பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் ......
கே.சரவணன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., துவங்கப்பட்ட போது, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்றும், 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையே சுடுகாடு' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக மக்களும், இந்த கோஷங்களில் மதி மயங்கி கிடந்தனர். அத்துடன், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்றும், மற்றொரு கோஷத்தை எழுப்பி, தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். ஆட்சியில் அமரும் வரை, இந்த கோஷம் தொடர்ந்தது.

ஆட்சியில் அமர்ந்த பின், தங்களையும், தங்களின் குடும்பத்தினரையும் முன்னேற்றியதை தவிர, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எத்தனை தொழிற்சாலைகள் துவக்கி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் தி.மு.க.,வினர் என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக வரும்.
கழகத்தினரை தொடர்ந்து, இப்போது அடுத்த கட்டமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனி தமிழகம் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லுாரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திருமாவளவன், 'அரசியல் என்பது பதவிக்கான, அதிகாரத்திற்கான, பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டு உள்ளது.
'தமிழகம் எனும் தனிநாடு அமைப்பதே, தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாகவே மத்திய அரசு இருக்க வேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று விமர்சிக்கும் போக்கு, கழகம் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாக தொடர்கிறது.
அதற்கு முன், கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அந்த ஒன்றியம் என்ற வார்த்தையை, ஒரு போதும் உபயோகித்ததில்லை. 2021ல் இருந்து தான், அந்த வார்த்தை பிரயோகம் துவங்கியுள்ளது. அதன் நீட்சியாக தற்போது, திருமாவளவனின் வாயிலிருந்து, 'தமிழகம் எனும் தனி நாடு அமைப்பதே லட்சியமாக இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகள் வந்துள்ளன.
இந்த தனிநாடு பேச்சு, திருமாவளவனின் உள்ளத்தில் இருந்து வந்ததா அல்லது கூட்டணி தலைமை கழகத்தின் அறிவுரைப்படி, உதட்டிலிருந்து வந்ததா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். ஆக, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.

தமிழகத்தில், சமீப நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை, மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.
அதுபோல, இந்த தனிநாடு பேச்சையும், கண்டும் காணாதது போல இருக்காமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். இல்லையெனில், கோவையில் நடந்தத கார் குண்டு வெடிப்பு சம்பவங்களை போல, பல கொடூர சம்பவங்களை தமிழகம் எதிர்கொள்ள நேரிடும். மத்திய அரசே உஷார்!
வாசகர் கருத்து (69)
இவர் நிதானத்தில் இல்லை , தலை கால் புரியாமல் ஆடுகிறார் , முதலில் நீங்க சொந்த சின்னத்தில் நில்லுங்க , அப்புறம் வந்து சொல்லுங்க
தமிழகம் இப்போது சனத்தொகையில் வளர்ந்து விட்டது. அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த சனத்தொகையை விட இரண்டு பங்குக்கும் மேலாகி விட்டது. ஆனால் இருக்கும் நில வளமும், நீர் வளமும் மாறவில்லை. அரசாட்சி குன்றி விட்டது. நிர்வாகத்திறமையற்றவர்கள் கையில் அதிகாரம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாகப் போய்விட்டது. சனத்தொகை வளர்ச்சி எங்கெல்லாம் அதிகரித்திருக்கிறது, அவர்களுக்கு அதற்கேற்றவாறு என்னல்லாம் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அறியாமல் அரசியல் என்ற அவியலை செய்துகொண்டு, பகல் கொள்ளையில் இறங்கி விட்டார்கள். தமிழ் நாட்டை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால் தான் மக்கள் நல்வாழ்வு வளரும். கொங்கு நாடு, பாண்டிய நாடு, வடதமிழ் நாடு என்று குறைந்தது மூன்றாகப் பிரிக்கும் நேரம் வந்து விட்டது.
சமத்துவம் சகோதரத்துவம் மதச்சார்பின்மை தன்னாட்சி இவை தமிழக வளர்ச்சியை மட்டுமல்ல இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது
ஒரு மதசார்பற்ற நாட்டில் இந்து ராஜ்யம் அமைப்போம் என்று ஆளும் ஒன்றிய அரசின் ஆளுநர், அமைச்சர்கள் கருத்து கூறிய போது எந்த பூனைக்குட்டியும் வெளிவரவில்லையா..?
அப்படியா???திருமா கேட்டா கால தாமதம் இன்றி உடனே கொடுத்துடுங்க.கஷ்டப்படுறவர் பாவம் அவர் அதை வச்சுப் பொழைச்சுக்கட்டும் .. ஜி.எஸ்.ராஜன் சென்னை