Load Image
Advertisement

சங்பரிவார் அமைப்புகள் நாளை ஆலோசனை சென்னையில் நாளை துவக்கம்

சென்னை:லோக்சபா தேர்தலுக்கான செயல் திட்டங்களை உருவாக்கவும், சங் பரிவார் அமைப்புகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., - ஹிந்து முன்னணி உள்ளிட்ட, 30-க்கும் அதிகமான சங்பரிவார் அமைப்புகளின் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நாளை துவங்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்புகள், 'சங் பரிவார்' அமைப்புகள் என அழைக்கப்படுகின்றன.

இந்த அமைப்புகள் அனைத்தும், ஆண்டுக்கு ஒருமுறை மாநில, தேசிய அளவில் கூடி, அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்களை வகுப்பது வழக்கம். இதை 'சமன்வய பைட்டக்' என்பர்.

தமிழகத்திற்கான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அண்ணா நகரில் நாளை துவங்குகிறது.

இதில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய இணைப் பொதுச் செயலர் அருண்குமார், தென்னிந்திய தலைவர் வன்னியராஜன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம், பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், 30-க்கும் அதிகமான சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள், இரண்டு நாட்களும் அங்கேயே தங்க வேண்டும்.

அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை தொடர் நிகழ்வுகள் இருக்கும். காலை, மாலை கட்டாயம் உடற்பயிற்சி உண்டு.

பா.ஜ., உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்பினரும், கடந்த ஓராண்டில் செய்த பணிகள், சந்தித்த சவால்கள், பிரச்னைகள், சாதனைகள் குறித்தும், அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும், அறிக்கை அளிக்க உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு தி.மு.க., அரசு தடை விதித்தது; பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் நடத்த தி.மு.க., அரசு அளிக்கும் நெருக்கடிகள்; சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடும் சங் பரிவார் அமைப்பினர் கைது; பா.ஜ., உட்கட்சி பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களால் ஏற்படும் சிக்கல்கள், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறினார்.

வரும், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட பா.ஜ., வியூகங்கள்; தேர்தல் பணிகளில் சங் பரிவார் அமைப்புகளின் பங்களிப்பு; தேர்தல் பணிக்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட, முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என, பா.ஜ.,வினர் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement