சென்னை : 'நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகியும், ஜாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை' என, வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம், அனைத்து சமூகத்தினருக்கும், பொது மயானத்தை ஏற்படுத்தும்படி அரசை அறிவுறுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகாவில் உள்ளது நவகுறிச்சி கிராமம். இங்கு, வண்டிப் பாதையாக குறிப்பிடப்பட்ட இடத்தில், இறந்தவரின் உடலை புதைத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அறிக்கை
இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரும், ஆய்வுக்குப் பின் அறிக்கை அளித்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'வண்டிப் பாதையில் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது. இதை, அதிகாரிகள் அனுமதித்திருக்கக் கூடாது. எனவே, உடலை தோண்டி எடுத்து, அவர்களுக்கான மயானத்தில் இறுதி சடங்கு செய்ய வேண் டும்' என்று தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, குடியிருப்பு பகுதி அல்லது குடிநீர் ஆதாரம் இருக்கும் பகுதியில் இருந்து, 90 மீட்டருக்குள் இறந்தவர் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது.
பஞ்சாயத்து சட்டத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு வெளியில் உடலை புதைக்க தடை இல்லை. மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில், அனுமதி இல்லாத பகுதிகளில் உடலை புதைக்கவும், எரிக்கவும் தடை உள்ளது.
உடலை புதைக்க, எரிக்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு நடைமுறை உள்ளது. புதைக்கவும், எரிக்கவும், குறிப்பிட்ட இடம் ஒதுக்காத கிராமங்களும் உள்ளன.
அங்கு கிராமத்தில் உள்ள நடைமுறை தான் இருக்கும். அதனால், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மட்டும், அங்குள்ள பழக்க வழக்கங்களில் குறுக்கிட வேண்டாம் என, சட்டம் இயற்றுபவர்கள் கருதி உள்ளனர்.
கடைசி பயணம்
அட்வகேட் கமிஷனரின் அறிக்கையை பார்க்கும் போது, அந்த இடத்தில் பல சடலங்கள் இருப்பது தெரிகிறது. தலைவாசல் போலீசார், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பல ஆண்டுகளாக இடுகாடாக அந்த இடத்தை பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இடுகாடாக அந்த இடத்தை பயன்படுத்தும் வழக்கம் கிராமத்தில் இருந்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
நம் நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகியும், ஜாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை. ஜாதி ரீதியில் தான், தனியாக இடுகாடு, சுடுகாடுக்கு இடம் வழங்கப்படுகிறது. கடைசி பயணத்தின் போதாவது, சமத்துவம் ஆரம்பமாக வேண்டும்.
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதி பாடினார். இந்த, 21ம் நுாற்றாண்டிலும், உடலை புதைப்பதில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். அனைத்து சமூகத்தினருக்கும் என, பொது மயானத்தை அரசு ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (12)
அனைத்து மதங்களுக்கும் பொது சுடுகாடுதான் என்று கூறியிருந்தால் சரியாக இருந்திருக்கும்
பெரியாறு மண்ணுல இன்னமும் ஜாதி இருக்கா?....அந்த பட்டறையில் படிச்சண்ணு சொல்லிகிட்டு திரியிற கோமாளி எல்லாம் ஒழிச்சிடாருண்ணு சொல்றாங்க.....
ஜாதிகள் இன்றளவும் நீடித்து இருப்பதற்கு காரணம் அரசியல் வியாதிகள் ஜாதிகள் இல்லாவிட்டால் அவர்கள் பிழைப்பு நாறி விடும்
செத்தப்புறம் எல்லாம் பிணம் தான். கிராமப்புறங்களில் 5கிமீ க்கு ஒரு நவீன சமூக நீதி சுடுகாடு அமைத்தால், ஜாதி சுடுகாடுகளை ஒழிக்க முடியும். 75ஆண்டு திராவிட ஆட்சியில் தான், ஜாதிப்பிரச்சனைகள் பெருமளவு தலை தூக்கியுள்ளது.
ஜாதிய ஒழிச்சிட்டா தமிழகத்தில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை. அரசியல்வாதிகளுக்கு வேலை இருக்காது. தனி தொகுதி இல்லயென்றாகிவிடும் . பின்னர் ஆ ராசா மற்றும் திருமாவளவன் என்ன செய்வார்கள்.