ADVERTISEMENT
செஞ்சி-செஞ்சி 'பி' ஏரியில் சுற்றுலா துறை மூலம் படகு சவாரியைக் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா தலம் என எடுத்துக் கொண்டால் செஞ்சி கோட்டையைத் தவிர பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் வேறு இல்லை. செஞ்சி கோட்டையின் பழமை, வரலாற்று பின்னணி, கோட்டையின் கம்பீரம் காரணமாக வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காணும் இடங்களில் இந்திய அளவில் செஞ்சி கோட்டை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் இந்திய தொல்லியல் துறையினர் இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இங்கு படகு சவாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. செஞ்சியில் படகு சவாரிக்கு ஏற்ற இடமாக செஞ்சி கோட்டையின் உள்ளே சர்க்கரை குளம், செட்டி குளம், செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட திருவண்ணாமலை சாலையில் உள்ள 'பி' ஏரி உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வரை 'பி' ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் தண்ணீரை வெளியேற்றி வந்தனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எரி ஆழப்படுத்தப்பட்டதால் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
செஞ்சி கோட்டையில் உள்ள குளம் மற்றும் அகழிகள் நிரம்பியதும் உபரி நீர் 'பி' ஏரிக்கு வந்து விடுவதால் நீர் வரத்திற்கும் பஞ்சமல்லை.
இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக 'பி' ஏரி வற்றாமல் முழு அளவில் தண்ணீர் இருந்து வருகிறது.
செஞ்சி கோட்டையில் உள்ள செட்டி குளம், சர்க்கரை குளம் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு படகு சவாரி விடுவதற்கு இந்திய தொல்லியல் துறையின் கடுமையான விதிமுறைகளை நிறைவு செய்ய வேண்டும்.
அத்துடன் மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் அனுமதியையும் பெற வேண்டும். இவற்றை நிறைவு செய்து படகு சவாரியை உடனடியான கொண்டு வர வாய்ப்புகள் இல்லை. தமிழக அரசின் கீழ் உள்ள செஞ்சி பேரூராட்சிக்கு சொந்தமான 'பி' ஏரியில் படகு சவாரி விடுவதற்கு எந்த தடையும் இருக்காது.
இங்கு படகு சவாரி கொண்டு வந்தால் செஞ்சி பேரூராட்சின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும்.
செஞ்சி தொகுதியில் கடந்த 5 முறையாக நடந்த சட்டசபை தேர்தலின் போது அனைத்து கட்சி வேட்பாளர்களும் 'பி'ஏரியில் படகு சவாரி விடப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளனர். தற்போதைய அமைச்சர் மஸ்தானும் தனது தேர்தல் வாக்குறுதியில் இதை குறிப்பிட்டிருந்தார்.
செஞ்சி நகர மக்களின் முக்கிய கோரிக்கையாக அரசு கல்லுாரி, படகு சவாரி அமைக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் இருந்து வந்தன. இதில் அமைச்சர் மஸ்தான் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே கலைக்கல்லுாரியை கொண்டு வந்து விட்டார். படகு சவாரி கோரிக்கை கிடப்பில் உள்ளது.
தனது தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்றும் விதமாக அமைச்சர் மஸ்தான் முயற்சி எடுத்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரை செஞ்சிக்கு அழைத்து வந்து செஞ்சியை சுற்றுலா மையமாக அறிவிக்கவும், சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரியை கொண்டு வரவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!