புதுடில்லி: உலகளவில், மெய்நிகர் நாணயங்கள் எனப்படும் 'கிரிப்டோகரன்சிகள்' கடந்த ஒரு மாதத்தில் கடுமையான சரிவைக் கண்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, இந்தியாவில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.
இது குறித்து, சந்தை நிபுணர் ஒருவர் கூறியதாவது: உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகளை கொட்டிக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மிகவும் எச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால், இந்திய முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிகளை துவக்கத்திலிருந்தே அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளது. அரசும் இம்முதலீட்டு வருவாய்க்கு 30 சதவீதம் அளவுக்கு அதிக வரியை விதித்தது.
எச்சரிக்கை
இது போன்ற நடவடிக்கைகளால், இந்தியாவில் அதிகமானோர் கிரிப்டோகரன்சியில் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.
இந்திய முதலீட்டாளர்களில், வெறும் 3 சதவீதம் பேரே, கிரிப்டோகரன்சியில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கிரிப்டோகரன்சிகளின் மொத்த சந்தை மதிப்பு, கடந்த ஆண்டில் 243 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஒரே ஆண்டில் 81 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது. இதையடுத்து, முதலீடுகளை திரும்ப பெற முதலீட்டாளர்கள் அவசரப்பட்டதை அடுத்து, இரண்டாவது பெரிய கிரிப்டோ சந்தையான எப்.டி.எக்ஸ்., திவால் நிலைக்கு சென்றுவிட்டது.
எப்.டி.எக்ஸ்., சந்தையின் சரிவால், அதன் இணை நிறுவனர் சாம் பேங்க்மேன் பிரைடு வரலாறு காணாத செல்வ இழப்பை சந்தித்துள்ளார்.கிட்டத்தட்ட 1.30 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். இது ஏற்கனவே சிக்கலில் உள்ள இந்த துறையின் மீதான நம்பிக்கையை மேலும் உலுக்கி உள்ளது.
'பிட்காயின், ஈத்தர்' போன்ற பிற கிரிப்டோகரன்சிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கிரிப்டோ சந்தைகளான 'வாசிர்எக்ஸ், ஜெப்பே' ஆகியவை பெரிய பாதிப்புகள் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ஜூன் மாத நிதி நிலைத்தன்மை குறித்த அறிக்கையில், கிரிப்டோகரன்சிகள் 'நிச்சயமான ஆபத்து' என தெரிவித்து இருந்தார். மேலும், எல்லா காலகட்டங்களிலும், கிரிப்டோகரன்சிகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.
சாத்தியமில்லை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது குறித்த ரிசர்வ் வங்கியின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும், உலக நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி, எந்த சட்டமும் சாத்தியமில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அரசு, செபி, ரிசர்வ் வங்கி இம்மூன்றின் கூட்டு நடவடிக்கைகளால், இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் பாதிப்புகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (3)
இதுகெல்லம் கமென்ட் போட யாரும் காணும் 😂😂😂😂
உண்மையாகவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தப்பினார்கள். உண்மை.
Jai Seetha(Ram)