வேதம் ஆகம விதி வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்டவற்றை முறைப்படி கற்க 10 ஆண்டாகும் என்ற நிலையில் தமிழக கோயில்களில் அர்ச்சகராக பணிபுரிய ஓராண்டு பயிற்சி போதும் என்ற அறநிலையத்துறை அறிவிப்புக்கு ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் தி.மு.க. அரசின் கொள்கை முடிவால் அதன் ஒரு பகுதியாக 5 ஆண்டு அர்ச்சகர் பயிற்சியை ஓராண்டு நடத்தினால் போதும் என விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அர்ச்சகர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சயை ஏற்படுத்திஉள்ளது.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் பட்டாச்சாரியார் சுதர்சனம்:
ஸ்ரீரங்கம் குடவாசல் திருவல்லிக்கேணி (வைணவ) உள்ளிட்ட பல இடங்களில் ஜீயர்கள் மேற்பார்வையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் வேதாந்தம் ஆகம விதி வாஸ்து சாஸ்திரம் தேவ மறையடி சாஸ்திரம் ஆகியவற்றை முறைப்படி கற்க குறைந்தது 10 ஆண்டாகும். ஒரே ஆண்டில் கற்பது மிகவும் சிரமம்.
சேலம் கோட்டை அழகிரி நாதர் கோயில் அர்ச்சகர் மோகன்:
கோயில் கட்டுதல் குடமுழுக்கு நித்திய ஆராதனை செய்தல் திருவிழாக்கள் முதலியவற்றை நடத்துவதற்கு நன்கு வேதங்களை கற்றுணந்தவர்கள் தேவை. ஓராண்டில் பாதி கிணற்றை கூட தாண்ட முடியாது. புடம் போட்ட தங்கம் போன்று அர்ச்சகர் உருவாக 5 ஆண்டுக்கு மேல் பயிற்சி பெற வேண்டும்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் பிரசன்ன குமார்:
ஓராண்டில் அர்ச்சனையை கூட முழுமையாக செய்ய முடியாது.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்:
சகஸ்ர நாமம் ஹோமம் பாராயணம் என ஆன்மிக புரிதலை ஓராண்டில் பெற்று விட முடியாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கு மேலாகும். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் கணேசன்: குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அர்ச்சகர் பயிற்சி பெற்றால் தான் ஓரளவு கற்றுக்கொள்ள முடியும். அடிப்படைகளை கற்றுக்கொள்ளவே 6 மாதங்கள் ஆகும். ஆகம விதிகளை மீறி செயல்பட்டால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஈரோடு அர்ச்சகர் சமஸ்கிருத ஆசிரியர் சூ.சுந்தரநாராயணன்:
ஆன்மிகமும் தெய்வ வழிபாடும் பக்தர்கள் மனம் சார்ந்தவை. காலம் காலமாக தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஆகம விதிகள் வழிபாட்டு முறை பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வகுத்து வைக்கப்பட்டுள்ளன. குருக்கள் அர்ச்சகர் பட்டாச்சாரியார் பூசாரிகள் என யாராக இருந்தாலும் வகுக்கப்பட்டுள்ள ஆகம விதிகள் சம்பிரதாயங்கள் வழிபாட்டு முறைகளை முறையாக
பின்பற்ற வேண்டியது அவசியம். ஐந்தாண்டாக இருந்த அர்ச்சகர் பயிற்சியை ஓராண்டாக குறைத்தால் அவர்களால் எதையும் முழுமையாக கற்க முடியாது.
ஈரோடு அய்யப்ப சேவா சமாஜம் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன்:
சைவத்திலும் வைணவத்திலும் ஆகமங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக கற்றுத்தான் பூஜைகளில் ஈடுபட வேண்டும். எல்லாரும் எல்லா கோயில்களிலும் பூஜை செய்யலாம் என்பது ஏற்புடையதல்ல. நான் பிராமணராக இருந்தாலும் சிவன் கோயில் பெருமாள் கோயில் காளி கோயில் மாரியம்மன் கோயில்களில் எல்லாம் பூஜை செய்துவிட முடியாது.
ஈரோடு ஓதுவா மூர்த்திகள் நலச்சங்க செயலாளர் சாமிநாதன்:
ஓராண்டு படிப்பு என்பது முழுமையான ஓதுவராக மாற்றாது. ஓராண்டில் அடிப்படையான விஷயங்களை கூட கற்க முடியாது.
ஈரோடு அகத்தீஸ்வரர் கோயில் சிவனடியார் கோபால்:
ஒழுக்கம் அடிப்படை குருமரபுகளை பற்றி தெரிந்து கொள்ளவே 2 ஆண்டுகள் ஆகும். தமிழில் உள்ள தேவாரம் திருமந்திரம் பாசுரங்களில் உள்ள இலக்கணங்களை இலக்கியங்களை புரிந்து கொள்ள ஓராண்டு போதாது.
தமிழ்நாடு பிராமணர் சங்க நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகா கிளை தலைவர் சிவஸ்ரீ செல்லப்பா சிவாச்சாரியார்:
பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் அர்ச்சகராக இருந்து வருகிறோம். அர்ச்சகராகி பூஜை செய்ய 12 ஆண்டு பயிற்சிபெற்று அதன் வழிமுறைகளை கற்றுக்கொண்டு வந்துள்ளேன். ஆனால் நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. ஒரே ஆண்டில் அர்ச்சகராக படித்து பூஜை செய்யலாம் என்பது சாத்தியமே கிடையாது. இதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.வேதம் என்பது கடல். ஓராண்டில் கற்று அர்ச்சகர் ஆவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் பழைய விதிமுறைப்படி அர்ச்சகருக்கான பயிற்சி 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஸ்ரீ நாகமகா தீர்த்தர் சுவாமி அர்ச்சகர் பிரேமசந்திரன்:
ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி என்பது எல்.கே.ஜி. படிப்பை போன்றது. வேதபாட சாலை முறையில் 5 7 9 ஆண்டு அர்ச்சகர் படிப்பு உள்ளது. இந்த ஆண்டுகளில் படித்தால் மட்டுமே ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
தர்மபுரி பரமேஸ்வரன் கோயில் அர்ச்சகர் குருசந்த்சாஸ்திரி:
ஹிந்து மதத்தில் கோயில் கும்பாபிஷேகம் தான் உயர்ந்தது. இதில் நான்கு வேதங்கள் 28 ஆகமங்கள் 64 வகை முத்திரைகள் மற்றும் தமிழில் தேவாரம் திருபுகழ் பாடப்பெற்று கும்பாபிஷேகம் மிகப்பெரிய வைபோகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். அர்ச்சகர் பயிற்சியை ஐந்தாண்டில் இருந்து ஓராண்டாக குறைக்க விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேத மந்திரகள் மட்டுமல்ல கோயில்களில் தமிழில் பிரதானமாக உள்ள தேவாரம் திருப்புகழை முழுமையாக கற்கவே ஓராண்டு போதாது என்பது அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரியும்.
ஹிந்து மத பாரம்பரியத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவும் யாரையோ திருப்தி படுத்த தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் தற்போது தமிழக அரசு குடமுழுக்கு அர்ச்சகர் பயிற்சியில் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளனர். கோயில் மட்டுமன்றி நாடு நாட்டு மக்களின் நலன் கருதி தமிழக அரசு கொண்டு வந்துள்ள முடிவை திரும்ப பெற வேண்டும்.
தர்மபுரி ஆதி லிங்கேஸ்வரர் கோயில் அர்ச்சகர் ஸ்ரீதரன் சாஸ்திரி:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கோயில் வழிபாடு அர்ச்சனைகளில் புனித தன்மையை மன்னர்கள் அறிந்திருந்ததால் அர்ச்சனையும் வேத மந்திரங்களையும் தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழில் இறையுடன் பேசிய 12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் அர்ச்சனை மொழியான சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லை. கோயில்களில் தற்போது தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சியை ஐந்தாண்டுகளில் இருந்து ஓராண்டாக மாற்றம் கொண்டு வந்துள்ளதால் கோயில் மரபுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஆழ்வார்கள் நாயன்மார்களையும் தமிழ் மன்னர்களையும் பின்பற்றி அறநிலையத்துறை விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
-நமது நிருபர் குழு-
வாசகர் கருத்து (109)
திமுக காரனுங்க பயிற்சி எடுத்து கட்சி க்கறாங்க வீட்டில் புரோகிதம் பண்ண பயிற்சி கொடுக்கலாம்
இனியும் இந்துக்கள் கழகத்துக்கு வோட்டு போட்டால் தற்கொலைக்கு சமம்.
பிராமண மூளைக்குத் தான் பத்தாண்டுகள் வேண்டி வரும். த்ராவிஷ மூளைகள் எல்லா பாடங்களையும் ஒரே வருசத்துல கரைச்சுக் குடிச்சிடுவாங்க. சந்தேகம் இருந்தா டாஸ்மாக் வந்து பாரு. கரைசல் சல்பேட்டா எதானாலும் சரி. ஒரே மூச்சுதான்.
நாட்டில் உடனடியாக தீர்வு காண வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அது எதுவும் இந்த கேடு கேட்ட அரசுக்கு தெரியாது. தெரிந்ததெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு, ப்ராமண எதிர்ப்பு, சமூக நீதி, கோவில் இடிப்பு, ஹிந்து ஆன்மீக விஷயங்களில் தேவையற்ற தலையீடு மட்டுமே. இதற்கா இவர்களுக்கு வோட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தது?
பத்து ஆண்டுகள் பயிற்சிக்குப்பின் உண்மையாக கடவுள் இவர்களின் கண்ணுக்கு மட்டும் தெரிவாரா? அப்படி என்றால் உலகத்தில் இவர்கள் இல்லாத இடத்தில் வேறு எங்கும் கடவுள் இல்லையா??? பத்து ஆண்டுகள் பயிற்சிக்குப்பின் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் எத்தனை மக்களுக்கு கடவுளை எல்லோருக்கும் சமமாக காண்பிக்கிறார்கள். எல்லோருக்கும் காசுக்கு ஏற்றாற்போல் தானே தரிசனம் நடக்கிறது.