ADVERTISEMENT
சிவகாசி- -கொங்கலாபுரம் ஊராட்சியில் படிக்க பயன்பட வேண்டிய நுாலகம் குடோனாகவும் ,ஊராட்சி அலுவலகமாகவும் மாறியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் கொங்கலாபுரம் ஊராட்சியில் 2007 ல் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில மாதங்கள் மட்டுமே நுாலகம் செயல்பட்டு வந்த நிலையில், அதன் பின்னர் காட்சி பொருளாக மாறியது.
நுாலகத்திற்கு என கொண்டு வரப்பட்டிருந்த புத்தகங்கள் மாயமாகின. தற்போது இந்த நுாலகம் ஊராட்சியில் நடக்கின்ற பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களான சிமின்ட், குழாய் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் குடோனாக மாறிவிட்டது.
கொங்கலாபுரம் ஊராட்சி அலுவலகம் 17 கி.மீ., துாரத்தில் உள்ள மானகசேரியில் உள்ளது. இதனால் ஊராட்சி தலைவர் அவ்வப்போது, நுாலகத்தை ஊராட்சி அலுவலகமாகவும் பயன்படுத்துகின்றார். கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்திருப்பதால் மக்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். அதே நேரத்தில் நுாலகத்திற்கு என கட்டப்பட்ட கட்டடம் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுத்தபடுவதால் மக்கள் பெரிதும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே நுாலக கட்டடத்தை சீரமைப்பதோடு, புத்தகங்களுக்கு ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!