சென்னை: விலை மதிப்பில்லாத உங்களின் கையெழுத்துக்காக பேப்பர் காத்திருக்கிறது என்றும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கு திட்டமிட்டு உற்சாகமாக தயாராக வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி தினமலர் இணைய டிவியில் லைவ்வாக ஒளிபரப்பானது.
'தினமலர்' நாளிதழ், 'கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி' இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, விவேகானந்தர் அரங்கில் இன்று (நவ.,13) நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவும், அரசு வேலைவாய்ப்புகளை பெறவும் வழிகாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். அந்த வெறியை விடாமல் பிடித்து கொள்ள வேண்டும். ஜன்னல் மூடிவிட்டு வாழ்க்கையை மூடிவிட்டதாக நினைப்போம். பக்கத்தில் கதவு இருப்பதை பார்க்க மாட்டீர்கள். பலரும் தோல்விகளை பார்த்திருப்பீர்கள். மேடையில் அமர்ந்துள்ளவர்கள் அனைவரும் தோல்வியை பார்த்தவர்கள் தான்.
தினமலர் உண்மையின் பல அற்புதமான விஷயங்களை செய்யும் முன்னணி பத்திரிகை. இளைஞர்கள், சகோதரர்கள், சகோதரிகளுக்காக பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அனைத்து வழிகளிலும் டில்லி செல்ல முடியும். தேர்வில் வெற்றி பெற பல வழிகள் உள்ளன. நம்பிக்கை வந்தால் கூடுதல் மதிப்பெண் பெற முடியும். அப்போது, தேர்வுத்தாளை திருத்துபவர்களுக்கும் நம்பிக்கை வரும். நான் வந்திருக்கும் பாதை மிகவும் வித்தியாசமானது. என்னை போல் யாரும் இல்லை என்று சிந்திக்க வேண்டும். இதனை முடித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை வரும்.
இந்திய ஜனநாயகத்தின் வெற்றியில் முக்கிய வெற்றி என்பது இந்திய ஆட்சி பணி தேர்வில் எந்த மனிதரும் சாதிக்க முடியும் என காட்டுவது தான். இது தான் ஜனநாயகத்தின் உச்சபட்ச வெற்றி. இதனை அனைவரும் நம்ப வேண்டும். அதில் சமூக நீதியும் உள்ளது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும், தொடர்ந்து தேர்வு எழுதுபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கேபினட் மீட்டிங் நடத்த வேண்டும்
என்னுடைய பேச்சில் தேர்வானவர்களில் ஒருவர் சிறையில் உள்ளார். தங்க பதக்கம் வாங்கியவர்கள், வீர பதக்கம் வாங்கியவர்களும் உள்ளனர். 3 ,4 முறை தேர்வெழுதி தேர்வானவர்களுக்கு பலம் அதிகம். அவர்கள் தேர்வானதற்கு முன்னர் பல கஷ்டங்களை பார்த்துள்ளனர். ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள். விமர்சன பாதையை கடந்து தான் ஆகணும். அதை கடந்து தான் கலங்கரை விளக்கத்தை அடைய முடியும். கடுமையான சொற்களை தாண்டி தான் ஆக வேண்டும்.
நீங்கள் தேர்வுக்கு மட்டும் தயாராகவில்லை. நீங்கள் அடுத்த 35 ஆண்டுக்கு தயார்படுத்துகிறீர்கள். பலர் கேபினட் செயலாளர் பதவி வரை செல்ல வேண்டும். கேபினட் மீட்டிங் நடத்தக்கூடிய பொறுப்பு வரும். அதற்கு தயாராக வேண்டும். நீங்கள் பிரதமருக்கு அறிவுரை வழங்க தயார்படுத்தி கொண்டிருக்கிறீர்களே தவிர, தேர்வுக்கு அல்ல.
இந்தியாவை மாற்றக்கூடிய பாதை உங்களிடம் தான் வர போகுது. விலை மதிப்பில்லாத கையெழுத்துக்காக பேப்பர் காத்து கொண்டுள்ளது. என்ன கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராக கால அவகாசம் கொடுக்க நாடும், சமுதாயமும் தயாராக வேண்டும். தேர்வு எவ்வளவு சிரமம், எத்தனை பேர் எழுதுவார்கள் என்பது குறித்து குடும்பத்தினரிடம் தகவல் கூற வேண்டும். அப்போது தான் உங்கள் மீதான நெருக்கடி குறையும். பெற்றோர் ஆதரவு தருவது தான் ஊக்கம். உற்சாகம். அதற்கு நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் தெளிவுப்படுதத வேண்டும்.
தேவையில்லாததை ஒதுக்குங்கள்
சிவில் சர்வீஸ் பாதையை தேர்வு செய்தால், அனைத்து விஷயங்களையும் நிறுத்த வேண்டும். 24 மணி நேரமும் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது 'இன்டலிஜென்ட் தேர்வு' இல்லை. அது காமன் சென்ஸ் உள்ளவர்கள் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வு. தேர்வுக்கு தயாராவது ஒரு தனித்துவம் வாய்ந்தது. தேர்வுக்கு தேவையில்லாததை குறைத்து கொள்ள வேண்டும். அப்போது தேர்வாக தயாராக முடியும். தரமாக படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்பதை விட இடைவெளி எடுத்து யோகா, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் 24 மணி நேரத்தில், சிவில் சர்வீசுக்கு தேவையில்லாததை செய்ய வேண்டாம். எந்த திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம். இரவு நேரத்தில் அதிகம் கண் விழித்து படிக்க வேண்டாம். நேரகட்டுப்பாடு மிக முக்கியம். தண்ணீர் அதிகம் குடித்தால் உடலுக்கு ஒரு ஒழுங்கும் ,சக்தியும் கிடைக்கும்.
தொடர் முயற்சிகள் தேவை
உங்களது வெற்றியை கொண்டாட சமுதாயம் தயாராக உள்ளது. அதற்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். ஐஏஎஸ் ஆகும் வரை அதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த தேர்வை இரண்டு அல்லது மூன்று வருடங்கள் படிப்பதால் கிடைக்கும் அனுபவம் 3 பிஎச்டி படித்த அனுபவம் கிடைக்கும். ஒருவர் முதல் முயற்சியில் வெற்றி பெற்றால், திறமை மட்டும் காரணம் அல்ல. அதிர்ஷ்டமும் ஒரு காரணம். 2 அல்லது 3 முயற்சிகளில் மனதில் வைத்து கொள்ள வேண்டும். முதல் முயற்சியில் வெற்றி பெற வில்லை என்பதால், திறமை இல்லை என நினைத்து கொள்ள வேண்டாம்.
மத்திய அரசு பணிக்கு செல்பவர்கள் மத்தியில் 360 டிகிரி பீட்பேக் என்ற விஷயத்தை அதிகமாக பேசுகிறார்கள். ஆர்வத்தோடு விஷயத்தை படிக்க வேண்டும். கற்று கொள்ள வேண்டும். 'ஆன்சர் ரைட்டிங்'கை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நேர்முக தேர்வு, 'பிரிலிமனரி' தேர்வுக்கு தயாராக வேண்டும். டிவியில் ஐஏஎஸ், அதிகாரிகள், முதல்வர் பேசுவதை கவனிக்க வேண்டும். இது நேர்முக தேர்வுக்கு உதவும். அவர்கள் எப்படி பேசுகிறார்கள். உடல்மொழி பயன்பாடு குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் அனைத்தையும் ஆரோக்கியமாக பார்க்க வேண்டும். மத்திய மாநில அரசு திட்டங்களை படிக்க வேண்டும். இந்த திட்டத்தில் யார் பயன்பெறுகிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
'குவாலிட்டி ஆப் பிரசன்ஸ்'
மெயின் தேர்வில் 'குவாலிட்டி ஆப் பிரசன்ஸ்' முக்கியம். அங்கு ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும். 'பிரிலிமனரி'யில் தான் அதிக மதிப்பெண் போக வாய்ப்பு உள்ளது.
போன் உபயோகத்தை குறையுங்கள். சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுங்கள். அது உங்களது நேரத்தை வீணடிக்கும். அதில் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. வெளியே வந்தால் 4 மணி நேரம் கிடைக்கும் . உங்களுக்கு பிடித்த ஆன்மிக வழிபாட்டை பின்பற்றுங்கள். ஆன்மிக வழிபாட்டை ஒருங்கிணைத்து செய்யுங்கள்.
சிவில் சர்வீஸ் வாழ்க்கை நாள் அனைத்தையும் விட வித்தியாசமானது. எப்போதும், ஊக்கம், உற்சாகத்தை அளிக்கும். சிவில் சர்வீஸ்களால் தான், நாடு முன்னேறும். நீங்கள் தான் திட்டங்களை செயல்படுத்துபவர்கள். நேர்மறையாக இருங்கள். வலிமையாக இருங்கள். ஒரு 3 வருடம் உங்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சென்னையை சேர்ந்த அஸ்வந்த் என்ற 9 வயது சிறுவன், ஐஏஎஸ் தேர்வுக்கு எத்தனை வயதில் இருந்து தயாராக வேண்டும் என அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார். சிறுவன் கேள்வி எழுப்பியதும் அரங்கேமே சற்று விறு, விறுப்பானது. அந்த சிறுவனை அண்ணாமலை மேடைக்கு வருமாறு அழைத்தார். அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கரகோஷம் எழுப்பினர். இந்த வயதில் இந்த அளவுக்கு கம்பீரமாக கேள்வி கேட்பதே ஆச்சரியம் என்றார்.
சிறுவனுக்கு அண்ணாமலை அளித்த பதில் : அந்த சிறுவனிடம், ஏன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள் என அண்ணாமலை கேட்டார்.
அந்த சிறுவன், " அது எனது தந்தையின் கனவு" அதனை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அதற்கு அண்ணாமலை, " நீங்கள் நிச்சயம் ஐஏஎஸ் ஆவீர்கள். 21 வயதில் தான் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியும். அதற்கு உங்களுக்கு12 ஆண்டுகள் உள்ளது. பள்ளி படிப்பை முடிக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுங்கள். " இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் அருகில் உள்ள மாவட்டங்கள், நமது பிரதமர், முதல்வர் யார் என்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து (38)
அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்
காந்தி படம் போட்டு அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்காக நம் அரசியல்வாதிகள் இரவு ,பகல் பூராவும் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை .
சிவில் சர்வீஸுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சு. சாமானிய குடும்ப சூழ்நிலையிலிருந்து வந்தவர்களும் ஐ ஏ எஸ் ஆகலாம் என ஆணித்தரமாக சொன்னது அருமை. அரசியல்வாதி அண்ணாமலையை ஒரு கோச்சாக, ஒரு வழிகாட்டியாக வெளிப்படுத்திய தருணமிது. தொடரட்டும் அவரது நற்பணிகள்.
Kuruma is telling the young people to go criminal...to have minimum two cases on each one of them...what a change
மோடி அவர்களிடம் எந்த தலைப்பு கொடுத்தாலும் உடனே அவர் ஒரு பேப்பர் இல்லாமல் பேசுவார். அண்ணாமலை IFS அவர்களும் அந்த திறமை உள்ளவர். உங்களை போன்ற ஒருவர் CM ஆக வேண்டும் வேண்டும் நான் வேண்டி கொள்கிறேன்.All the best.