ADVERTISEMENT
திருப்புவனம்,-விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் வைகை ஆற்றில் நாளுக்கு நாள் நாணல் அதிகம் வளர்ந்து நீரோட்டத்தை தடுப்பதுடன், நிலத்தடி நீரையும் உறிஞ்சி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் கானூர், கணக்கன்குடி, மடப்புரம், திருப்புவனம், மாரநாடு உள்ளிட்ட கிராமங்களில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
வைகை ஆறு முழுவதும் நாணல் வளர்ந்து காடு போல உள்ளது. ஏற்கனவே மணலூர் அருகே வைகை ஆற்றை தனியார் தொண்டு நிறுவனம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சுத்தம் செய்தது. அதுபோல வைகை ஆறு முழுவதையும் அரசு சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தாண்டு வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர்வரத்து உள்ள நிலையிலும் பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்லவில்லை. மேலும் மதுரை நகரின் வழியாக வரும் வைகை ஆற்றில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு அடித்து வரப்பட்டு நாணல்களுக்கு இடையே தேங்கி விடுகிறது. நீர்வரத்து இல்லாத காலங்களில் நாணல் புதர்களை மறைவிடங்களாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களும் நடந்து வருகின்றன. எனவே வைகை ஆற்றில் வளர்ந்துள்ள நாணல்கள், கருவேல மரங்களை அகற்றி நீரோட்டம் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இன்னிக்கிதான் நாணல் வளர்ந்துச்சா? திருச்சி காவேரியைப்.போய் பாருங்க. நாணல், கோரை, சிறு மரங்கள்னு ஏகத்துக்கு வளர்ந்து கெடக்குடா... செங்கல்பட்டு பாலாறை பாருந்க. மணகை யெல்காம் கொள்ளையடிச்சு அங்கே வேப்பமரக்காடே இருக்கு.