ADVERTISEMENT
கடலுார்,-கடலுார் மாவட்டத்தில் மொபைல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது, ஒருவழிப் பாதையை கடைபிடிக்காதது, ஏர் ஹாரனை பயன்படுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துள்ளதால், விபத்துகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தின் தலைநகரான மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு முதல், தலைமை தபால் நிலையம் வரை, நேதாஜி சாலை மிக குறுகலானது. சாலைக்கு அருகிலேயே பல பள்ளிகள், கல்லுாரிகள் இருப்பதால் எப்போதும் படு 'பிசி' யாக இருக்கும்.
இந்த சாலை வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல முடியாது என்பதால்தான் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதை, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் கடைபிடிப்பதில்லை.
ஒருவழிப் பாதையில் அரசு வாகனங்கள், அரசியல் கட்சியினரின் வாகனங்கள், போலீசாரின் வாகனங்கள் தாராளமாக செல்கின்றன. எதிர் திசையில் வாகனங்கள் வருவதால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, அவ்வழியாக காரில் வருபவர்கள் சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
குறிப்பாக, அரசியல் கட்சிக்கொடி கட்டிய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அதன் மீது 'கை வைக்க' போலீசார் பயப்படுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
பிரதான நகரங்களில் அதிகளவு சிசி திறன் கொண்ட பைக்கில் செல்லும் வாலிபர்கள் பயங்கர சத்தத்துடன் பறப்பது, நடந்து செல்பவர்களை மிரட்டும் வகையில் உள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் பைக்கில் செல்பவர்களும், கார், பஸ், லாரி உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மொபைல் போனில் பேசியபடி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் நடப்பதற்கு காரணமாகிறது.
புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வரும் வாகன ஓட்டுனர்கள் பலர், ஏர் ஹாரனில் இருந்து கையை எடுப்பதில்லை. மாலை நேரங்களில், புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் பலர் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றனர்.
போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்க, அரசின் ஏதாவது ஒரு துறையின் பெயர், போலீஸ், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு தப்பி செல்கின்றனர்.
சிதம்பரம் மேல வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்கின்றன.
தெற்கு வீதி, கஞ்சித்தொட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; விபத்துகளும் ஏற்படுகிறது.
இதேபோல, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்கள் இருப்பதால், போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, பொது மக்கள் நிம்மதியாக சாலையில் செல்ல முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!