Load Image
dinamalar telegram
Advertisement

நெட் படம் பஞ்சு கொள்முதலுக்கு களமிறங்கிய நுாற்பாலைகள்   நுால் கொள்முதலுக்கு தயாராகும் உற்பத்தியாளர்கள்

திருப்பூர்;ஏற்றுமதி ஆர்டர் விசாரணையை தொடர்ந்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நுால் கொள்முதலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், அக்., மாதம் முதல் வாரத்தில் இருந்தே பருத்தி வரத்து துவங்கியது. துவக்கத்தில், பருத்தி பஞ்சு விலை, ஒரு கேண்டி, 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது; மாதக்கடைசியில், 70 ஆயிரம் ரூபாயை கடந்தது.

வரத்து அதிகரித்த பின்னரும், பஞ்சு விலை சீரற்ற நிலையில் இருக்கின்றன. இதனால், நுாற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றன. கடந்த ஆண்டு, வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்ந்ததால், இந்தாண்டும் விலை உயருமோ என, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டர் விசாரணையை முடித்துள்ளன; பல்வேறு நாடுகளின் வர்த்தகர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். விலை குறைவாக இருக்கும் போதே, நுால் கொள்முதல் ஆர்டர் கொடுக்கவும் துவங்கி விட்டன.

நுாற்பாலை தரப்பினர் கூறியதாவது:

நுால் வர்த்தக விசாரணை, கடந்த அக்., மாதத்தை காட்டிலும், இம்மாம் நன்றாக இருக்கிறது; விசாரணை மட்டுமல்லாது, கொள்முதல் ஆர்டர்களும் கிடைக்கின்றன. பஞ்சு விலை நிலையில்லாமல் இருப்பதால், இனியும் நுால் விலை குறைய வாய்ப்பில்லை.

'வார்ப்' நுால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வடமாநில விவசாயிகள், பருத்திக்கு, கிலோ 80 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விற்கின்றனர். இதனால், பஞ்சு விலை இனியும் குறையாது. பருத்தி விற்பனை வேகமெடுக்காமல் இருப்பதால், 'ஜின்னிங்' பேக்டரிகளில் இருந்து, பஞ்சு வரத்தும் வேகமெடுக்கவில்லை.

ஒரு கிலோ பருத்தியில், 33 சதவீதம் மட்டுமே பஞ்சு கிடைக்கும்; மீதி, பருத்திக்கொட்டையுடன் கழிக்கப்படும். இதனால், ஜின்னிங் பாக்டரியில், பஞ்சு உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக ஈடுபாடு காட்டாமல் இருந்த, பின்னலாடை நிறுவனங்கள், பஞ்சு கொள்முதலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சீரற்ற விலையால் சிரமம்

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''பஞ்சு விலை கடந்த சில நாட்களாக, நிலையில்லாமல் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. காரணமே இல்லாமல், பஞ்சு விலை, ஒரு கேண்டி 72 ஆயிரம் ரூபாயை தாண்டிவிடுகிறது. கடந்த ஆண்டில் உருவான குழப்பம் மீண்டும் வந்துவிடக்கூடாது. மத்திய அரசும், இந்திய பருத்தி கழகமும், பருத்தி சீசன் துவங்கிய பின், ஆறு மாதங்கள் வரை, பஞ்சு விலை சீராக இருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement