கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் வெடிப்பு சம்பவம் நடந்து ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, அவரின் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவரின் கூட்டாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்காதபட்சத்தில், இவர்கள் கோவையில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்க சதி செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கோவை மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.


சதித்திட்டம் தீட்டப்பட்டு, பெருமளவில் வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னணியில், கோவை நகரில் உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்ததே முக்கியக் காரணமென்று குற்றம் சாட்டப்படுகிறது. கோவை நகரம் கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், பல மடங்கு வளர்ந்துள்ள நிலையில், புதிதாக போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கவும், போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபற்றி நமது நாளிதழில், 'தோற்றுப்போன உளவுத்துறை' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், நமது நாளிதழில்வெளியான செய்தியில் குறிப்பிட்டிருந்த படி, கரும்புக்கடையிலும், அத்துடன் சுந்தராபுரம், கவுண்டம்பாளையத்திலும் புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கையுடன் மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டில், ஆட்சி மாற்றத்துக்குப் பின், கோவை நகரிலிருந்த ஏராளமான போலீசார், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று, கோவை நகரம் பற்றியும், இங்குள்ள பல்வேறு அமைப்பினரைப் பற்றியும் நன்கறிந்த உளவுத்துறை போலீசாரையும் மாற்றி விட்டனர். இதுவும் இந்த சதித்திட்டம் பற்றி, முன்பே தெரியாமல் போனதற்கு முக்கியக் காரணமாகவுள்ளது.
எனவே, கோவை நகரம் பற்றி நன்கறிந்த போலீஸ் அதிகாரிகளை இங்கு நியமிப்பதுடன், உளவுத் துறையில் அனுபவத்துடனும், புகார்களுக்கு உள்ளாகாமலும் பணியாற்றியவர்களை மீண்டும் நகருக்குள் உளவுப்பணியில் நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம். தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கும் அதே நேரத்தில், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தைத் திறக்க, மத்திய அரசும் உடனடியாக உத்தரவிட வேண்டுமென்பது கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது.
சிட்டி போலீசும்... கார்ப்பரேஷன் லிமிட்டும்!
கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகளாகி விட்டது. வடவள்ளி, துடியலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, முழு அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் வடவள்ளி, துடியலுார் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களும், இப்போது வரையிலும் ரூரல் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில், போலீஸ் எண்ணிக்கையும், கட்டமைப்பு வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளன. போக்குவரத்து நெரிசல், போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.
அதேபோன்று, மாநகராட்சிக்குள் அமைந்துள்ள விளாங்குறிச்சி உள்ளிட்ட சில பகுதிகள், மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் கோவில்பாளையம் போலீஸ் லிமிட் வசமுள்ளன. இதைச் சரி செய்து, மாநகராட்சி எல்லையிலுள்ள அனைத்துப்பகுதிகளையும், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்று, பல முறை தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பியும் அது கிடப்பிலேயே கிடக்கிறது. குற்றவாளிகள் தப்பிப்பதற்கும், நகருக்குள் எளிதில் ஊடுருவவும் இதுவும் மிக முக்கியக் காரணமாகவுள்ளது.
வாசகர் கருத்து (9)
மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையறிந்து செயல்படும் ஒரே பத்திரிக்கை
காசு பணம் துட்டு மணி மணி, வாழ்க கர்த்தரின் சீடர் விடியல் சார்
ஆயிரம் போலீஸ் ஸ்டேசன் அமைத்தாலும் அடிப்படை சரியில்லை என்றால் தீவிரவாதம் தலை தூக்கத்தான் செய்யும். திமுக ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் இது நடக்கிறது. முன்னர் கோவையில் குண்டு வெடித்ததும் திமுக ஆட்சிதான். இராஜீவை கொலை செய்ய விட்டு வேடிக்கை பார்த்ததும் திமுக ஆட்சியில்த்தான். இன்னும் திருந்தாமல் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பேட்டரிவாளனையும் கூட கட்டிப்பிடித்தது திமுக ஆட்சிதான். ஆண்டவா... திராவிடர்களால் தமிழகம் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ... ஆண்டவா... பிரதமர் மோடி வேறு இதுகளை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பார்... மக்களே வீதிக்கு வருவார்கள் என்றுதான் நினைக்கிறேன்...
ஏதோ ஒரு வகையில் காசு பணம் துட்டு மணி வருவதா இருந்தா போதும்
0