Load Image
Advertisement

பழைய வாகனங்களை வாங்குவோருக்கு கிடுக்கிப்பிடி விதி மீறினால் சிறை என போலீசார் எச்சரிக்கை

கோவை:'உடைத்து, உதிரி பாகம் விற்பனை செய்வதற்காக பழைய வாகனம் வாங்குவோர், அரசு விதிகளின் படி ஆவணங்களை பராமரிக்க வேண்டும். மீறினால், மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், உடைப்பதற்கு விற்கப்பட்ட பழைய கார் பயன்படுத்தப்பட்டதும், ஆர்.சி.,பெயர் மாற்றம் செய்யாமலேயே, 10 பேர் கை மாறியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதில், தொடர்புடைய பயங்கரவாதிகள், குண்டு வைக்க வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

அரசு உத்தரவு



இதையடுத்து, உடைப்பதற்காக பழைய வாகனம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், பழைய வாகனங்களை வாங்கும் வியாபாரிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து போலீசார் கூறியதாவது:

 வாகனம் உடைக்கும் தொழிலில் ஈடுபடுவோர், மோட்டார் வாகன பராமரிப்புத்துறை வழங்கிய உரிமத்தை, தணிக்கை அதிகாரி பார்வையில் படும்வகையில் வைத்திருக்க வேண்டும்

 மூன்றாண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்காவிட்டால், சட்ட நடவடிக்கைக்கு எடுக்கப்படும்

 சுகாதார அலுவலர் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம், தொழில் நடக்கும் இடத்துக்கான இருப்பிடச் சான்று பெற வேண்டும்

 விற்பனைக்கு வரும் வாகனங்களுக்கு பதிவேடு பராமரிக்க வேண்டும்.

வாகன பதிவு எண், சேசிஸ் எண், இன்ஜின் எண், தயாரிக்கப்பட்ட ஆண்டு, மாடல், உரிமையாளர் விபரம், விற்பவர் முகவரி, போன் எண், ஆதார் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, வாகனத்தின் விலை போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்

 பதிவேடு தினமும் காலை, மாலை தணிக்கை செய்யப்பட்டு உரிமையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும்.

போலீசார் விசாரிக்கையில் காண்பிக்க வேண்டும்

 விபரங்களை கணினியில் பதிவேற்றி இருந்தால், அதன் நகலை, மாதம்தோறும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்க வேண்டும்

 கடை ஊழியர்களின் முகவரி, ஆதார், போட்டோ இருக்க வேண்டும். ஊழியர்களின் இதர விவரங்கள், நன்னடத்தை சான்று போலீசாரிடம் பெற்று பராமரிக்க வேண்டும்

ஓராண்டு சிறை



 அரசு அலுவலர்கள் தணிக்கையின்போது, கடையில் உள்ள வாகனத்தின் உதிரி பாகங்கள் குறித்த முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்

 உள்நோக்கத்தோடு தணிக்கை அதிகாரி கேட்கும் தகவலை அளிக்க மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும்

 கடைக்கு வரும் வாகனம், திருட்டு வாகனமாகவோ, சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடியதாகவோ இருப்பின் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும்

 இரண்டாம் முறையாக நிபந்தனைகளை மீறினால், இரண்டாண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்

 திருட்டு வாகனம் என தெரிந்தே வைத்திருந்தாலும், அவற்றின் பாகங்களை விற்பனைக்கு வைத்திருந்தாலும், மூன்றாண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

 உரிமம் இன்றி, பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனைக் கடை வைத்திருந்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கூட்டத்தில், கூடுதல் துணை கமிஷனர் (போக்குவரத்து திட்டமிடல்) சிற்றரசு, உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா, உதவி கமிஷனர்கள் சரவணன், அருள் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.


ஆர்.சி., சரண்டர் கட்டாயம்!



வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் பேசியதாவது:பழைய வாகனங்களை உடைப்பதற்கு வாங்குவோர், அதன் பதிவுச்சான்றை முறைப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சரண்டர் செய்ய வேண்டும். போக்குவரத்து ஆய்வாளர் வாகனத்தை ஆய்வு செய்து, 'சாலையில் இயக்க தகுதியற்றது' என சான்றிதழ் வழங்குவார்.அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அபராதம் செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அதையும் செலுத்த வேண்டும். இதன் பிறகே பதிவுச்சான்று சரண்டர் செய்யப்படும். வாகனங்களை உடைப்பவர்கள், இந்த நடைமுறையை பின்பற்ற தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement