இனிமே அப்படி கூப்பிடாதீங்க..அது போதும்.

"ஏன்டாம்மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை ...?"
‛‛என்னைய எல்லோரும் வெட்டியான் வீட்டுப்பிள்ளைன்னு கேலி செய்றாங்க சார் அதுனால இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்'என்று சொல்லும் போதே அந்தச் சிறுமியின் கண்களில் கண்ணீர் கோர்த்து நிற்கிறது.
கோவை மயானத்தில் பணிபுரியும் சகோதரி வைரமணியின் வீட்டுக் குழந்தையின் வருத்தம்தான் இது.
பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுமியை சக மாணவர்கள் ‛வெட்டியான்' வீட்டுப்பிள்ளை என்று ஏளனமாக பேசுவதும் அழைப்பதும் அந்த பிஞ்சு மனதை அவ்வளவு காயத்தை உண்டாக்கியுள்ளது.
இப்படி அழைப்பது சக மாணவ குழந்தைகள் எனறால் கூட பராவாயில்லை ஆனால் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர் பெருமக்கள் பெரியவர்கள் பொதுமக்கள் என பலரும் கூட மயான தொழிலாளர்களை அப்படித்தான் அழைக்கின்றனர்.

துணி வெளுப்பவர் சலவைத் தொழிலாளியாகிவிட்டடனர்,சலுானில் வேலை பார்ப்பவர்கள் முடி திருத்துபவர்களாகிவிட்டனர்,குப்பை கூட்டுபவர் துப்புரவுத் தொழிலாளியாகிவிட்டனர்,குடிகாரர்கள் கூட மதுப்பிரியர்களாகிவிட்டனர் இந்த நிலையில் மயான தொழிலாளர்கள் மட்டும் ஏன் இன்னும் வெட்டியானாகவே அழைக்கப்படுகின்றனர் என்பது வேதனையான கேள்விதான்.
இத்தனைக்கும் ரத்தமும் சதையுமாக வளர்த்த பெற்றவர் என்றால் கூட கொள்ளிவைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடும் போது அந்தப் ‛பெற்றவர்' நல்லபடியாக சாம்பலாகும் வரையோ அல்லது அடக்கம் செய்யப்படும் வரையிலோ கடைசி வரை இருந்து பார்த்துக் கொள்பவர்கள் மயான தொழிலாளர்கள்தான்.
ஆனால் அந்த மயான தொழிலாளர்களை பாராபட்சம் இல்லாமல் இன்று வரை எல்லா மயானங்களிலும் அவமானப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்,பல லட்சம் செலவிட்டு இறுதிச் சடங்கு செய்பவர்கள் கூட கடைசியில் சில நுாறுகளுக்கு மயான தொழிலாளியிடம் பேரம் பேசுவதும், தரையில் விரித்துவைக்கும் துண்டில் பணத்தை அலட்சியமாக விட்டு எரிவதும், பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசமின்றி மரியாதை குறவைாக அழைப்பதும் தொன்று தொட்டு இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த அவமானங்களை எல்லாம் உடைத்தெறிந்து வெளியே வர உதவும் ஒரே கருவி கல்விதான் என்பதால் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பினால் அங்கும் அவர்களை அவமதித்தால் பாவம் அவர்கள் என்னதான் செய்வர்.
எங்களுக்கு என்று எந்த உருப்படியான அமைப்பும் இல்லை எங்கள் குரலை காது கொடுத்து கேட்கவும் யாருக்கும் நேரமில்லை காரணம் எங்கள் எண்ணிக்கை மிகக்குறைவு
மயான தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு இலவச கல்வி இருப்பிட வசதி என்று ஏதோதோ சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் ஆனால் எதுவும் நடக்கவில்லை
அது நடக்கும் போது நடக்கட்டும் அதுவரை நாங்கள் கேட்பதெல்லாம் சமூக மரியாதைதான் குறைந்தபட்சம் முகம் கொடுத்து பேசுங்கள் மயான தொழிலாளி என்று அழையுங்கள்
அது போதும்...
படம்,தகவல்: ஈர நெஞ்சம் மகேந்திரன்,கோவை.
-எல்.முருகராஜ்
வாசகர் கருத்து (7)
அவர்களுக்கு உண்டான மரியாதை உரிமை சலுகைகளை கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அதேநேரத்தில் தகனம் செய்யவருபவர்களிடம் முடிந்தவரை பணம் சுருட்டுவதையும் கொஞ்சம் கண்டித்து எழுதினால் பரவாயில்லை
வெட்டியான் என்றதும் எனது நினைவுக்கு வருவது திரு. ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறு கதை : "நந்தவனத்தில் ஓர் ஆண்டி". ஒரு வெட்டியானின் வேலை, அதை செய்யும்போது அவரது மன நிலைமை அதன் பின் அவனுக்கென்று ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தையின் வளர்ப்பில் அந்த வெட்டியான் உலகில் நடக்கும் பிறப்பு இறப்புக்கான மனித மனங்களை உணர்தல் என்று மிகவும் அருமையாக அந்த கதையை வடிவமைத்திருப்பார். இந்த பதிவை படிப்பவர்கள் அந்த கதையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர்கள் இல்லையென்றால், பிணத்தை இவர்களே 'அடுக்கி' எரியூட்டி, சாம்பலாகும்வரை இருந்து, செய்வார்களா? அல்லது இவர்கள் மயானம் செல்லாமல் வீட்டில் வைத்து அழுக விடுவார்களா? அவர்களுக்கு பிள்ளை குட்டி இருக்கக்கூடாதா, அல்லது அவர்களுக்கு படிப்பு எழுத்து எதுவும் இருக்கக்கூடாதா ? இவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யட்டும், ஊர் என்ன கதிக்காகும் ?
யாருமே செல்லாத ஒரு இடம் அப்படியே சென்றாலும் அமரருடன் உள்ளே நுழையும் போது அங்கு பணிபுரிபவர்களை திட்டிக்கொண்டே வெளியே வரும்வரை சாவின் துக்கத்தை விட இவர்கள் கேட்க்கும் லஞ்சத்தை நினைத்து நினைத்து கடுப்பில் வெளியே வரும் குடும்பத்தினர்கள்தான் அதிகம் ஆனால் அன்னப்பறவையைப் போன்று தேடி தேடி கண்டெடுத்து நல்லவற்றை மற்றும் பதிவு செய்யும்
மயான தொழில் மட்டுமல்ல எந்த தொழில் செய்து பிழைப்பதும் குற்றமும் அல்ல குறைந்ததும் அல்ல மயான தொழிலாளர்கள் குழந்தைகள் மட்டுமல்ல கிராமப்புரத்தில் உள்ள அனைத்து மக்களும் குழந்தைகளும் முறையான பகுத்தறிவுடன் கூடிய கல்வி அறிவு பெறுவது தற்போதய சமூக அவசியமாக உள்ளது