Load Image
Advertisement

ஆள் துாக்க தி.மு.க., போடும் ஸ்கெட்ச்!

  ஆள் துாக்க தி.மு.க., போடும் ஸ்கெட்ச்!
ADVERTISEMENT
'காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி...' என, டீ கடை ரேடியோ உரக்க பாடிக் கொண்டிருக்க, ''அடடா... 'சிச்சுவேஷன் சாங்'னா இதான் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''யாரு, எதுக்காக காத்திருக்காங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கற மனுக்களை, வட்ட வழங்கல் அதிகாரிகளும், உதவி ஆணையர்களும் நன்னா பரிசீலிச்சு கார்டு வழங்க ஒப்புதல் தருவா... இப்படி தமிழகம் முழுதும் ஒப்புதல் தரும் ரேஷன் கார்டுகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் அச்சிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு தபால்ல அனுப்பிச்சுண்டு இருந்தது ஓய்...

''இந்த நடைமுறையால, விண்ணப்பதாரர்களுக்கு கார்டு கிடைக்கறது லேட்டாச்சு... அதனால, தனியார் ஒப்பந்த நிறுவனத்தை 'கழற்றி' விட்டுட்டு, சென்னையில மாவட்ட துணை ஆணையர் அலுவலகங்கள், மற்ற மாவட்டங்கள்ல வழங்கல் அலுவலகங்கள்லயே புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிச்சு, வினியோகிக்க அரசு உத்தரவு போட்டுடுத்து ஓய்...

''அப்படி இருந்தும், ரேஷன் கார்டுகள் குடுக்க கால தாமதம் பண்றா... இதனால, கார்டுக்கு காத்துண்டு இருக்கறவா வெறுத்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மாவட்டச் செயலர் பதவிக்காக, அணி மாறும் ஐடியாவுல இருக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.

''எந்தக் கட்சி விவகார முங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வுல, 'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், 'மாஜி' எம்.எல்.ஏ., ராஜவர்மனும் தோஸ்தா இருந்தாவ வே... அப்புறமா ரெண்டு பேருக்கும் முட்டிக்கிட்டு...

''அ.ம.மு.க..,வுக்கு அணி மாறிய ராஜவர்மன், சட்டசபை தேர்தல்ல தோத்ததும், திரும்ப அ.தி.மு.க.,வுலயே ஐக்கியம் ஆகிட்டாரு வே... வந்ததுல இருந்தே, மாவட்டச் செயலர் பதவி மேல அவருக்கு ஒரு கண்ணு...

''ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலர் பதவி கிடைச்சிட்டு... இதனால, கிழக்கு மாவட்டச் செயலரை மாத்திட்டு, தனக்கு பதவி தரணும் அல்லது மாவட்டத்தை மூணா பிரிச்சு, தனக்கு ஒரு செயலர் பதவி தரணும்னு ராஜவர்மன் கேட்டும், தலைமை கண்டுக்கல வே...

''இதுக்கு இடையில, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியின் தென் மண்டல முதல் பொதுக்கூட்டத்தை தடபுடலா நடத்தி, ராஜேந்திர பாலாஜி சபாஷ் வாங்கிட்டாரு...

''அதனால, இனி பழனிசாமி அணியில பதவியை எதிர்பார்க்க முடியாதுங்கிற முடிவுக்கு வந்த ராஜவர்மன், பன்னீர்செல்வம் அணிக்கு தாவி, அங்கனயாவது 'மாவட்டச் செயலர் பதவி தருவீயளா'ன்னு துாது விட்டுட்டு இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''அ.தி.மு.க., - பா.ஜ., முக்கிய நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., 'ஸ்கெட்ச்' போட்டு இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''அ.தி.மு.க., மூணு அணிகளா பிரிஞ்சு கிடக்கிறதால, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்க, மாவட்ட வாரியா தி.மு.க., களம் இறங்கி இருக்கு... கடலுார், கன்னியாகுமரி தி.மு.க., நிர்வாகிகள் சிலர், போன மாசம் பா.ஜ.,வுக்கு தாவினாங்களே...

''அதுக்கு பழிவாங்குற விதமா, பாஜ.,வின் சில பெரிய புள்ளிகளுக்கு தி.மு.க., வலை விரிச்சிருக்குது... இந்த பொறுப்பை, சேலம் மாவட்ட முன்னாள் அமைச்சரிடம் குடுத்திருக்காங்க...

''பா.ஜ.,வுல அதிருப்தியா உள்ள சில நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.,வுல இருந்து பா.ஜ.,வுக்கு போன சிலர் சீக்கிரமே தி.மு.க., பக்கம் தாவ இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (1)

  • Girija - Chennai,இந்தியா

    வீடு வேலை செய்யும் பெண்ணின் அனுபவம். ரேஷனில் விலை இல்லா புழுங்கல் அரிசி 10 முழுமையாக 5 கிலோ கோதுமை முழுமையாக வழங்காமல், ஸ்டாக் இல்லை, இவ்வளவுதான் வழங்க முடியும் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். கள்ள மார்க்கெட்டில் விற்கின்றனர். பச்ச அரிசியில் அவ்வளவு கல் கலந்துள்ளது. கோதுமையில் கீழே கிடந்த கோதுமையை அள்ளி வைத்தாற்போல் அவ்வளவு மண்ணும் குப்பையுமாக வைத்து மக்கள் அவற்றை வாங்காமல் விட்டுவிடுகின்றனர். இதில் அணைத்து பொருட்களையும் ஒரே சமயத்தில் தான் வாங்க வேண்டும் என்று நிபந்தனை வேறு. இதனால் பணம் இல்லாதவர்கள் பருப்பு சர்க்கரை, பாமாயில் பொருட்களை முழு அளவில் அல்லது எதையாவது வாங்காமலேயே விட்டு விடுகின்றனர், அப்போது விற்பனையாளர் அதை வழங்கியதாக பதிவு செய்து கள்ள மார்க்கெட்டில் விற்கின்றனர்/மேலும் பில் எஸ் எம் எஸ் மூலம் வருவதால் அந்த போன் கடைவரும் குடும்ப நபரிடம் இல்லாதிருந்தால் வீட்டிற்கு போன பிறகே சரி பார்க்கமுடியும். அதில் எல்லா இலவச பொருட்களும் வழங்கியதாக காண்பிக்கிறது, யாரவது துணிந்து சென்று போய் கேட்டால், வாங்கியாச்சு என்றும் அல்லது சரி இப்போ வாங்கிக்குங்க என்று யோக்கியமா பதில் அளிக்கின்றனர். புகார் செய்ய வழி இல்லை. புகார் புத்தகதில் யாரவது பதிவு செய்தால் அந்த புத்தகத்தை மாற்றி புது புத்தகம் வைக்கின்றனர். திரு. ராதாகிருஷ்ணன் இதை கவனிப்பாரா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement