சிறுமலைக்கோட்டையில் நெல் கொள்முதல் கோடவுன்
திருவாடானை,-திருவாடானை தாலுகா சிறுமலைக்கோட்டையில் நெல் கொள்முதல் கோடவுன் கட்டுவதற்காக 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா நெற்களஞ்சியமாக திகழ்கிறது. நெல் சாகுபடி விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் அந்தந்த தாலுகாக்களில் ஆண்டுதோறும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள்நடப்பது வழக்கம்.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
திருவாடானை தாலுகாவில் கடந்தாண்டு 10க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது.
கொள்முதல் செய்யப்பட்ட மூடைகளை பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் தொடர்ந்து பெய்த மழையால் மூடைகள் நனைந்து சேதமடைந்தது. இதனை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர். இதையடுத்து விவசாயிகள், நெல் மூடைகளை பாதுகாக்கும் வகையில் கோடவுன் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கடந்த செப்.,ல் கைத்தறித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திரபிரதாப் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் அலுவலர்கள் சிறுமலைக்கோட்டையில் நெல் கொள்முதல் கோடவுன் கட்டும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.
இது குறித்து தாசில்தார் தமிழ்செல்வி கூறியது:
சிறுமலைக்கோட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் கோடவுன் கட்ட 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடமும், தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் இடமும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!