Advertisement

நாடக நேசிகள்

"வணக்கம்... தலைப்புச் செய்திகள்! திகார் ஜெயிலில் கூட்டம் அதிகரித்து வருவதால், சென்னை மக்களுக்கென்றே பிரத்யேகமான ஒரு சிறப்பு பகுதி உருவாக்கப்படும்! என தெரிகிறது. கூடவே, அவர்களின் வசதிக்காக சரவணபவன் கிளையும் திறக்கப்படலாம்! எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!' கொஞ்சம் கூட சிந்திக்க விடாமல், மின்னல் வேகத்தில் சிரிக்க வைக்கும் இந்த செய்தி வாசிக்கப்பட்ட இடம் தி.நகர் சர். பி.டி. தியாகராயா ஹால். நாடகத்துறையில் தனது 50வது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ஒய்.ஜி. மகேந்திராவின் "நாடகம்' நாடகத்தில்தான் இந்த அரங்கேற்றம். யுனைடெட் அமெச்சூர் அர்டிஸ்ட்ஸ் நாடக குழுவின் 62வது படைப்பு இந்த "நாடகம்'.
"நாடகம்' தன் சுவாசத்திற்கு பெயர் கொடுத்து, தன் படைப்பின் தலைப்பாக்கியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. 1975ல் துவங்குகிறது கதை. நாடகமே வாழ்க்கை! என வாழும் "நாடக நேசிகள்' குழுவின் தலைவர் சபாகரன். ஆகஸ்ட் 15ல் தூர்தர்ஷன் தன் ஒளிபரப்பை துவக்க இருப்பதாக செய்தி வர, பதறி போகிறது சபாகரன் குழு. நாளடைவில் தொலைக்காட்சி மீது கொண்ட மோகத்தில் குழுவில் சிறு கீறல் விழ, குழுவினரில் ஒருவர் பிரிந்து செல்கிறார். உதிர்ந்தது முழுமையாக துளிர்க்காத இலை! என்பதால் சபாகரனுக்கு வருத்தமில்லை. தொடர்கிறது. அவரது நாடக பயணம். வருடங்கள் உருண்டோட, சபாகரனின் மகன் வளர்ந்து ஆளாகிறான். மென்பொருள் துறை வல்லுனரான அவனுக்கு அப்பாவை போல நாடகம் மீது ஆர்வமில்லை. மகன் நாடகத்துறைக்கு வரமாட்டானா? என்ற ஏக்கமும் தந்தைக்கு தணிந்த பாடில்லை. இந்த வேளையில் "நாடக நேசிகள்' குழுவின் 40வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகனின் மனதிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, முதன்முறையாக மேடையேறுகிறான். ஆனால், அந்த மேடையில்... காலத்திற்கும் அவன் மனதை நிம்மதியாக உறங்கவிடாத ஒரு சம்பவம் அரங்கேறியதால், அதிர்ச்சியில் அவன் இதயம் உறைகிறது!
ஆரம்பத்தில் இருந்து நம்மை சிரிக்க வைத்த "நாடகம்' இறுதியில் சிலிர்க்க வைக்கிறது.
ராயபுரம் ராதா (பிருந்தா): சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம். சபாகரன் முன்னிலையில் குழுவினரை கலாய்ப்பதில் ஆகட்டும்! சபாகரன் மனைவி சாந்தி கர்ப்பம் தரித்திருப்பதை, சபாகரனுக்கு சொல்லும் தருணத்தில் ஆகட்டும்! அடேங்கப்பா! தூள் கிளப்புகிறார். கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், "என் கதாபாத்திரத்தை வேறு யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்!' என ராதா கெஞ்சும் தருணத்தில் சபாகரனை விட ரசிகர்கள் நெகிழ்ந்து போகிறார்கள். ராதாம்மா... உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் 1975ல் சபா மறுத்ததை போல மறுத்துவிடுங்கள் ப்ளீஸ்....!
லேட் லோகு (பாலாஜி): எந்த ஒரு மேடைக்கும் சரியான நேரத்திற்கு வராததே லோகு லேட் லோகுவாக மாறியதற்கு காரணம்! டி.வி.யோட போட்டி போட முடியுமா?ன்னு கேள்வி வர்றப்போ, "நாம ஏன் ஒவ்வொரு மேடையிலேயும் டிவி வைச்சுடகூடாது? டிவி பார்க்கறவங்க டி.வி. பார்க்கட்டும்! நம்ம நாடகம் பார்க்கறவங்க நாடகம் பார்க்கட்டும்! எப்படி?' சபாகரனிடம் செருப்படி வாங்கி கொடுக்கும் ந்த மாதிரியான ஐடியாக்களின் கிடங்கு லோகு. குழு உடையறப்போ... "எனக்கு கல்யாணம் நடக்கலேன்னாலும் பரவாயில்லை!'ன்னு சபாகரன் பக்கம் போய் நிற்கற நேரத்துலேயும் தனக்கு நிச்சயமான பொண்ணுக்கு திருமணம் நடந்திருச்சு!ங்கறதை 35 வருஷம் கழிச்சு தெரிஞ்சுகிட்டு "கௌரி...'ன்னு அலர்ற நேரத்துலேயும் டாப் கியரில் பறக்கிறார் லோகு.
கலைவாணி (மதுவந்தி அருண்): "கூட்டம் இல்லையா? வெறும் நாற்காலிகளுக்கு முன்னாடி எங்களால நடிக்க முடியாது!'ன்னு சபாகரன் கோவிச்சுட்டு கிளம்பறப்போ, ஒரு ரசிகையா மேடை ஏறும் பார்வையில்லாத பொண்ணு கலைவாணி. "எதையும் பார்க்காம, எல்லாம் இருக்குது!ன்னு நான் நம்பறேன். லைட் அணைச்சுட்ட, எதிர்ல இருக்கற கூட்டம் உங்களுக்கு தெரியவா போகுது! கூட்டம் இருக்கறதா நினைச்சு நீங்க ஏன் நடிக்க கூடாது!' அர்த்தமுள்ள தன் வார்த்தைகளால் "தாயே... சரஸ்வதி! நீ என் கண்ணை திறந்துட்டம்மா!' என சபாகரனை அழைக்க வைத்து, தன்னை நமஸ்கரிக்க வைக்கிறார். கலைவாணியின் நடிப்பில் பூரித்துப்போன சபாகரன் தனக்குள்ளிருந்த ஒய்.ஜி. மகேந்திராவை அவ்வப்போது தலைகாட்ட அனுமதித்தது அழகு.
டைரக்டர் ஏ.ஜே.பாகு (சுப்புணி): மூன்றடி உயரம் உள்ள ஏ.ஜே.பாகுவின் விரிவாக்கம் அஜானபாகுவாம். விஷயம் கேள்விப்பட்டு வெறித்தனமாக சிரிக்கிறார் சபாகரன். "சபாகரா... வாய்ப்பு கேட்டு வந்திருக்கே! எங்க... நடிச்சு காமி! பார்ப்போம். உன் மூணாவது மனைவி சுஜா! இறந்துட்டா. இதான் சிச்சுவேஷன்!' சொல்லிவிட்டு, தன் பின்பக்கத்தை காட்டி நிற்கிறார் ஏ.ஜே.பாகு. "நீங்க பொதுவா எந்த வழியா பார்ப்பீங்க!' சபாகரன் கொளுத்தும் நகைச்சுவை வெடியில், அரங்கம் அதிர்கிறது. "யோவ்! சபாகரா... நடிப்புன்னா இப்படி இருக்கணும்யா!' ஏ.ஜே.பாகுவின் "கண்ட்ரோல் ஆன நடிப்பு' துவங்கிய நொடியில் இருந்து, அவர் நடித்து முடிக்கும் வரை அரங்கம் அமைதியை இழக்கிறது. சுப்புணி... சூப்பர் நீ!
சபாகரன் (ஒய்.ஜி. மகேந்திரா): நடிப்பில் சற்றும் தேறாதவன்... கசப்பான வார்த்தைகளை வீசிவிட்டு, குழுவில் இருந்து பிரிந்து செல்கையில் அவன்மேல் வெளிக்காட்டும் அனுதாபம்! அவன் கிளம்பும் நேரத்தில், அவனை வெறுப்பேற்றி அனுப்பியதன் மூலம் நாடகத்தறையில் இன்னொரு குழுவை உருவாக்கிவிட்ட சந்தோஷம்! தன்னை சினிமாவுக்கு வரச்சொல்லி அழைப்பது "சிவாஜி கணேசன்'என்பது தெரிந்ததும், உடலிலும் காட்டும் பணிவு! மேடையில் தவறு செய்யும் தன் குழுவினர் மீது வெளிப்படுத்தும் கோபம்! அரிதார கோலத்தில் மகனை பார்க்கும் தருணத்தில், முகம் முழுக்க பரவி நிற்கும் பரவசம்! "அரசியல் வாரிசு இருந்தாத்தான் பிரச்சனை; நாடகத்துல வாரிசு வந்தா சந்தோஷம்தான்!' பொடி வைத்து பேசும் குறும்பு! "கலைஞர்கள் உயிரோடு இருக்கறப்போ, அவங்களுக்கு விருது கொடுத்தா சந்தோனுப்பட்டிருவாங்க இல்லையா! அதுக்காகத்தான் இறந்ததுக்கு அப்புறம் விருது கொடுக்கறாங்க!' மனவலியை வெளிக்காட்டும் ஏக்கம்! இப்படி நவரசங்களை அள்ளித்தெளிக்கும் சபாகரனாக ஒய்.ஜி.மகேந்திரா.
கைதேர்ந்த நடிகர்கள்... ஒப்பனை, மேடை அமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு அனைத்திற்கும் திறமையான கலைஞர்கள்... இரண்டரை மணிநேரம் போனது தெரியாமல், திருப்தியுடன் எழுந்தபோது, மனம் முழுக்க... ஓர் நம்பிக்கை இது போன்ற "நாடகம்' அடிக்கடி வந்தால், நாடகங்கள் வளரும். ஓர் ஆசை நாடகங்கள் வாழ வேண்டும். அதற்கு, ஒய்.ஜி.மகேந்திரா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். வாழ்வீர்கள்!

- துரைகோபால்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement