Load Image
Advertisement

ஆவேச தலைவர் அடங்கிய மர்மம் என்ன?

   ஆவேச தலைவர் அடங்கிய மர்மம் என்ன?
ADVERTISEMENT
''ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்... பேரம் படியலைன்னா, அலைய விட்டே கறக்கணும் ஓய்...'' என்றபடியே, மேல் துண்டால் பெஞ்சை தட்டிவிட்டு அமர்ந்தார் குப்பண்ணா.

''என்னவே புதுமொழி சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம், 'பேப்பர் கப், வாட்டர் பாட்டில்' மற்றும் 'கெமிக்கல்' பொருட்கள் தயாரிப்பு போன்ற சிறு, குறு தொழில் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பிக்கறவாளை அலையவிட்டே நோகடிக்கறா ஓய்...

''ஆன்லைன் வாயிலா மனு செய்யறவாளை, நேரடியா தொடர்பு கொண்டு பேரம் பேசறா... பேரம் படியலைனா, அவா தலைகீழா நின்னாலும் வாங்கவே முடியாத ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி பாடா படுத்தறா ஓய்...

''மனுதாரர் வழிக்கு வந்துட்டா, ஏற்கனவே பேசியதை விட அதிகமா கேட்டு, 'டார்ச்சர்' செய்யறா... கேட்டதை குடுத்துட்டா உடனே அனுமதி கிடைக்கறது... இதனால, புதுசா தொழில் துவங்கறவா குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற முடியாம கிடந்து தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அவசரத்துக்கு விடுப்பு எடுக்க முடியாம, ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலை சொன்னார் அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தெற்கு ரயில்வேயில, ரயில் நிலைய அலுவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், கிளார்க், பாயின்ட்ஸ் மேன், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகள்ல, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியா கிடக்கு வே...

''குறிப்பா, ரயில்கள் பாதுகாப்பா இயங்குற வேலையை பார்க்கிற நிலைய மேலாளர்கள் பணியில, 700 இடங்கள் காலியாயிட்டு... இதனால, இப்ப இருக்கிற ரயில் நிலைய அலுவலர்களுக்கு வேலைப்பளு கூடிட்டு வே...

''அவசரத்துக்கு விடுப்பு கூட எடுக்க முடியாததால, கவனக் குறைவால வேலையில தப்பு செய்யுதாவ... நாளைக்கே ஏதாவது பெரிய விபத்து நடந்துட்டா சிக்கலாகி போயிடுமுல்லா...'' என்றார், அண்ணாச்சி.

''ஆரம்பத்துல ஆவேசமா குரல் குடுத்தவரு, இப்ப அமுங்கி போயிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கோவை - திண்டுக்கல் இடையே, 1,000 கோடி ரூபாய்க்கு மேல செலவழிச்சு, அகல ரயில் பாதை போட்டாங்க... காங்கிரஸ் ஆட்சியில துவங்கப்பட்ட இந்த பணி, 2017ல தான் முடிஞ்சுதுங்க...

''இந்த திட்டத்துல மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறதாகவும், இது பற்றி விசாரணை கமிஷன் வச்சு விசாரிக்கணும்னும், கோவைக்கும், டில்லிக்கும் போயிட்டு இருக்கிற அந்த மக்கள் பிரதிநிதி பகிரங்கமா குரல் குடுத்தாருங்க...

''இந்த திட்டத்துல, 'மெகா' ஊழல் நடந்திருக்கிறதா சில தன்னார்வலர்களும் குரல் குடுத்தாங்க... ஆரம்பத்துல, 'டெரர்' காட்டிய மக்கள் பிரதிநிதி, இப்ப பொட்டிப் பாம்பா அடங்கிட்டாருங்க...

''இது தான், சந்தேகத்தை கிளப்பிடுச்சுங்க... இதுபோன்ற ஊழல் குறித்து முதல்ல ஆவேசமா குரல் குடுத்துட்டு, பின்னாடியே கான்ட்ராக்டர், அதிகாரிகள் கிட்ட, 'லம்பா' கறந்துட்டு, துண்டை மடிச்சு தோள்ல போட்டுட்டு போறது தான் பல அரசியல்வாதிகளோட, 'ஸ்டைல்'னு சொல்றாங்க...

''இவரும் அதே, 'பார்முலா'வை பின்பற்றுறாரோன்னு பலர் கிசுகிசுக்கிறாங்க...'' என, அந்தோணிசாமி முடிக்கவும், கடைக்குள் வந்தவரை பார்த்து, ''வாங்கோ நடராஜன்... என்ன, இப்பல்லாம் இந்த பக்கமே உம்ம பார்க்க முடியல...'' என, குப்பண்ணா பேச்சு கொடுக்க மற்றவர்கள் நடையை கட்டினர்.


வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    நடராஜன் கோவைக்கும், டில்லிக்கும்... நடையாய்நடந்து கடைசியில் ஊழலை கண்டுபிடிக்காவிட்டாலும் அவருக்கு வேண்டியதை சாதித்துவிட்டாரா ? நல்ல MP. மக்கள் சேவகர்..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    குரல் எழுப்புவது, கூட்டம் சேர்ப்பது, கூச்சலிட்டு அழும் பிள்ளைக்கு பழம் கிடைத்ததும் அடங்குவதுபோலத்தான் இந்த 'தலைவர்' மட்டுமில்லை, எல்லா 'கலக குரல்களும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement