புத்தாண்டு நெருங்கும் நிலையில், நிதி நிலையை ஆய்வு செய்வதும், அடுத்த ஆண்டிற்கான திட்டமிடலில் ஈடுபடுவதும் அவசியம் ஆகிறது. புத்தாண்டு உறுதிமொழிகளோடு, நிதி திட்டமிடலிலும் கவனம் செலுத்துவது முக்கியம். நிதி திட்டமிடல் சரியாக இருந்தால், சரியான நிதி முடிவுகளை மேற்கொள்ளலாம்.
சேமிப்பு, முதலீடுகள் மூலம் நல்ல பலன் பெற இது உதவும். திட்டமிடல் வாழ்க்கை இலக்குகளை அடையவும் வழிகாட்டுகிறது. அந்த வகையில், புத்தாண்டு காலத்தில் நிதி திட்டமிடலில் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகளை பார்க்கலாம்.
நிதி இலக்குகள்
சேமிப்பதும், முதலீடு செய்வதும் அவசியம் என்றாலும் அவை இலக்கு சார்ந்து அமைந்திருப்பது இன்னும் முக்கியமானது. பலரும், குறிப்பிட்ட இலக்குகள் இல்லாமல் முதலீடு செய்கின்றனர். உதாரணமாக, வரி சேமிப்பிற்காக அல்லது அதிக பலன் பெற வேண்டும் என்று முதலீடு செய்கின்றனர்.
எனினும், முதலீடு செய்யும் போது, அதற்கான நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான், இலக்குகளுக்கு ஏற்ற பலன் தரும் முதலீடு சாதனங்களை தேர்வு செய்ய முடியும்.
எனவே, நிதி இலக்குகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இலக்குகள் இருந்தால், முதலீடுகள் அதற்கேற்ப அமைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதே போல, கிரெடிட் ஸ்கோரை சரி பார்க்காமல் இருக்கும் தவறையும் தவிர்க்க வேண்டும். 'கிரெடிட் ஸ்கோர்' என்பது ஒருவரது கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலரும், கடனுக்கு விண்ணப்பிக்கும் போது மட்டுமே கிரெடிட் ஸ்கோரில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களும் இவ்வாறு செய்கின்றனர். எனினும், அடிக்கடி கிரெடிட் ஸ்கோரை கவனத்தில் கொள்வது நல்லது.
இதன் மூலம், கிரெடிட் ஸ்கோர் போக்கை அறியலாம் என்பதோடு, ஏதேனும் தவறுகள் இருந்தாலும் சரி செய்யலாம். ஸ்கோரை மேம்படுத்த வேண்டிய தேவையையும் அறியலாம்.
கடன் சுமைகள்
அதிகப்படியாக கடன்களை நாடுவது மற்றும் தேவைக்கு அதிகமான கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். கடன் தவணையை செலுத்த தவறுவது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதோடு, கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். அதிக கார்டுகள் வைத்திருப்பது, கட்டுப்பாடில்லாமல் செலவு செய்வதற்கு துாண்டுதலாக அமையலாம்.
கடன் சுமை இருந்தால், சேமிப்பதும், முதலீடு செய்வதும் சிக்கலாகலாம். எனவே, செலவு பழக்கத்தில் முன்னுரிமை தேவை. கடன் சுமையை குறைக்கும் அதே நேரத்தில் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சரியாக முதலீடு செய்து வருவதன் மூலம் நீண்ட கால நோக்கில் கூட்டு வட்டி மூலம் அதிக பலன் பெறலாம். இதற்கு சீரான முதலீடு அவசியம். மேலும் நிதி திட்டமிடலில், காப்பீட்டின் பங்கையும் மறந்துவிடக்கூடாது.
போதுமான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவசர கால நிதியின் தேவையையும் அலட்சியம் செய்யக்கூடாது.
வரி சேமிப்புக்கான முதலீடு உள்ளிட்ட எந்த முதலீட்டையும் அடிப்படை ஆய்வுக்கு பிறகு மேற்கொள்வதே நல்லது.
ஆண்டின் துவக்கத்திலேயே முதலீடு செய்வது இன்னும் நல்லது. நிதி ஆரோக்கியம் வலுவாக இந்த வழிகள் உதவும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!