரை கடல் அலைகள் எழும்புவதால், அந்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சென்னை கோட்டூர்புரத்தில் மரம் விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. தொடர்ந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெசன்ட் நகர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் இருந்த மீனவ குடியிருப்புகள் அமைந்த பகுதிக்குள் தண்ணீர் நுழைந்தது.

பேருந்துகள் இயக்கம்



மாண்டஸ் புயல் கரையை கடக்கும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், புயல் கரையை கடந்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகும் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

எச்சரிக்கை



திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில், பொது மக்களுக்கு போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். நீர்நிலைகள் முன்னர் செல்பி எடுக்க வேண்டாம். வாகனங்களில் குறைந்தளவு வேகத்தில் செல்ல வேண்டும் என எச்சித்தனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்



Latest Tamil News

மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், படகுகளை பாதுகாப்பாக கரையில் ஏற்றி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் புகுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். பூம்புகார் கிராமத்தில் கருங்கல் தடுப்பு சேதமடைந்த பகுதிகளை ஊராட்சி நிர்வாகம் ஜேசிபி. எந்திரங்களைக் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சேதம்



Latest Tamil News


தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணரிப்பின் காரணமாக தரங்கம்பாடி வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையின் பழங்காலத்தில் சுற்றுச்சுவர் கடல் சீற்றத்தால் சிதலமடைந்து

மாமல்லபுரம் வெறிச் !



செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம், கோவளம், பகுதிகளில் கடல் நீர் சில பகுதிகளில் உள்ளே புகுந்துள்ளது. மாமல்லபுரத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இங்கு 10 அடி வரை கடல் அலை எழும்புகிறது. இன்று காலை முதல் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்படவில்லை. பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை முதல் மழை விட்டு, விட்டு லேசாக பெய்கிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

பாம்பனில் படகுகள் சேதம்



மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நேற்று இரவு பாம்பனில் வீசிய சூறாவளி காற்றினால் கடற்கரையில் நிறுத்தி இருந்த 2 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கியது.

புதுச்சேரி



Latest Tamil News


புதுச்சேரியில் லேசான காற்று வீசி வருகிறது. கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், தமிழக எல்லை பகுதியில் உள்ள பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 12 வீடுகள் சேதமடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எம்எல்ஏ., மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடல் அலைகள் 10 அடி அளவுக்கு ஆக்ரோஷமாக எழுப்பி வருகிறது. ஒரு சில இடங்களில் மரம் விழுந்தது. அது அகற்றப்பட்டது.

அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அலுவலகங்களில் உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 44 சுகாதார நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தேங்கும் மழைநீரை அகற்ற உடனடியாக அகற்றி வருகின்றனர். சாலையில், தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புதுச்சேரியில் உள்ள 24 மீனவ கிராமங்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த 20 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் கரையில் உள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பிவிட்டனர்.

மீனவர்களுக்காக 239 தங்கும் இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு சாப்பாடு தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்காக கட்டுப்பாட்டு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாலையில் விழும் மரத்தை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உள்ளாட்சி, போலீஸ் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியது



Latest Tamil News

தூத்துக்குடி பீச் ரோட்டில் ரோச் பூங்கா பகுதியில் சுமார் 50 பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இன்று கடல் சுமார் 30 அடி தூரம் உள்வாங்கியதால், கடலின் தரை வெளியே தென்பட்டது. அதில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் இறால்களை கொக்கு, நாரை பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கொத்திச் சென்றது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், வழக்கமாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் தூத்துக்குடியில் பல இடங்களில் சுமார் இரண்டடி முதல் ஐந்து அடி தூரம் வரை கடல் உள்வாங்கும் இன்று வழக்கத்திற்கு மாறாக சுமார் 30 அடி தூரம் கடல் உள்வாங்கியுள்ளது ஏன் என்று தெரியவில்லை என்றனர்.

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடியிருந்தனர். அவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

நிறுத்தம்



புதுச்சேரியில் மாலை 5 மணிக்கு மேல் போக்குவரத்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு 9 பஸ்களும், காரைக்காலுக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. அனைத்தும் மாலை 5 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் சேவையும் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement