ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி குன்னூர் தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம், 92 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 முகவர்களை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவரின் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் ஒரு வலைத்தள முகவரி லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த லிங்கை கிளிக் செய்து, அதில் சில டாஸ்க்குகளை நிறைவேற்றி, அதன் மூலம் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
ரூ. 92 லட்சம் மோசடி
இதை நம்பிய தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் முதலில் 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்த பணம் இரட்டிப்பானதும் அதன் பின்னர் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆயிரங்கள் பின்னர் லட்சக்கணக்கில் மாறியது.
இவர் முதலீடு செய்த பணத்திற்கான இரட்டிப்புத்தொகை நேரடியாக இவரது வங்கிக் கணக்கிற்கு கொண்டுவரப்படாமல் ஆன்லைன் மூலம் வேறு ஒரு கணக்கில் இருப்பதாகவும் அந்த கணக்கில் இருந்து தேவைப்படும் சமயத்தில் உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோசடி பேர்வழிகள் இவரிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் தனது வங்கி கணக்கிலிருக்கு பணம் வராமலே வேறு ஒரு கணக்கில் தனக்கான தொகை இரட்டிப்பாகி வருகின்ற எண்ணத்தில் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
முடிவில் பணம் அதிக அளவில் கையை விட்டு சென்றது இவருக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து தனக்கான தொகையை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்றும், நீங்கள் கூடுதல் பணம் முதலீடு செய்தால் மொத்த தொகையையும் வங்கி கணக்குக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர். இவ்வாறு, கடந்த செப்., ஒரு மாத காலத்தில் அவரிடம், 92 லட்சம் ரூபாய் ஏமாற்றி வாங்கியுள்ளனர். ஆனால், அவருக்கு அவருடைய பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
3 வாலிபர்கள் கைது
முடிவில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேயிலை ஏற்றுமதி உரிமையாளர் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷினி, பிலிப், சுஜாதா ஆகியோர் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டது.
விசாரணையில் இன்ஸ்டாகிராமில் லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்தவர்கள் தெலுங்கானா மாநிலம் வாரங்கல், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்ததும், இவர்கள் நெட்வொர்க்காக குழு அமைத்து பணியாற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் வாரங்கல், தூத்துக்குடி, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சுற்றி இந்த சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலம் இளம்பிள்ளை பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த எழில் ராஜா, 32, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராஜ், 32, தென்காசி மாவட்டம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், 27, என்பதும் இவர்கள் முகவர்களாக பணியாற்றி போலீசில் சிக்கிக் கொண்டது செயல்பட்டது தெரிய வந்தது.
இதில், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த எழில் ராஜா கோவையிலும், பாலசுப்பிரமணியம் மற்றும் முத்துராஜ் தூத்துக்குடியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி கொண்டுவரப்பட்டனர். விசாரணைக்கு பின், குன்னூர் மாஜிஸ்திரேட் இசக்கி மகேஷ் குமார் முன்னிலையில் இவர்கள் 3 பேரையும் ஆஜர்ப்படுத்தி குன்னூர் சிறையில் போலீசார் அடைத்தனர்.
வாசகர் கருத்து (2)
குற்றவாளிகளையெல்லாம் இருகரம்கூப்பி அரசுவிழாஏற்பாடுசெய்து பெரிய ரோஜாப்பூ மாலை அணிவித்துவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்தி அனுப்பிவைக்கவும். தனிநபர்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் கும்பலைமக்கள் முன்னிலையில் பிரன்கையைகட்டிகைதுசெய்து வீதிவழியாக ஊர்வலத்துடன் கைதுசெய்யாமல் இவர்களுக்கு என்ன மரியாதை கொடுத்து நடத்தவேண்டும். மக்களின் வரிப்பணத்தைவைத்து காவல்துறை, நீதித்துறை இப்படி அனைத்து துறைகளுக்கும் மக்களின் நேரமும் பணமும் வீணடிக்கப்படுகிறது. மக்களின், நாட்டின், முன்னேற்றம் கருதி சட்டத்தை கடுமையாக்கி காலதாமதமில்லாமல் தண்டியுங்கள். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணியும் பெரும்பாலும் நேர்மையாக உயர்தரத்துடன் இருப்பதில்லை, மேலும் குற்றவாளிகள் தண்டித்து குற்றங்கள் இல்லாநாடாக செயல்படுத்த ஆக்கபூர்வசெயல்கள் செயல்படுத்துவதில்லை, தங்களை மக்கள் முன்முன்னிலைப் படுத்துவதிலேயே, நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பொறுப்புள்ள மனிதர்கள் நேரத்தை விரயமாக்குகிறார்கள்.இது வளர்ச்சியை நோக்கிய பயணம் அல்ல. இனிமேலாவது ஆக்கபூர்வமாக அயராது மக்களுக்காக நேர்மையாக, நாட்டின் முன்னேற்றம் கருதி செயல்படுங்கள். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. வந்தேமாதரம்,,ஜெய்ஹிந்த்.
"இதை நம்பிய தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்..." இதுல கொடுமை என்னன்னா ஏற்றுமதி நிறுவனம் நடத்த கொஞ்சம் படிச்சிருக்கணும். படிச்சவங்க பேராசையால் ஏமாறுறது கொடுமை ....