டில்லியில் மாநகராட்சி தேர்தல்: விறு விறு ஓட்டுப்பதிவு

கடந்த தேர்தலில் பா.ஜ., மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த ஓட்டுப்பதிவு இன்று மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., எம்.பி பர்வேஷ் வர்மாவும், அவரது மனைவியும் மத்தியாலா கிராமத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளித்தனர்.
அலைச்சல்
பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவர்களின் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியாக சென்று பார்த்தனர். பலரின் பெயர் இடம்பெறாததால் ஓட்டு போடாமல் திரும்பினர்.
‛‛ பொய் சொல்லும் ஆம் ஆத்மி'':
இதையடுத்து, பா.ஜ., எம்.பி பர்வேஷ் வர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கோவா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி.யில் ஆட்சி அமைப்பதாக ஆம் ஆத்மி கூறியது. ஆனால் அவர்களுக்கு பொய் சொல்லும் பழக்கம் உள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். கோவிட் சமயத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த யாரும் மக்களுக்காக வேலை செய்ததைக் காணவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர்கள்:
பல்வேறு கட்சிகளின் கடுமையான பிரசாரத்திற்குப் பிறகு, டில்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
‛‛டில்லியை சுத்தமாக்க இந்த தேர்தல் உதவும்''
தேர்தல் குறித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டில்லியை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும், ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும் இன்றைய தேர்தல் உதவியாக இருக்கும்.
நேர்மையான மற்றும் செயல்படும் வகையிலான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க, இன்று நடைபெறும் தேர்தலில் உங்களது ஓட்டுகளை அளியுங்கள். இது ஒட்டுமொத்த டில்லி மக்களுக்கும் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு டில்லி முதல்வர் கூறியுள்ளார். பிறகு குடும்பத்துடன் சென்று கெஜ்ரிவால் ஓட்டு போட்டார்.
‛‛ மக்கள் வரிசையில் நின்று ஓட்டளியுங்கள்'':
தேர்தல் குறித்து, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியிருப்பதாவது: ,"காலநிலை நன்றாக இருக்கிறது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தினமும் காலையில் எழுந்திருக்கும்போது, கண்முன் இருக்கும் குப்பைக் குவியல்களை விட இந்தச் சிறிய சிரமத்தை எதிர்கொள்வது நல்லதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
250 வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்ய, மொத்தம் 1.45 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் குப்பை முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்., தலைவரின் பெயர் இல்லை
டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவரது மனைவி பெயர் மட்டும் இருந்தது. இதனால், அனில் சவுத்ரி ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, டல்லுபுராவில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார்.
வாசகர் கருத்து (2)
பிஜேபி ஒட்டு ஓட்டவங்க மட்டும் தான் கண்ணனுக்கு தெரியுதா என்ன கண்ணாடி பாக்குற எஜமான் விசிவசமா அளவே இல்லியா
ஆம் ஆத்மி க்கு வாய்ப்பு அதிகம். 😛 அவ்வளவு அரசு விளம்பரங்ககள் .