Load Image
Advertisement

 கோவில் அருகில் ஒயின் ஷாப் திறக்க...எதிர்ப்பு; இ.சி.ஆரில் பெண்கள் சாலை மறியல்

  கோவில் அருகில் ஒயின் ஷாப் திறக்க...எதிர்ப்பு; இ.சி.ஆரில் பெண்கள் சாலை மறியல்
ADVERTISEMENT
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட கருவடிக்குப்பம், சித்தானந்த சுவாமி கோவில் அருகில் உள்ள சாமிப் பிள்ளைதோட்டம் பகுதியில் புதிய ஒயின் ஷாப் திறக்க கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒயின் ஷாப், சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஒருவரின் இடத்தில் திறக்க ஏற்பாடு நடந்தது.

அதனை அறிந்த சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் சுற்று வட்டார மக்கள், இடத்தின் உரிமையாளரிடம் ஒயின் ஷாப் திறக்க இடம் தர வேண்டாம். இங்கு, ஒயின்ஷாப் திறந்தால் அதிக பிரச்னை ஏற்படும் எனக் கூறினர். ஆனால், இடத்தின் உரிமையாளர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், சாமிப்பிள்ளை தோட்டம், அணைக்கரமேடு, வாஞ்சிநாதன் நகர், இந்திரா நகர், லெனின் நகர், கருணா ஜோதி நகர், கென்னடி கார்டன் உள்ளிட்ட நகர்களை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒயின்ஷாப் திறப்பதை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இவர்களின் போராட்ட முடிவிற்கு சமூக நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து சாமிப்பிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோவில் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒயின் ஷாப் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் எதிரில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த லெனின்துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூ.,மாநில செயலாளர் சலீம் , ஏ.ஐ.டி.யூ.சி., மாநில செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களில் ஒரு பகுதியினர் திடீரென, ஒயின் ஷாப் திறக்கப்பட உள்ள இடத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, பெண்கள் புதிய ஒயின் ஷாப், தமிழக பகுதியை ஒட்டி திறக்கப்பட உள்ளது. இதனால், குடிப்பிரியர்கள் வருகை அதிகரிக்கும், மதுக்கடைக்கு வரும் குடிப்பிரியர்களால் எங்களுக்கு அடிக்கடி பிரச்னை ஏறபடும். மேலும், சாலையை ஓட்டியே உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் என வாதிட்டனர். ஆனால், போலீசார் அதனை பொருட்படுத்தாமல், மறியலை கலைப்பதிலேயே குறியாக இருந்தனர்.

ஆத்திரமடைந்த பெண்கள், திடீரென இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், கலால் துறையில் முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், கருவடிக்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர் போராட்டம் நடத்த முடிவு

தற்போது ஒயின் ஷாப் திறக்க உள்ள இடத்திற்கு எதிரில் கடந்தாண்டு வேறு ஒரு ஒயின் ஷாப் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை அறிந்த சாமிப்பிள்ளை தோட்டம் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் கடை திறக்கும் முடிவு கைவிடப்பட்டது.அதேபாணியில் தற்போதும் தொடர் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement