Load Image
dinamalar telegram
Advertisement

கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியை ஆஜர்படுத்துக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய பெண்ணை இன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவரும் உடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நட்பாக பழகினர். இருவரும் 2015 ஜூன் 23 ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தனர். இரவு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.

நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை, உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது.


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆவாரம்பாளையம் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கஸ்துாரிபட்டி அருண், குடம்பன்காடு குமார், கவுண்டம்பாளையம் காட்டுவளவு சதீஷ்குமார், திருச்செங்கோடு சிக்கநாயக்கன்பாளையம் ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஈரோடு சந்திரசேகரன், சங்ககிரி இருகலுார் பிரபு, மிலிகரன்தோட்டம் கிரிதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மார்ச் 8 ல் மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். சங்கர் உட்பட 5 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு:கீழமை நீதிமன்ற விசாரணையின் துவக்க கட்டத்தில் அரசு தரப்பு முக்கிய சாட்சியாக பெண் இருந்துள்ளார். அவரது வாக்குமூலம் கீழமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. பின் அவர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். இடைப்பட்ட நேரத்தில் ஏதோ நடந்துள்ளதாக தெரிகிறது.

சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவது தற்போது வழக்கமாகிவிட்டது. சாட்சிகளை பாதுகாப்பதில் அரசின் கடமையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும்போது நீதிமன்றங்கள் மவுனமாக பார்வையாளர்களாக இருந்தால் அது நீதிபரிபாலன முறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சாட்சிகளிடமிருந்து உண்மையை வெளிக்கொணர கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை தெரிவிக்க எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை
.

தற்போது அந்த பெண் நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான வீட்டில் வசிக்கிறார். அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சந்திக்கவோ அல்லது அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் வேறு யாரும் அலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பிட்ட பெண் மனதில் எந்த பயமும் இல்லாமல் இந்நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக, பாதுகாப்பு வழங்குவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அவரை இன்று (நவ.,25) இந்நீதிமன்றத்தில் பாதுகாப்புடன் நேரடியாக நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement