திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுவடைந்ததால், நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து, பொதுமக்களை வெளியில் வரவிடாமல், வீட்டிற்குள் முடங்கியது. மீட்பு நடவடிக்கையில் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் நெல் வயல்கள் மூழ்கின.
திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, நேற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, தொடர்ந்து மழை பெய்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. விடாமல் பெய்த கன மழையால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர இயலாமல், வீட்டிற்குள் முடங்கினர்.
நிரம்பும் நீர்நிலைகள்
மாவட்டத்தில் உள்ள, ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மொத்தம் உள்ள, 1,155 ஏரிகளில், 62 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. மீதம் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது. இதுவரை, 14 வீடுகள் மழைக்கு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை நீர் வெளியேற்றம்
பொன்னேரி என்.ஜி.ஓ.,நகர், தாலுகா அலுவலக சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததை தொடர்ந்து, மோட்டார் வாயிலாக வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.
பழவேற்காடில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
மீன்பிடி வலைகள், படகுகள் கரையோரங்களில் ஓய்வு எடுக்கின்றன. மீன்வளத் துறை உதவி இயக்குநர் வேலன் தலைமையில் அத்துறையினர் பழவேற்காடில் முகாமிட்டு உள்ளனர்.
மீன்வளத் துறை அலுவலகத்தில் உள்ள தொலைதொடர்பு சாதனங்கள் வாயிலாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், யாரும் சென்றிருந்தால் தகவல் தெரிவிக்கும்படியும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ஜி.என்.டி., சாலை
கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று பெய்த கன மழையில், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. பெரும்பாலான இடங்களில், சாலை சேதமாகின.
ஓபுளாபுரம் பகுதியில், மேம்பால இறக்கத்தில் மழை வெள்ளம் தேங்கியதால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
தலையாரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. எளாவூர், அயநல்லுார், கும்புளி, கொண்டமாநல்லுார், பல்லவாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில், நெற்பயிர்கள் மூழ்கின.
அதிகாரிகள் முகாம்
வருவாய்த் துறையினர் கிராமங்களில் முகாமிட்டு, மழை பாதிப்புகளை கண்காணித்து வருகின்றனர். பொதுப்பணித் துறையினர் ஆறு, ஏரிகளின் கரைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகசுந்தரம், பொன்னேரி சப் - -கலெக்டர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ஆரணி ஆற்று கரையோரப் பகுதிகளான ரெட்டிப்பாளையம், பெரும்பேடு, ஆண்டார்மடம் ஆகிய கிராமங்களிலும், புயல் பாதுகாப்பு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
நிரம்பி வரும் புழல் ஏரி, பாதுகாப்பு கருதி, நேற்று, 500 கன அடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்காக 42 குழுக்களுக்கும், துணை கலெக்டர் அந்தஸ்திலான அலுவலர்கள் தலைமை வகிக்கின்றனர்.
மேலும், தமிழக அரசு சார்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ராஜாராமன், சுந்தரவல்லி, சண்முக சுந்தரம், கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அறிவுரைகள் வழங்கியுள்ளனர், என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 முழு நேரமும் இயங்கி வருகிறது. மேலும், கட்டுப்பாட்டு அறையினை 044-27664177, 044-27666746; வாட்ஸ் ஆப் எண். 9444317862 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள், மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
அல்பி ஜான் வர்கீஸ்,
கலெக்டர், திருவள்ளூர் மாவட்டம்.
ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி உபரிநீர் வழிகின்றன. ஆற்றின் பாதையில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே உள்ள காரணி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.இதனால் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை கழுவுவதும், சிலர் குளிப்பதுமாக இருந்தனர். அவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர்.
ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி உபரிநீர் வழிகின்றன. ஆற்றின் பாதையில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே உள்ள காரணி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.இதனால் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை கழுவுவதும், சிலர் குளிப்பதுமாக இருந்தனர். அவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர்.
-நமது நிருபர் குழு -
வாசகர் கருத்து (2)
ஸ்டாலின் நேற்று சொன்னது " நாங்கள் ஆட்சிக்கு வந்தநேரம் தான் மழை பெய்கிறது.தண்ணீர் பஞ்சமின்றி மக்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக உள்ளனர். மக்கள் சொல்வது மழையால் பயிர்கள் அழுகிவிட்டதால் நஷ்டம் ரோடுகளில் குண்டும் குழியாகி வண்டி ஓட்டோ சேரில் நடக்கவே கடினம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நம் முன்னோர் கட்டிய ஏறி கம்மாய் ஆக்கிரமிப்பு செய்ததால் வந்த விளைவு