
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில், சென்னையில் மணப்பாக்கம், திருவள்ளுவர் நகர், காவியா நகர், பெல்நகர் பகுதிகளை பார்த்துவிட்டு மதனந்தபுரம், சிந்து காலனி, கொளப்பாக்கம் கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின் உள்ளிட்டோர் இன்று(நவ.,14) ஆய்வு மேற்கொண்டனர்.
நிவாரண உதவி:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை, காய் கறிகள், பால், ரொட்டி ஆகிய நிவாரண பொருட்களை 500 குடும்பங்களுக்கு பழனிசாமி வழங்கினார்.
இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால் ஸ்டாலின் செய்தது என்ன?. மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
திமுக ஆட்சியில் படகில் தான் மக்கள் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் சொட்டு நீர் கூட தேங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மழை மட்டும் என்றால் பரவாயில்லை ரோடெல்லாம் குண்டும் குழியுமாக வாகனப்போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது தி மு க ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றிலும் விலைவாசி உயர்வுதான் அதிகம்.