மியூச்சுவல் பண்ட்களில் உள்கட்டமைப்பு சார்ந்த நிதிகள், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. அரசின் ஆதரவான கொள்கை முடிவுகள் மற்றும் அதிகரிக்கும் பொது மூலதனம் காரணமாக, உள்கட்டமைப்பு நிதிகள் அதிக பலன் அளித்து வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறை பிரிவில் உள்ள வழக்கமான நிதிகள் சராசரியாக 21 சதவீதம் எனும் அளவில் பலன் அளித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதே காலத்தில் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 50 குறியீடு, 16 சதவீதம் எனும் அளவில் பலன் அளித்துள்ளதாக கருதப்படுகிறது.
முக்கிய துறைகள்
பல்வேறு வகையான மியூச்சுவல் பண்ட்களில், குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்யும், குறிப்பிட்ட கருப்பொருள் நிதிகளில் ஒன்றாக உள்கட்டமைப்பு நிதிகள் அமைகின்றன. நாட்டின் அடிப்படை வசதிக்கு தேவையான உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களை உருவாக்கும் அல்லது செயல்படுத்தும் அல்லது சொந்தமாக கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதிகளாக இவை அமைகின்றன.
எரிசக்தி, கட்டுமானம், தொலைதொடர்பு, கட்டுமான பொருட்கள், ஆட்டோமொபைல், உலோகம், சேவைகள், மூலதன பொருட்கள் ஆகியவை இந்த பிரிவின் கீழ் வருகின்றன. உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன.
கருப்பொருள் சார்ந்த நிதிகள் பல செயல்பட்டு வந்தாலும், அண்மை காலமாக உள்கட்டமைப்பு சார்ந்த நிதிகள் கவனம் ஈர்ப்பதாக கருதப்படுகிறது. பொதுவாக உள்கட்டமைப்பு துறைக்கு அரசின் ஆதரவு மற்றும் பொது முதலீடு முக்கியமானவை.
மீண்டும் வளர்ச்சி
இந்தியாவை பொருத்தவரை, அரசு கொள்கை இத்துறைகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. எரிசக்தி துறையை பொருத்தவரை அரசு பெரும் இலக்கை கொண்டுள்ளது. ரெயில்வே நவீனமயமாக்கல், போக்குவரத்து மேம்பாடு மற்றும் பாதுகாப்பு துறையில் உள்நாட்டு முதலீடு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், 2004 முதல் 2008 வரை உள்கட்டமைப்பு துறை சார்ந்து பல நிதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் உலோகம், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு நிதிகளும் ஏறுமுகத்தில் இருந்தன.
எனினும், சில ஆண்டுகளுக்கு பின் பல்வேறு காரணங்களால் இந்த துறையின் ஈர்ப்பு குறைந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறை முதலீடுகள் காரணமாக இத்துறை மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சந்தை சரிந்த போது, உள்கட்டமைப்பு துறை பங்குகளும் சரிந்தாலும் இவை மீண்டு வந்தன.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், எரிசக்தி திட்டங்கள், சாலை வசதிகள், தொலைதொடர்பு வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால், உள்கட்டமைப்பு துறை வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறை நீண்ட காலம் சார்ந்தது என்பதால், நீண்ட கால இலக்கு கொண்ட முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எனினும், பொருளாதார தேக்கநிலை, அரசின் கொள்கை மாற்றம் போன்றவற்றின் பாதிப்பு இடர்கள் கொண்டிருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சம பங்கு முதலீட்டில் இவை 5 சதவீதம் வரை இருக்கலாம் என்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!