Load Image
Advertisement

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை நவ.29க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 29க்கு ஒத்திவைத்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் மஹாராஷ்டிராவில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி 2016ல் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை தமிழகத்தில் முன் எடுத்தனர். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக சட்டசபையில் 2017ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின் ஜல்லிக்கட்டு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும், 'பீட்டா' எனப்படும் பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 2018ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த அவசர சட்டம், விலங்குகள் துன்புறுத்தப்படுவதை நிலைநிறுத்துகிறா அல்லது விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 'ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்தது. இதில் விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மனிதர்கள் மட்டுமின்றி மாடுகளும் உயிரிழக்கின்றன. படுகாயங்களும் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டை அனுமதிக்க கூடாது. விலங்குகளின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் நோக்கத்தையே தமிழக அரசின் அவசர சட்டம் சிதைக்கிறது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

'ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் இயற்றிய தமிழக சட்டசபையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம்' என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 29க்கு ஒத்தி வைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement