பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல, 930 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும், என, அரசு அறிவித்தது.
இதற்கு, பி.ஏ.பி., விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், திட்டத்தை செயல்படுத்த 'டெண்டர்' அறிவிக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி., விவசாயிகள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., தவிர மற்ற கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், காவிரியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக - கேரளா ஒப்பந்தத்தில் செயல்படும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்தால், இருமாநில ஒப்பந்தம் பாதிக்கும் என, விவசாயிகள், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரிய, மதுரை தலைமை பொறியாளர் முருகேசன், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம், அரசு மட்டத்தில் மறுபரிசீலனையில் இருப்பதால், திட்டத்துக்கான, 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மிகுந்த மகிழ்ச்சி
பரமசிவம், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர்:
ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் போராட்டக்குழு, பி.ஏ.பி., விவசாயிகள், ஆதரவு அளித்த அனைத்து சங்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரு அணைகள் நிலுவை
செந்தில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் நலச்சங்க செயலாளர்:
ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டதும், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தோம். விவசாயிகள் ஒன்றாக இணைந்து போராடினோம். தற்போது, டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது. பி.ஏ.பி., விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவுக்கு நன்றி
நித்தியானந்தன், பி.ஏ.பி., திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்:
பி.ஏ.பி., பாசனம், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய, பொள்ளாச்சி மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று அரசு மறுபரிசீலனை செய்வதாகவும், அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இது, பொள்ளாச்சி மக்களின் வாழ்வாதாரத்தை காக்கின்ற செயலாகும். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இத்திட்டத்தை ரத்து செய்ய ஒன்றாக நின்று குரல் கொடுத்த விவசாயிகள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்வாதார திட்டம்
பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை தலைவர் திருப்பூர்:
ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல அறிவிப்பு வந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு கொடுக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினோம். அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வராததால், போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு, திருமூர்த்தி, ஆழியாறு பாசன விவசாயிகளுடன் பேச்சு நடத்தியது.
அதில், பி.ஏ.பி., விவசாயிகள் அனுமதி இல்லாமலும், பாசனத்துக்கு பாதகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. தற்போது, டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. விவசாயிகளின் குரலுக்கு அரசு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!