ADVERTISEMENT
புதுச்சேரி-டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்துகள் விற்பதை தடுக்க அனைத்து மருந்தகங்களிலும் சி.சி.டி.வி., பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் வல்லவன் கூறினார்.
மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து வடிவமைத்துள்ள, போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்கள் அனைத்து மருந்து கடைகளிலும் வைக்கப்பட உள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழிப்புணர்வு போஸ்டர்களை கலெக்டர் வல்லவன் வெளியிட்டு கூறுகையில், புதுச்சேரியில், போதை பழக்கத்தை ஒழித்திடும் பொருட்டு, 'எச்' மற்றும் 'எச்1' வகை மருந்துகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கக்கூடாது என அனைத்து மருந்தகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கண்காணித்திட, அனைத்து மருந்தகங்களிலும் சி.சி.டி.வி., கட்டாயம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் கூறுகையில், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு எளிதாக போதை பொருட்கள் கிடைக்கக்கூடாது.
இதனைக் கட்டுப்படுத்திட அனைத்து மருந்து கடைகளிலும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதில்லை என்ற விழிப்புணர்வு பதாகைகள் பொருத்தப்படுகிறது என்றார்.
தொடர்ந்து இந்த விழிப்புணர்வு போஸ்டர்களை மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அனைத்து மருந்தகங்களிலும் வழங்கி வெளியில் பொருத்தும் படி அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில மருந்து வணிகர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!