Load Image
Advertisement

தங்கம், வைர நகைகள் கொள்ளை 2 மணி நேரத்தில் கைது: கிரைம் ரவுண்ட் அப்

Tamil News
ADVERTISEMENT


தாம்பரம், : தாம்பரம் அருகே செம்பாக்கம் நகைக்கடையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று சிறுவர்களை, இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கத்தில், 'ப்ளூ ஸ்டோன்' நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள், கடையை பூட்டிச் சென்றனர்.

எச்சரிக்கை ஒலிநேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி அடித்தது.

சுதாரித்த அவர், நகைக்கடையில் கொள்ளை நடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற சேலையூர் போலீசார், ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்தனர். உள்ளே, பார்வையாளர்களை கவருவதற்காக கண்ணாடி அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி மதிப்பு தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரிந்தது.

உடனடியாக, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், ஒல்லியான உருவம் உடைய வாலிபர், தன் சட்டையால் முகத்தை மறைத்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த காட்சியை வைத்து, போலீசார் விசாரணையை துவக்கினர்.

மூன்று சிறுவர்கள்இதில் செம்பாக்கம், சிவகாமி நகர், திருவள்ளூர் தெருவில் அறை எடுத்து தங்கியிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செம்பாக்கம் சென்ற போலீசார், கொள்ளையனை பிடித்து நகைகளை மீட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட மற்றும் திட்டம் தீட்டிய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீசார் கூறியதாவது:சினிமா பாணியில், கடையின் பின்புறமுள்ள குழாய்களை பிடித்து, கொள்ளையன் மாடிக்கு ஏறியுள்ளான்.

அங்கு, மின்துாக்கி இயக்கப்படும் கட்டுமான கூரையை உடைத்து இறங்கிய கொள்ளையன், மின் துாக்கியின் கதவையும் லாவகமாக உடைத்து, கடையினுள் புகுந்துள்ளான்.

ஒப்படைப்புமாதிரிக்காக வைக்கப்பட்ட நகைகளை கொள்ளையடித்த பின், லாக்கரை உடைத்து நகைகளை திருட முயன்றுள்ளான். லாக்கரை உடைக்க முடியாததால், கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

லாக்கரை அனுமதியின்றி திறந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் மொபைல் போனுக்கு எச்சரிக்கை ஒலி அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால், ஊழியர் ஜெகதீசன் மொபைல் போனுக்கு அதிகாலையில் அபாய ஒலி அடித்துள்ளது. அவர், பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசிய பின், போலீசாருக்கு தாமதமாக தகவல் தெரிவித்தார்.

எனினும், புகார் அளித்த இரண்டரை மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது:அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், நகைக்கடை அருகிலே ஜூஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளனர். நேரம் பார்த்து, நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.

எதுவும் தெரியாததுபோல், நகைக்கடை பகுதியில் திரிந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்ததில், நகைக்கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு கேட்கும் நபர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து, முறையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வீடு, கடைகளை வாடகைக்கு விடவேண்டும்.

இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கஞ்சா, போதை மாத்திரையுடன் பெண் உள்ளிட்ட 8 பேர் கைதுசென்னை : திருவேற்காடு, பெரியார் நகர், நான்காவது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், கஞ்சா விற்கப்படுவதாக, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், கோணிப்பையில் 11 கிலோ கஞ்சா இருந்தது.
Latest Tamil News
விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த பாஸ்கர், 38, நெய்வேலியைச் சேர்ந்த பிரதீப் மோகன், 26, மாங்காடைச் சேர்ந்த ஜேம்ஸ் தாஸ், 23, மற்றும் வீட்டின் உரிமையாளர் சிவசங்கரி, 38, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், செங்குன்றம் - கோணிமேடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு போலீசார், 'ஹோண்டா சிடி - 100' பைக்கில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10.2 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர், வெள்ளானுார் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவத்தில், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி பகுதியில் இளைஞர்களை குறிவைத்து, ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனை செய்ததை அறிந்த செம்மஞ்சேரி போலீசார், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவா, 22, இனியன், 24, பிரவின், 19, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 350 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜி.பி.எஸ்., மூலம் கொள்ளை ஒன்பது பேர் கும்பல் கைதுபெலகாவி, : ஜி.பி.எஸ்., உதவியுடன் 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
Latest Tamil News
உத்தர கன்னடா சித்தாபுரா அருகே உள்ள நஜ்ஜுரை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜாவேத் கான், 45. இவர், அக்டோபர் 19ம் தேதி, பெலகாவிக்கு நிலம் வாங்குவதற்காக, 50 லட்சம் ரூபாயுடன் காரில் சென்றார். அங்கு நிலத்துக்கான பேரம் படியாததால் பணத்துடன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

இதை அறிந்த மர்ம நபர்கள் பனவாசி அருகில் காரை மடக்கினர். தொழிலதிபரை தாக்கி 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். சிர்சி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக நேற்று ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13.82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், 'கொள்ளையர்கள் தொழிலதிபரின் காரில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி, அவரின் நடமாட்டத்தை கண்டறிந்தனர். பின் பனவாசி அருகில் பதுங்கி இருந்து கொள்ளையடித்தனர்' என்பது, தெரியவந்தது.

அருவியில் 'செல்பி' எடுத்த 4 மாணவியர் பலிபெலகாவி : சுற்றுலா சென்ற மாணவியர் அருவியில் 'செல்பி' எடுக்கும்போது நான்கு பேர் தவறி விழுந்து பலியாயினர். ஒருவர் உயிர் தப்பினார்.
Latest Tamil News
பெலகாவியில் உள்ள தனியார் கல்லுாரியை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாணவியர் நேற்று கிதவாடா அருவிக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் சிலர் அருவியில் குளித்து கொண்டு, போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.

ஐந்து பேர் மட்டும் அருவியின் உச்சிக்கு சென்று 'செல்பி' எடுக்க முயன்றனர். அப்போது கால் தவறி, தண்ணீரில் விழுந்தனர். இதில், நான்கு மாணவியர், தண்ணீரில் மூழ்கி பலியாயினர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பெலகாவியின் உஜ்வல் நகரை சேர்ந்த அசியா முஜாவர், 17, ஆனகோளாவை சேர்ந்த குதத்ஷியா, 20, ஜுட்பட காலனியை சேர்ந்த ருக்கசார் பிஸ்மி, 20, தஸ்மியா, 20 ஆகியோர் இறந்தவர்கள்.

தீயணைப்பு படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் நான்கு மாணவியரின் உடல்களை மீட்டனர். உயிர் தப்பிய மாணவி, பெலகாவி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement