மாண்டஸ் புயல் சின்னம் எதிரொலியாக புதுச்சேரி,தமிழகத்தில் இன்று 8 ம் தேதி முதல் வரும் 10 ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டுள்ளனர்,.
புயல் சின்னம் காரணமாக கனமழையுடன் 50 முதல் 70 கி.மீ.,வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள், கட் அவுட், விளம்பர பலகைகள் வைக்க கலெக்டர் வல்லவன் குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின் கீழ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நள்ளிரவே பேனர்களை அகற்றும் பணியில் போலீசாரும், உள்ளாட்சி துறையினரும் களமிறங்கினர்.
பாதிப்பை தவிர்க்க ஆலோசனை:
புயல் போன்ற பேரிடரை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் முன் எச்சரிக்கையாக இருந்தால், சேதம், உயிர்பலியை பெருமளவு தவிர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
புயல், மழை நேரத்தில் செய்ய வேண்டியவை:
l 1070 மற்றும் 1077 ஆகிய அவசரகால தொடர்பு எண்களை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
l முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருப்பது நல்லது.
l வீட்டின் அருகில் இருக்கும் கழிவு நீர் வடிகால்களை சுத்தமாக வைத்திருக்கவும்.,
l சமைக்கவோ, பிரிட்ஜில் வைக்கவோ அவசியம் இல்லாத உணவு பொருட்களான 'பிரட்', 'பிஸ்கட்' கையிருப்பில் வைத்திருக்கவும்.
l கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது தண்ணீர் தேங்கி நின்றாலோ உடனடியாக நகராட்சி நிர்வாகத்தில் முறையிடவும்.
l பேட்டரி மூலம் இயங்கக்கூடிய டார்ச் லைட், எமர்ஜென்சி லைட், ஒளிரும் விளக்குகளை கூடுதல் பேட்டரிகளுடன் வைத்திருக்கவும்.
l போதுமான அளவு குடிநீரை சுத்தமான மூடிய பாத்திரங்களில் வைத்திருக்கவும். குடிநீரை சுத்திகரிக்கும் மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்திருக்கவும். கொதிக்க வைத்த நீரை பருகவும்.
l வீட்டில் சமைத்த சுகாதாரமான உணவை உட்கொள்ளவும். வெளியில் உண்பதை தவிர்க்கவும்.
l காலணி அணிந்து நடக்கவும்.
l சுவாச கோளாறு உள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்க்கவும்.
l ஆங்காங்கே நீர் தேங்குவதை தவிர்ப்பதன் மூலம், மலேரியா, டெங்கு போன்ற நோய்களை தவிர்க்கலாம்.
l சுய மருத்துவம் செய்வதை தவிர்க்கவும்.
l மின்னல் ஏற்படும் நேரங்களில் மரங்கள், கம்பங்கள், உயரமான பொருட்கள், நீர் நிலைகள், உலோக பொருட்களில் இருந்து விலகி இருக்கவும்.
l மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.
l வீட்டிலுள்ள பட்டுபோன கிளைகளை வெட்டி விடவும். காற்றினால் இவை உடைந்து ஏற்படுத்தும் சேதத்தை தவிர்க்கலாம்.
l வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைக்கவும்.
l வீட்டின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி காற்றில் துாக்கி வீசாமல் இருக்க முழுவதுமாக தண்ணீர் நிரப்பி வைக்கவும்.
l வீட்டிற்கு 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தணணீரை சேமித்து வைக்கவும்.
l குழந்தை, முதியோர், நோயாளிகளுக்கான மருந்து, உணவு பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும்.
l புயல், சூறாவளியில் கடலுக்குள் செல்வது ஆபாயமானது. அவ்வாறே வீட்டில் இருந்து வெளியே செல்வதையும் தவிர்க்கவும்.
l நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும்.
l வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். கால்நடைகளை குடிநீர் மற்றும் தீவனங்களுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்கவும்.
l தங்களின் வசிப்பிடம் பாதுகாப்பற்றதாக இருந்தால் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு முகாம் அல்லது வேறு பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக செல்லவும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் மற்றும் உயிர் சேதத்தை பெருமளவு தவிர்க்கலாம் என மாநில பேரிடர் துறை அறிவுறுத்தியுள்ளது.
புயல் வீசும் போது வீட்டின் மின்சாரத்தை நிறுத்திட வேண்டும். மின் சாதன பொருட்கள் அனைத்தின் பிளக்குகளை எடுத்து விட வேண்டும். அவசரகால உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்ளவும். பேட்டரி ரேடியோ மூலம் புயல் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இனி பாதிப்பு இல்லை என கூறும் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.புயலுக்கு பின் செய்ய வேண்டியவை:வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது மின் வயர்கள் அறுந்து கிடந்தால் உடன் மின்துறைக்க தகவல் தெரிவிக்கனம். ஈரக்கையுடன் மின்சாதனத்தை ஆன் செய்யாதீர்கள்.தண்ணீரை நன்கு கொதிக்க வைத்தோ அல்லது சுத்திகரித்தோ குடிக்க வேண்டும். மின் வயர் மீது மரம் முறிந்து விழுந்திருந்தால் அருகில் செல்லக்கூடாது. வீடு புயலால் சேதமடைந்திருந்தால் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்களுக்கான உதவியை பெறலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!