Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., நிர்வாகி கழுத்தறுத்து கொலை; காரில் கடத்திக் கொன்ற கும்பல் கைது

Tamil News
ADVERTISEMENT
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே, பா.ஜ., நிர்வாகியை காரில் கடத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி அருகே, தனியார் கல் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செல்லும் பாதையில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலையானவர் திருப்பத்துார், கலைஞர் நகரைச் சேர்ந்த களிக்கண்ணன், 52, என்பதும், திருப்பத்துார், பா.ஜ., நகர செயலராக இருப்பதும் தெரிந்தது. அவருக்கு திருமணமாகி, ஐந்து குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார்.

கொல்லப்பட்ட களிக்கண்ணன், ரியல் எஸ்டேட், இரும்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துள்ளார். அவருக்கும், ஹரி விக்னேஷ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன், ஹரி விக்னேஷ் தாக்கியதில் களிக்கண்ணன் காயம் அடைந்துள்ளார். திருப்பத்துார் போலீசில் இது குறித்த வழக்கு பதிவாகி இருந்தது.

இந்நிலையில், திருப்பத்துார், பஜார் தெருவில் வாட்டர் கேன் குடோன் ஒன்றில் நேற்று முன்தினம் இரவில் களிக்கண்ணன் தனியாக இருந்துள்ளார்.அப்போது அந்த குடோனுக்கு, வெள்ளை நிற, 'டாடா சபாரி' காரில் கும்பல் வந்துள்ளது. அவர்கள் களிக்கண்ணனை தாக்கி, காரில் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என, போலீசார் கருதினர்.

தனிப்படை போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆராய்ந்ததில், ஹரி விக்னேஷ், அவர் கூட்டாளிகள் கோகுல், சிவக்குமார், துரை, அருண் ஆகியோர் இக்கொலையை செய்திருக்கலாம் என, தெரிந்தது. களிக்கண்ணன், 15 நாட்களுக்கு முன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டுமென, திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாரின் மெத்தனத்தை கண்டித்து, பா.ஜ., மாநில செயலர் வெங்கடேசன் தலைமையில், பா.ஜ.,வினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாலை, ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே சென்ற டாடா சபாரி காரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த ஹரி விக்னேஷ், 24, கூலிப்படையைச் சேர்ந்த ஆந்திர மாநிலம், குப்பம் சாந்திபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 18, ஆனந்த், 22, மணிகண்டன், 22, கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த அருண், 23, திருப்பத்துார் அருண்குமார், 25, ஆகிய, ஆறு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

குழந்தையை கொன்று தாய் தற்கொலைதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே வெங்கடாஜலப்புரம் மகேந்திரன் 30. இவரது மனைவி பிரவீனா 25. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை அகிமா உள்ளது. மகேந்திரன் தன் தந்தையுடன் சேர்ந்து பால் வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை அனைவரும் வெளியே சென்று இருந்த நேரம் பிரவீனா வீட்டில் சேலையில் குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்து தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்தனர்.

திருட்டை தடுத்ததால் வெறி; முதியவர் அடித்துக் கொலைவீரபாண்டி: 'டீ மாஸ்டர்' திருட முயன்ற போது, அதை தடுத்ததில் ஏற்பட்ட தகராறில், 'தாபா' ஹோட்டல் உரிமையாளரின் தந்தை கொலை செய்யப்பட்டார். டீ மாஸ்டரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 60. இவரது மகன் நாகராஜன், 31; கொண்டலாம்பட்டி அருகே, 'தாபா' ஹோட்டல் நடத்துகிறார். அங்கு கோவை, காரமடையைச் சேர்ந்த ஜோசப், 44, 'டீ' மாஸ்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நாகராஜன், தன் தந்தையை தாபாவில் படுத்துக்கொள்ள அறிவுறுத்தி வீட்டுக்கு சென்றார்.

இரவு, 11:00 மணிக்கு, நாகராஜனின் பெரியப்பா மாதேஸ்வரனின் மகன் ராஜாவுக்கு போன் செய்த டீ மாஸ்டர் ஜோசப், 'கந்தசாமி யாருடனோ தகராறில் ஈடுபட்டுள்ளார்; உடனே வாருங்கள்' எனக்கூறி, அழைப்பை துண்டித்து உள்ளார். உடனே, ராஜா மற்றும் நாகராஜன் வந்து கந்தசாமியை தேடியபோது, அருகில் உள்ள மரத்தடியில் தலை, கழுத்து பகுதிகளில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார்; போன் செய்த ஜோசப்பை காணவில்லை.

இதுகுறித்து, நாகராஜன் அளித்த தகவல் படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஜோசப்பின் மொபைல் போனை கண்காணித்தபோது, அரியானுாரில் அவர் இருந்தது தெரிந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்தனர். ஜோசப், பழைய கடையில் சில பொருட்களை திருடி விற்றுள்ளார். அதேபோல், இந்த கடையிலும் மோட்டார், இரும்பு கம்பிகளை திருடிய போது கந்தசாமி தடுத்துள்ளார். இதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கம்பியால் தாக்கியதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை ஜோசப் ஒப்புக்கொண்டார். ஜோசப்பை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

எலிக்கு வைத்த மின்வேலி விவசாயிக்கு எமனானதுதி.மலை : திருவண்ணாமலை அருகே, மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்பத், 54; இவர், தன் நிலத்தில் நெல் பயிர் செய்துள்ளார். வயலில் அதிக எலித்தொல்லையால், வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வயல் ஓரத்தில் சம்பத் நடந்து சென்ற போது, தடுமாறி மின்வேலியில் சிக்கி, மயங்கி விழுந்தார்.

அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள், அவரை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். வயலில் மயங்கி கிடந்தவரை மீட்டு, திருவண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேசிய நிகழ்வுகள்:விஷ ஊசி செலுத்தி மனைவி கொலை; தற்கொலை நாடகமாடிய கணவர் கைது

புனே: மஹாராஷ்டிராவில் விஷ ஊசி செலுத்தி மனைவியை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Latest Tamil News
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராக பணியாற்றி வருபவர் ஸ்வப்னில் சாவந்த், 23. இவர், ஐந்து மாதங்களுக்கு முன் பிரியங்கா க்ஷேத்ரே என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதே நேரத்தில் உடன் பணியாற்றும் செவிலியர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த சாவந்த், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து விஷத்தன்மை உள்ள மருந்தை எடுத்து வந்து மனைவிக்கு ஊசி வாயிலாக செலுத்தியுள்ளார். பின், ஆபத்தான நிலைக்குச் சென்ற மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுஉள்ளார். அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். போலீஸ் விசாரணையில் பிரியங்கா கையெழுத்திட்ட தற்கொலை குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சாவந்த் மீது குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கை போலீசார் பதிவு செய்தனர். ஆனால், போலீசார் மேலும் நடத்திய விசாரணையின்போது தான், சாவந்த் தன் மனைவியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததும், அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார், சாவந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

'காஸ்' சிலிண்டர் வெடித்து தாய், 4 வயது மகன் பலி

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் 'காஸ்' சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய், மகன் இருவரும் பலியாகினர்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் சந்திமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், தாய் மற்றும் 4 வயது மகன் என இரண்டு பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒடிசாவில் பெண் நக்சல்கள் இருவர் சுட்டுக்கொலை

புவனேஷ்வர் : ஒடிசாவில், பெண்நக்சலைட்டுகள் இருவர் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒடிசாவில் போலாங்கீர்மாவட்டத்தில் உள்ள காந்தமர்தன் மலைப்பகுதியில், நக்சலைட்டுகளை தேடும் பணியில் மாநில சிறப்பு காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வனப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சில நக்சலைட்டுகள் முகாமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் வீரர்களை நோக்கி சுட்டனர். உடனடியாக பதிலடி கொடுத்த வீரர்கள், பெண் நக்சலைட்டுகள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement