ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்க பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மிகப்பெரிய அளவிலான வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இங்கு மான், மயில், பாம்பு, குரங்கு, காட்டுப்பன்றி, உடும்பு, முயல் உட்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன.
காப்புக் காடுகளாக இருந்த போது, வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காட்டில் பழ மரங்கள், தண்ணீர் தேங்கும் வகையில் குட்டைகள் வெட்டப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் காப்புக்காடு முழுவதும் வனத் தோட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, காப்புக் காட்டில் இருந்த பழ மரங்கள், தண்ணீர் தேங்கும் வகையில் இருந்த குட்டைகளை அழிக்கப்பட்டு, வியாபார நோக்கத்தில் தண்ணீரை வேகமாக உறிஞ்சக்கூடிய யூகலிப்ட்ஸ் மரங்களை வளர்க்கப்பட்டு வருகிறது.
இதற்காக, வனப்பகுதி முழுவதும் உழுது, யூகலிப்ட்ஸ் கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.
மரங்கள் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்யப்பட்டு காகித தொழிற்சாலைக்கு அனுப்பபடுகிறது. இதன் மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஆனால், உணவு தரும் வகையில் உள்ள பழ மரங்கள் அழிக்கப்பட்டதால், வனவிலங்குகள் உணவின்றி சாலைகளிலும், விளை நில பகுதிகளுக்கும் உணவு தேடி வருகின்றன.
யூகலிப்ட்ஸ் மரம் சராசரியாக 33 அடியில் இருந்து 200 அடி உயரத்திற்கு வளரும். இந்த மரம் நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சி, தண்ணீரை எளிதில் ஆவியாக்குகிறது.
குறிப்பாக, அதிகளவு யூகலிப்டஸ் மரங்கள் இருக்கும் இடத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்தாலும், வனப்பகுதியை ஒட்டியவாறு உள்ள ஏரி, குளங்களில் உள்ள தண்ணீர் உடனடியாக வறண்டு போகிறது.
இதனால் விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட வனப்பகுதியில் வளர்க்கப்படும் யூகலிப்ட்ஸ் மரங்களைத் தவிர்த்து, வன விலங்குகளின் நன்மை கருதியும், சுற்று சூழலுக்கேற்ற மர வகைகளை நட்டு பராமரிக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!