குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த, டிசம்பர் 1-ம் தேதி, சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. அதில், வரும் 19-ம் தேதி, மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனின் நுாற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுதும் 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நூற்றாண்டு விழா
அன்பழகன் நூற்றாண்டு விழா தவிர, மற்ற தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படா விட்டாலும், இந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தல் பற்றியும், அதற்கு கட்சியை தயார்படுத்துவது பற்றியும், அதிக நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலர்கள் பலரும், தமிழகத்தில் அ.தி.மு.க., பலவீனமாக இருப்பதால், அந்த இடத்தை பிடிக்க, பா.ஜ., முயற்சித்து வருவது பற்றியும், அதற்கு ஆதரவு பெருகி வருவது பற்றியும் கவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதை ஆமோதிக்கும் விதமாக, முக்கிய நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களின் பேச்சும் இருந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, கூட்டத் தில் பங்கேற்ற மாவட்ட செயலர் ஒருவர் கூறியதாவது:குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள், வரும் 8-ம் தேதி வந்து விடும்.
ஆர்வம்
கடந்த, 27 ஆண்டுகளாக குஜராத்தில், பா.ஜ., ஆட்சியில் உள்ளது. இதனாலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக உள்ளது.குஜராத்தில் பா.ஜ., தோற்றால், அது எதிர்க்கட்சிகளுக்கு அசுர பலத்தை கொடுக்கும். ஒருவேளை, காங்கிரஸ் இடத்தை, ஆம்ஆத்மி பிடித்தால், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக, ஆம் ஆத்மியை பார்க்க துவங்கி விடுவர்.
குஜராத்தில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றால், நாடு முழுதும் அது எதிரொலிக்கும். அக்கட்சியினர் பெரும் உற்சாகமடைவர். அதன் தாக்கம் தமிழகத்தில்கூட எதிரொலிக்கலாம். மொத்தம், 182 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள குஜராத்தில், 140 இடங்களுக்கு மேல் பா.ஜ., வென்றால், லோக்சபா தேர்தல் முன்கூட்டியே, 2023-ம் ஆண்டிலேயே வர வாய்ப்புள்ளது.பார்லிமென்டில் சட்டம் கொண்டு வந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தங்களின் நீண்டகால திட்டத்தை கூட, பா.ஜ., செயல்படுத்தலாம். எனவே, தி.மு.க., மாவட்ட செயலர்கள், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
தொகுதி பங்கீடு
கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்களை கவரும் அறிவிப்புகள் என மற்றவற்றை, நான் பார்த்து கொள்கிறேன். வரும், 2024-ல் தானே தேர்தல் வரப் போகிறது என, அசட்டையாக இல்லாமல், இப்போதே ஓட்டுச்சாவடி கமிட்டிகளை அமைக்க வேண்டும். இளம் வாக்காளர்களையும். தி.மு.க., ஆதரவாளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கூட்டணி கட்சியினரிடம், இப்போதிருந்தே இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். மத்திய பா.ஜ., அரசின் தவறுகளையும், தி.மு.க., அரசின் சாதனைகளையும், வீடு வீடாக கொண்டு செல்லுங்கள்.இவ்வாறு ஸ்டாலின் பேசியதாக, அந்த மா.செ., கூறினார்.
அறிக்கை
லோக்சபா தேர்தல் 2023 துவக்கத்தில் அல்லது இறுதியில் வரலாம் என, ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து, அதற்கு கட்சியினரை தயார்படுத்தவே, 100 இடங்களில் அன்பழகன் நூற்றாண்டு விழா பெயரில், பொதுக் கூட்டங்களை நடத்தும் அறிவிப்பு வெளியாகி இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். பெயரளவுக்கு இப்பொதுக் கூட்டங்கள் இல்லாமல், கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், முதல்வர், அமைச்சர்கள், முன்னணி தலைவர்களும் அதில் பங்கேற்க உள்ளதாக, நேற்று அறிவாலயம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 18-ம் தேதி, வட சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 16-ம் தேதி காஞ்சிபுரத்தில் பொதுச்செயலர் துரைமுருகன், கோவையில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் துணைப் பொதுச்செயலர் கனிமொழி, ஆவடியில் இளைஞரணி செயலர் உதயநிதியும் பேசுகின்றனர்.
வாசகர் கருத்து (16)
தாமரையை பார்த்து சூரிய குடும்பம் பயம்.
BJP யுடன் கூட்டணிக்கு துண்டு போடுகிறார் , ஆழம் பார்க்கிறார் நடக்காது ராசா .
2023ல் லோக்சபா தேர்தல் இருக்காது 2024ல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு வாய்ப்புண்டு 😜😜😜😜ஆக பயம்.
அரசியல் ஆரூடர் சொல்லிட்டாரு பலிக்குமா?? பலிக்காதா???தெரியல .
அப்படியே பிரஷாந்த் கிஷோரிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்