Load Image
dinamalar telegram
Advertisement

தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது அரசின் கடமை  உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கலை, கலாசாரம், பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்கும் வரலாற்று மற்றும் தொல்லியல் நினைவுச் சின்னங்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி மலைக்கோட்டை நலச் சங்கம் செயலாளர் சுந்தரராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி மலைக்கோட்டையில் பல்லவர் குகைக் கோயிலின் புராதன நினைவுச் சின்னம் உள்ளது. அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதி. அருகே பசுமடம் தெருவில் ஒரு தனியார் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கட்டடம் கட்ட அனுமதித்தால் நினைவுச் சின்னத்தை மக்கள் பார்வையிட இயலாது.

கட்டுமானத்தை அகற்றக்கோரி தொல்லியல்துறை, அறநிலையத்துறை, திருச்சி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: மனுதாரர் தவறான நோக்கில் மனு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இடம் குத்தகைக்கு விடப்பட்டது. அதில் நிரந்தர கட்டுமானம் எதுவும் அமைக்கவில்லை. தற்காலிக தகர கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பழங்கால நினைவுச் சின்னத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதை மறைக்கவும் இல்லை. அப்பகுதி தாயுமானசுவாமி கோயிலின் 30 சொத்துக்கள் வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

அங்கு பல கான்கிரீட் கட்டுமானங்கள் உள்ளன. கோயில் திருவிழா, பராமரிப்பு, பூஜைகள், பணியாளர்களுக்கான சம்பளத்திற்கு குத்தகைதாரர்களிடமிருந்து வரும் வாடகையையே கோயில் நிர்வாகம் நம்பியுள்ளது. கட்டுமானத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: கலை, கலாசாரம், பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்கும் வரலாற்று மற்றும் தொல்லியல் நினைவுச் சின்னங்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். இதில் தகுந்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வது அரசின் கடமை.

திருச்சி பல்லவ குகைக் கோயில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட பழங்கால நினைவுச்சின்னம். மனுவை அரசுத் தரப்பில் பரிசீலித்து, ஆய்வு நடத்த வேண்டும். கட்டுமானத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தால் சட்டப்படி அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement