Load Image
Advertisement

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம்: மனித நேயமிக்க காய்கறி கடைக்காரருக்கு குவிகிறது பாராட்டு

Tamil News
ADVERTISEMENT
நாகப்பட்டினம்:நாகையில், 16 ஆண்டுகளாக சாலையோரம் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு, அரசின் அடுக்குமாடி வீட்டில் குடியேற்றிய காய்கறி கடைக்காரருக்கு பாராட்டு குவிகிறது.

நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த்; காய்கறி கடை நடத்துகிறார். கடந்த மாத இறுதியில் கனமழை பெய்த இரவு நேரத்தில், நாகை, புத்துார், இ.சி.ஆர்., வழியாக சென்றார்.

அப்போது, பயன்பாடற்ற பஸ் நிறுத்தத்தை பழைய கிழிந்த சாக்குகளால் போர்வை போல போர்த்தி, அதற்குள் ஒருவர் நிற்பதை பார்த்தார். அதன் உட்புறம் இரண்டு பெண்கள் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடி சுருண்டு கிடந்தனர்.

விசாரித்த போது, அந்த நபர், தன் பெயர் வெங்கடேசன், 49, தந்தை தியாகராஜன், தாய் சந்திரா என, தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் நகராட்சி வரி வசூலிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, 1988ல் இறந்து விட்டார். சந்திரா அங்கன்வாடி ஊழியராக பணியாற்றியுள்ளார். தியாகராஜனுக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள்.

தியாகராஜன் இறந்த சில ஆண்டுகளில், வருவாய் துறையில் பணியாற்றிய வெங்கடேசனின் மூத்த சகோதரரும் சாலை விபத்தில் இறந்தார். தொடர்ந்து, ஏதோ காரணத்தால் வெங்கடேசன் குடும்பத்தில் அனைவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையத்தில் உள்ள சொந்த வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினர், 16 ஆண்டுகளாக வானத்தை கூரையாக்கி, நிலா வெளிச்சத்தை விளக்காக்கி வாழ்ந்து வந்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையோர பஸ் ஸ்டாப்புகளில் தஞ்சம் புகுந்தனர்.

உணவு கிடைக்காமல் பசியால், குடும்பத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இறந்து போக, வெங்கடேசனுடன் அவரது சகோதரிகள் வசந்தி, 45, ஜெயந்திராணி, 40, மட்டும் மனநலத்துடன், உடல் நலமும் பாதிக்கப்பட்டு, வாழ்வின் இறுதி நாட்களை கழிப்பது தெரிய வந்தது.

இத்தகவலை ரஜினிகாந்த், நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றார். கலெக்டர் உடனடியாக மருத்துவ குழுவினருடன், சமூகநலத் துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், நாகூர், சம்பா தோட்டத்தில் கட்டப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பில், அவர்களுக்கு வீடு வழங்க கலெக்டர் பரிந்துரைத்தார்.

இத்திட்டத்தில் வீடு ஒதுக்கீட்டிற்கு பயனாளிகள் பங்களிப்பாக, 1.20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அந்த பணத்தை, கலெக்டரின் சொந்த விருப்ப நிதியில் வழங்குவதாக தெரிவித்தார்.

வெங்கடேசனுக்கு உடனடியாக வீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பஸ் ஸ்டாப்பில் இருந்த குடும்பத்தினரை அடுக்கு மாடி குடியிருப்புக்கு இடம் பெயர செய்து, வீட்டிற்கு தேவையான பொருட்களை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்தார்.

கலெக்டர் உத்தரவுப்படி, மன நல பாதிப்பில் இருந்து வெங்கடேசன் குடும்பத்தினர் மீண்டு வர மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதநேயத்தின் மூலமே இறைவனை காண முடியும் என உணர்த்திய காய்கறி கடைக்காரருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (1)

  • KANTHI - Chennai,குவைத்

    vazhga வளமுடன் ஐயா .உங்கள் தொண்டு சிறக்கட்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement